வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் | ‛96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி |
தமிழ் சினிமாவில் இப்போதும் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. சில பல வருடங்களுக்கு முன்பு முன்னணி நடிகையாக இருந்தவர் ஜோதிகா. கடந்த இரண்டு நாட்களாக இவர்கள் இருவரும்தான் மீடியாக்களின் செய்திகளில் அதிகமாக இடம் பெற்ற சினிமா கலைஞர்கள்.
'இன்புளூயன்சர்கள்' ஆதிக்கம்
தமிழ் சினிமாவில் முன்பு வரை ஒரு படம் என்பது நன்றாக இருந்தால் விமர்சகர்களால் பாராட்டப்பட்டு, ரசிகர்களால் வரவேற்கப்பட்டு நன்றாக ஓடும். ஆனால், சமூக வலைத்தளங்கள் வந்த பிறகு மிகச் சுமாரான படத்தைக் கூட 'இன்புளூயன்சர்கள்' என அழைக்கப்படும், எக்ஸ் தளங்களில் அதிகமான பாலோயர்களை வைத்திருப்பவர்கள் மூலம் பொய்யாக விளம்பரப்படுத்தப்பட்டது.
அந்தப் படத்தைப் பார்த்தவர்கள் பாராட்டினார்கள், இவர் பாராட்டினார், அவர் பாராட்டினார் என படம் வெளிவருவதற்கு முன்பே ஒரு பில்டப்பை ஆரம்பித்து வைத்தார்கள். அதை நம்பி (?) படத்தை வாங்கியவர்களும், படத்தைப் பார்த்தவர்களும் நஷ்டப்பட்டுப் போனார்கள். அது இன்று வரை தொடர்கிறது.
பாலிவுட் ஸ்டைல் பப்ளிசிட்டி
அதே சமயம் தற்போது மும்பை ஸ்டைலில் இலவசமான ஒரு புரமோஷன் நடக்க ஆரம்பித்துள்ளது. சமீபத்தில் கூட அது எப்படியான ஒன்று என்பதை நடிகை சாய் பல்லவி ஒரு வீடியோ பேட்டியில் கூறியிருந்தார்.
வேண்டுமென்றே ஒரு சர்ச்சையை ஆரம்பித்து வைப்பது. அப்படி ஆரம்பித்தால் அதை இணையதளங்கள், டிவி சேனல்கள், நாளிதழ்கள் செய்தியாக்கி பரபரப்பை ஏற்படுத்துவார்கள். சமூக வலைத்தளங்கள், யு டியுப் சேனல்கள் என அவற்றிலும் அந்த 'இன்புளூயன்சர்கள்' என அழைக்கப்படுபவர்களுக்கு கொடுக்க வேண்டிய 'கிப்ட்'களைக் கொடுத்து எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றும் விதத்தில் எதையெதையோ எழுத வைப்பார்கள், பேச வைப்பார்கள். இதுதான் மும்பை ஸ்டைல் புரமோஷன்.
நயன்தாரா பற்ற வைத்த தீ
கடந்த இரண்டு நாட்களாக இது தமிழ் சினிமா வட்டாரங்களில் நடந்துள்ளது என்பதை ரசிகர்கள் புரிந்து கொள்ளலாம். நடிகை நயன்தாராவின் டாகுமென்டரி 'நயன்தாரா - பியான்ட் த பேரி டேல்' இன்று ஓடிடி தளத்தில் வெளியானது. கடந்த வாரங்களில் வெளிவந்த அதன் டிரைலர்களுக்குப் பெரிய வரவேற்பில்லை. எப்படியாவது அதைப் பற்றி மக்களிடம் பேச வைக்க வேண்டும். அப்படியான ஒரு எண்ணத்தில்தான் இரு தினங்களுக்கு முன்பு நயன்தாரா அறிக்கை வெளியிட்டாரோ என்ற சந்தேகம் பலருக்கு எழுந்துள்ளது.
இரண்டு வருடங்களாக வெளியிடப்படாத டாகுமென்டரியை, அது வெளியாகும் இரண்டு தினங்களுக்கு முன்பு தன் அறிக்கையால் சர்ச்சையை ஏற்படுத்தினார் நயன்தாரா. சமூக வலைத்தளங்கள், யு டியூப் சேனல்கள், நாளிதழ்கள், டிவி சேனல்கள், இணையதளங்கள் என பலவற்றிலும் நடிகர் தனுஷை விமர்சித்து அவர் வெளியிட்ட அந்த அறிக்கை பரபரப்பாக செய்திகளில் இடம் பெற்றது. ஆனால், அந்த அறிக்கை வெளியாகி இரண்டு நாட்கள் ஆன பின்னும் தனுஷ் தரப்பு அதை கண்டுகொள்ளவேயில்லை. அவர்களிடமிருந்து எந்த பதில் அறிக்கையும் இதுவரை வரவில்லை.
தனுஷ் குறித்து விமர்சித்து தன் இன்ஸ்டாவில் வைத்திருந்த சில வீடியோ பதிவுகளையும் ஒரே நாளில் நீக்கினார் நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன். நேற்று பத்திரிகையாளர்களுக்குத் திரையிடப்பட்ட அந்த டாகுமென்டரிக்குப் பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. இன்று ஓடிடி தளத்தில் அதைப் பார்த்த ரசிகர்களிடத்திலும் அதுவே எதிரொலித்தது.
கங்குவா - ஜோதிகா பற்ற வைத்த நெருப்பு
அடுத்த சர்ச்சை 'கங்குவா' படம் பற்றியது. அப்படம் வெளிவந்த பின் கடுமையான விமர்சனங்கள் வெளியானது. படத்தின் முதல் அரை மணி நேரம் கொடுமையானது, கடும் இரைச்சல் என ரசிகர்களே சமூக வலைத்தளங்களில் விமர்சித்திருந்தார்கள்.
படம் வெளியான இரண்டு தினங்களில் நயன்தாராவின் அறிக்கை வந்ததால் 'கங்குவா' படத்தைப் பற்றி ரசிகர்கள் மறந்து போனார்கள். சமூக வலைத்தளங்களில் 'கங்குவா' பேச்சுக்கள், கமெண்ட்டுகள் காணாமல் போய் அந்த இடத்தை நயன்தாரா - தனுஷ் விவகாரம் பிடித்துக் கொண்டது.
அது 'கங்குவா' படக்குழுவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருக்கலாம். உடனடியாக மறுநாள், அதாவது நேற்று காலை சூர்யாவின் மனைவி ஜோதிகா 'கங்குவா' படம் பற்றி அவரது கருத்தை இன்ஸ்டா தளத்தில் பதிவிடுகிறார். தாங்களும் ஒரு நேர்மையான கருத்து சொல்பவர்கள் என்பதைக் காட்டிக் கொள்ளும் விதமாக ரசிகர்கள் குறிப்பிட்ட அந்த முதல் அரை மணி நேரம், இரைச்சல் ஆகியவற்றை அவரும் ஒரு குறையாக சுட்டிக் காட்டுகிறார்.
அடுத்து, அப்படம் குறித்து வேண்டுமென்றே விமர்சிக்கிறார்கள் என விமர்சகர்களையும், படத்தைப் பற்றி கருத்து சொல்பவர்களையும் குறிப்பிட்டு பதிவு போடுகிறார். நேற்று பல ஊடகங்கள் ஜோதிகாவின் கருத்தை செய்தியாக்கின. நயன்தாரா - தனுஷ் சர்ச்சையால் காணாமல் போக இருந்த 'கங்குவா'வை தனது பதிவால் மீண்டும் கொண்டு வர முயற்சித்தார் ஜோதிகா என்று மறுபக்கம் பேசப்பட்டது.
அறம் இல்லாத ரசிகர்கள்
ஒரு படத்தைப் பார்த்துவிட்டு விமர்சிக்கும் உரிமை ரசிகர்களுக்கு உண்டு. இன்றைய சமூக ஊடக காலத்தில் எந்த ஒரு அறமும் ரசிகர்களால் பின்பற்றப்படுவதில்லை. அதற்குக் காரணம் அந்த நடிகர்களே. சினிமா ஹீரோக்களைக் கொண்டாடும் ரசிகர்களை அந்த ஹீரோக்கள் நெறிப்படுத்துவதில்லை. அவர்களுக்கு சமூக வலைத்தளங்களில் எப்படி செயல்பட வேண்டும் என்று சொல்லித் தருவதில்லை.
கெட்ட, கெட்ட வார்த்தைகள், ஆபாச வார்த்தைகள், அவர்களது குடும்பத்தைப் பற்றிய பேச்சுக்கள் என வரம்பு மீறி செயல்படுவது அந்த நடிகர்களின் ரசிகர்கள்தான். நயன்தாரா, தனுஷ் சர்ச்சை விஷயத்திலும் அதைப் பார்க்க முடிந்தது. நயன்தாராவையும், அவரது கணவர் விக்னேஷ் சிவனையும் தனுஷ் ரசிகர்கள் மிக மோசமான கமெண்ட்டுகளால் கடந்த இரண்டு நாட்களாக காயப்படுத்தி வருகிறார்கள்.
சூரரைப் போற்று, ஜெய் பீம்-ஐ கொண்டாடவில்லையா
'கங்குவா' படம் நன்றாக இருந்தால் அது நன்றாக ஓடப் போகிறது. சூர்யா இதற்கு முன்பு நடித்து ஓடிடியில் வெளிவந்த 'சூரரைப் போற்று, ஜெய் பீம்' போன்ற நல்ல படங்களை பாராட்டித் தள்ளியவர்கள் இதே ரசிகர்கள்தான். அப்போது ரசிகர்களை, விமர்சகர்களை குற்றம் சொல்லாதவர்கள் இப்போது வந்து குற்றம் சொல்வது ஏன் என்றும் கேள்வி எழுகிறது.
பாராட்டுக்களை ஏற்கும் அளவிற்கு விமர்சனங்களையும் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இத்தனை வருடங்களாக சினிமாவில் இருந்தும் வரவில்லையா என்று பலர் கேள்வி எழுப்புகிறார்கள்.
'புரமோஷன்' என்ற பெயரில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதை விட்டுவிட்டு கருத்துள்ள படங்களைக் கொடுக்க முன் வாருங்கள். சினிமா ரசிகர்கள் உங்களைக் கொண்டாடுவார்கள். அது போல தேவையற்ற கருத்துக்களைப் பேசுவதையும் முக்கியமாகத் தவிருங்கள்.