எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
பொதுவாகவே வாழ்ந்து மறைந்த சரித்திர நாயகர்களின் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க வேண்டும் என்ற ஆசை அக்கால திரைக்கலைஞர்கள் மத்தியிலும், இக்கால திரைக்கலைஞர்கள் மத்தியிலும், இருந்து வருவதென்பது இயல்பான ஒன்றே. “பொன்னியின் செல்வன்” கதையை திரைப்படமாக எடுத்து, அதில் வந்தியத் தேவனாக நடிக்க வேண்டும் என்ற ஆசை மறைந்த எம் ஜி ஆரிடமும், நடிகர் கமல்ஹாசனிடமும் இருந்து பின் அது அவர்களால் கைவிடப்பட்ட ஒன்று.
“மருதநாயகம்” என்ற ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க திரைப்படத்தை எடுக்க ஆரம்பித்து, அதை இன்றுவரை எடுத்து முடிக்க முடியாமல் ஒரு கனவுத் திட்டமாக நடிகர் கமல்ஹாசன் கையில் வைத்திருப்பதும் அனைவரும் அறிந்ததே. அதுபோல்தான் சென்னை மவுண்ட் ரோட்டில் அமைந்திருந்த ஆனந்த் திரையரத்தின் உரிமையாளரான ஜி உமாபதி, தான் திரைப்படம் என்று ஒன்று தயாரித்தால் அது ராஜ ராஜ சோழனின் வரலாறாகத்தான் இருக்கும். அதை இயக்குவது இயக்குநர் ஏ பி நாகராஜனாகத்தான் இருப்பார் என சொல்லியிருந்தார்.
கல்கியின் “பொன்னியின் செல்வன்” கதையை படித்த நாளிலிருந்து ராஜ ராஜ சோழன் மீது உமாபதிக்கு தீராக் காதல். தமிழகத்தின் முதல் 70 எம் எம் தியேட்டரான ஆனந்த் தியேட்டரை சென்னை மவுண்ட் ரோட்டில் கட்டிய உமாபதி, தமிழகத்தின் முதல் சினிமாஸ்கோப் திரைப்படமாக “ராஜ ராஜ சோழன்” எனும் திரைக்காவியத்தை தயாரிக்கவும் திட்டமிட்டிருந்தார். இதற்காக அரு.ராமனாதன் எழுதி, டி கே சண்முகம் குழுவினர் நாடகமாக நடத்தி வந்த ஸ்கிரிப்ட் வாங்கப்பட்டு, அதற்கு திரைக்கதை, வசனம் எழுதி, ஒரு பாடலை நடிகர் திலகம் சிவாஜியை பாட வைத்தும் படத்தை இயக்கியிருந்தார் இயக்குநர் ஏ பி நாகராஜன்.
கேமராவில் சினிமாஸ்கோப் லென்ஸ் பொருத்தி படம் பிடிக்கப்பட்டது. சாதாரண புரொஜக்டர்களில் உள்ள லென்ஸை மாற்றிவிட்டு சினிமாஸ்கோப் லென்ஸை பொருத்தினால் சாதாரண தியேட்டர்களிலும் சினிமாஸ்கோப் படத்தை திரையிடலாம் என்று விநியோகஸ்தர்களுக்கும், தியேட்டர் உரிமையாளர்களுக்கும் விளக்கினார் படத்தின் தயாரிப்பாளரான ஜி உமாபதி. படத்தின் ஒவ்வொரு பிரதியோடும் இரண்டு சினிமாஸ்கோப் லென்சுகளை தருவதாகவும் உறுதியளித்து படத்தை வெளியிட்டார்.
சிவாஜிகணேசன், ஆர் முத்துராமன், சிவகுமார், எம் என் நம்பியார், ஆர் எஸ் மனோகர், டி ஆர் மகாலிங்கம், எஸ் வி சகஸ்ரநாமம், சீர்காழி எஸ் கோவிந்தராஜன், லட்சுமி, விஜயகுமாரி, எஸ் வரலக்ஷ்மி, மனோரமா, புஷ்பலதா, சி ஐ டி சகுந்தலா என ஒரு பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்து, தமிழில் வெளிவந்த முதல் சினிமாஸ்கோப் திரைப்படம் என்ற பெருமை கூறும் திரைப்படமாக ரசிகர்களால் இன்றும் போற்றப்பட்டு வருகின்றது.