வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் | ‛96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி |
இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் சமீபத்தில் வரலாற்று பேண்டஸி படமாக வெளியானது 'கங்குவா'. ஆனால் படம் வெளியான முதல் நாளில் இருந்தே இந்த படம் கடுமையான எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்தது. படத்தின் மோசமான கதையம்சம் ஒரு பக்கமும் இரைச்சலுடன் ரசிகர்களின் காதுகளை பதம் பார்த்த பின்னணி இசை ஒரு பக்கமும் என இந்த இரண்டு குறைகள் அதிகம் பேரால் பேசப்பட்டு வருகின்றன.
இந்த படத்தில் நடிப்பதற்காக நீண்ட நாட்கள் காத்திருந்தார் சூர்யா. குறிப்பாக இயக்குநர் சிவா ரஜினியை வைத்து 'அண்ணாத்த' படத்தை இயக்குவதற்கு முன்பே இந்த படத்தை ஆரம்பிப்பதாக இருந்தது. ஆனால் ரஜினி கேட்டுக் கொண்டதால் விட்டுக்கொடுத்தார் சூர்யா. 'அண்ணாத்த' படத்தின் தோல்விக்கு பிறகும் கூட சிவாவின் மீதான நம்பிக்கையில் இந்த படத்தில் நடித்தார். படம் இந்த அளவுக்கு கடுமையாக விமர்சிக்கப்படுவதற்கு, படம் வெளியாவதற்கு முன்பே தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தரப்பில் இருந்து கொடுக்கப்பட்ட மிகப்பெரிய பில்டப்புகள் தான் காரணமாக அமைந்துவிட்டன. குறிப்பாக 2000 கோடி வசூலிக்கும் என்கிற பேச்சு அப்படியே எதிராக திரும்பிவிட்டது.
இந்த நிலையில் ரசிகர்கள் பலரும் சூர்யாவின் தவறான முடிவு குறித்து சோசியல் மீடியாவில் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். அதாவது சூர்யாவின் திரையுலக பயணத்தில் ஆரம்ப காலத்தில் மிக முக்கியமான வெற்றிகளை கொடுத்தவர்கள் என்றால் இயக்குனர்கள் பாலா, கவுதம் மேனன், ஏ.ஆர் முருகதாஸ் மற்றும் ஹரி என்கிற இந்த நான்கு இயக்குனர்கள் தான். இவர்களுடன் சூர்யா இணைந்து பணியாற்றி வெளிவந்த படங்கள் எல்லாமே இப்போதும் ரசிகர்கள் விரும்பி பார்க்கக் கூடியவை.
அதிலும் சூர்யா கடைசியாக கவுதம் மேனன் உடன் இணைந்து பணியாற்றிய 'வாரணம் ஆயிரம்', பாலா இயக்கத்தில் நடித்த 'பிதாமகன்' ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றன. அதே சமயம் ஹரி இயக்கத்தில் ஏற்கனவே 'சிங்கம், சிங்கம் 2' என தொடர்ந்து சூப்பர்ஹிட் படங்கள் சூர்யாவுக்கு கிடைத்திருந்தாலும் 'சிங்கம் 3' பெரிய அளவில் போகாததால் இயக்குனர் ஹரியிடமிருந்து ஒதுங்கினார் சூர்யா. அதேபோல கஜினி என்கிற மிகப்பெரிய ஹிட்டை ஏ.ஆர் முருகதாஸ் இடமிருந்து பெற்ற சூர்யா, அதற்கடுத்து அவரது இயக்கத்தில் நடித்த 'ஏழாம் அறிவு' படம் சரியாக போகவில்லை என்றாலும் கூட இந்த இரண்டு படங்களுமே இப்போது கூட ரசிகர்களால் ரசித்துப் பார்க்கும் விதமாக தான் இருக்கிறது. அதனால் தான் அடிக்கடி தொலைக்காட்சியிலும் இந்த படங்கள் ஒளிபரப்பாகின்றன.
ஆனால் கவுதம் மேனனின் 'துருவ நட்சத்திரம்' படத்திலும் பாலாவுடன் 'வணங்கான்' படத்திலும் இயக்குனர் ஹரியிடம் 'அருவா' படத்திலும் மற்றும் சில காரணங்களால் ஏ.ஆர் முருகதாஸிடமும் இருந்து ஏதேதோ காரணங்களை கூறி அப்படியே ஒதுங்கி விட்டார் சூர்யா. அதுமட்டுமல்ல 'சூரரை போற்று' என்கிற மிகப்பெரிய ஹிட் படத்தை கொடுத்த சுதா கொங்கராவின் டைரக்சனில் அடுத்து ஒரு படம் நடிப்பதாக கிட்டத்தட்ட உறுதியான நிலையில் அந்த படத்தையும் கைவிட்டார். அதற்கு அந்தப்படத்தின் ஹிந்தி ரீமேக்கின் தோல்வி ஒரு காரணமாக சொல்லப்பட்டது. இப்படி தனக்கு வெற்றி கொடுத்தவர்களுக்கு இன்னும் ஒரு வாய்ப்பு கொடுக்காமல், அவர்களிடம் எல்லாம் கண்டிராத எந்த நம்பிக்கையை இயக்குனர் சிவாவிடமும் அவர் சொன்ன கதையிலும் சூர்யா வைத்தார் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது என்றே ரசிகர்கள் கூறுகின்றனர்.
இனிவரும் நாட்களிலாவது இந்த இயக்குனர்களுடனான தனது கருத்து வேறுபாடுகளை மறந்து தன்னை மேலே ஏற்றிவிட்ட மேற்கூறிய நான்கு இயக்குனர்களிடமும் சூர்யா சீரான இடைவெளிகளில் படங்களில் நடிக்க வேண்டும். அப்போதுதான் அவர் மீண்டும் இழந்த தன்னுடைய பார்முக்கு திரும்ப முடியும் என்றும் பலர் கூறி வருகின்றனர்.