ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
மலையாள திரையுலகில் கடந்த 2017ல் பிரபல நடிகை ஒருவர் கடத்தப்பட்டு காரிலேயே பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. படப்பிடிப்பில் பணிபுரிந்த பணியாளர்கள் சிலருக்கும் இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதன் பின்னணியில் பிரபல நடிகர் திலீப் செயல்பட்டார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து மலையாள திரையுலகில் பணியாற்றும் நடிகைகள் உள்ளிட்ட பல பெண்கள் தாங்கள் இது போன்று பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாகவும், சம ஊதியம் மறுக்கப்படுவதாகவும், படப்பிடிப்பு தளங்களில் பாதுகாப்பு இல்லை என்பது உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளை அடுக்கி, இது குறித்து கேரள அரசு விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். குறிப்பாக நடிகைகள் ரேவதி, பார்வதி, ரம்யா நம்பீசன், ரீமா கல்லிங்கல் உள்ளிட்ட சில நடிகைகள் ஒன்று சேர்ந்து உருவாக்கிய சினிமா பெண்கள் நல அமைப்பு இந்த விஷயத்தில் கேரள அரசுக்கு தீவிர அழுத்தம் கொடுத்தது.
நீதிபதி ஹேமா கமிஷன் விசாரணை
இதனைத் தொடர்ந்து 2017ல் நீதிபதி ஹேமா தலைமையில் ஒரு விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. கடந்த ஆறு வருடங்களுக்கு மேலாக இது குறித்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பே இந்த அறிக்கை நிறைவு பெற்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் கேரள அரசு அதை வெளியிடாமல் நிலுவையில் வைத்திருந்தது. இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி ஹேமா கமிஷன் அறிக்கை வெளியிடப்படும் என கேரள அரசால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அறிக்கை வெளியீடு
ஆனால் நடிகை ரஞ்சனி அந்த அறிக்கையில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை அந்த விசாரணையில் கலந்து கொண்ட தன்னை போன்ற ஒவ்வொருவரும் தெரிந்து கொள்வதற்கு உரிமை இருக்கிறது என்றும், அதனால் தங்களுக்கு அறிக்கையின் நகல் வழங்கப்பட வேண்டும் என்றும் அதன்பிறகே அந்த அறிக்கையை வெளியிட வேண்டும் என நீதிமன்றத்தில் தடை கேட்டு மனு செய்தார். இதனால் இரண்டு நாட்கள் தாமதம் ஏற்பட்ட நிலையில் இன்று (ஆக-19) கேரள அரசு இந்த ஹேமா கமிஷன் அறிக்கையை வெளியிட்டுள்ளது. நீதிபதி ஹேமா கமிஷன் விசாரணையில் மலையாள திரையுலகில் நடைபெற்று வரும் சில அதிர்ச்சிகரமான தகவல்கள் இந்த அறிக்கை மூலம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அதிர்ச்சி தகவல்கள்
குறிப்பாக மலையாள திரையுலகில் கேஸ்டிங் கவுச் எனப்படும் வாய்ப்பு தருவதற்காக படுக்கைக்கு அழைக்கும் பாலியல் ரீதியான அத்துமீறலில் ஈடுபடும் கலாச்சாரம் ஆழமாக வேரூன்றி உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தன்னிடம் அத்துமீறலில் ஈடுபட்ட நடிகர் ஒருவருடன், கட்டிப்பிடித்து நடிக்கும் காட்சியை, 17 முறை கட்டாயப்படுத்தி எடுத்ததாக நடிகை ஒருவர் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்ல படப்பிடிப்பு தளங்களில் மது மற்றும் போதைப்பொருள்களை தடை செய்தல், பெண்களுக்கான பாதுகாப்பான தங்குமிடத்தை உறுதி செய்தல், படப்பிடிப்பில் பணியாற்றும் பணியாளர்களின் பின்னணி குறித்த சோதனையை மேற்கொள்ளல், படப்பிடிப்பு தளங்களில் பெண்களை மரியாதையுடன் நடத்துதல், கொச்சையான வார்த்தைகளை பயன்படுத்துவதை அறவே ஒழித்தல், பெண்களுக்கும் சம ஊதியத்தை உறுதி செய்தல் உள்ளிட்ட பல பரிந்துரைகளை இந்த ஹேமா கமிஷன் வழங்கியுள்ளது.
மலையாள திரையுலகில் பணியாற்றும் நடிகைகள், பெண் தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான நபர்களிடம் அவர்களது திரையுலக வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை விசாரித்து அதன் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.