கடந்த 1989ம் ஆண்டு ஜூன் 16ல் நடிகர் ராமராஜன், கனகா, கவுண்டமணி, செந்தில், கோவை சரளா, வாகை சந்திரசேகரன், வடிவுக்கரசி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே சேர்ந்து நடித்து வெளியான படம் ‛கரகாட்டக்காரன்'. இசையமைப்பாளரும், பாடகருமான கங்கை அமரன் இயக்கிய இப்படம் தமிழ் சினிமாவில் பெரு வெற்றி பெற்ற ஒரு படமாக பார்க்கப்படுகிறது.
கரகாட்ட கலைஞர்களின் வாழ்வியலை பேசிய கரகாட்டக்காரன் படம் வெளியாகி இன்றோடு 35 ஆண்டுகள் ஆகிறது. நடிகர் ராமராஜனின் வாழ்வில் திருப்புமுனை தந்த இந்த கரகாட்டக்காரன் படத்தில், கவுண்டமணி, செந்தில், கோவை சரளாவின் காமெடிகளும் பெரிதும் பேசப்பட்டன. குறிப்பாக வாழைப்பழ காமெடி, அந்த சொப்பன சுந்தரிய யாரு வச்சிருக்கா, போன்றவை எவர்கிளீன் காமெடியாக இன்றும் பார்ப்பவர்களை சிரிக்க வைக்கிறது.
அதேபோல், இளையராஜா இசையும் படத்தின் முக்கிய தூணாக அமைந்திருந்தது. ‛மாங்குயிலே பூங்குயிலே, இந்த மான் உந்தன் சொந்த மான்' பாடல்கள் இன்றும் ரசிகர்கள் மனதில் முனுமுனுக்கிறது. இந்த படம் மதுரையில் நடனா, நாட்டியா, நர்த்தனா தியேட்டரில் 425 நாட்களாக ஓடியது. இதனால் மகிழ்ச்சியில் திழைத்தார் ராமராஜன்.
ஆரம்பத்தில் டூரிங் டாக்கீஸ் டிக்கெட் கொடுப்பராக தன் வாழ்க்கையை தொடங்கிய ராமராஜன் இந்த படம் கொடுத்த வெற்றியால், அந்த தியேட்டரையே விலைக்கு வாங்கியது தனிக்கதை. இந்த திரைப்படம் ஜப்பான் மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளிலும் திரையிடப்பட்டது. இந்த படம் தமிழக அரசின் சிறப்பு விருதை 1989ம் ஆண்டு பெற்றது. 35 ஆண்டுகள் ஆனாலும், இன்னும் இப்படம் பேசப்படுவதற்கு படத்தில் நடித்த மற்றும் பணியாற்றிய ஒவ்வொருவருமே காரணமாக பார்க்கப்படுகிறது.