2025 தீபாவளி : 3 இளம் ஹீரோக்களின் போட்டி | சல்மான் கான் கமெண்ட்டுக்கு பதிலளிப்பாரா ஏஆர் முருகதாஸ் ? | காதலரைக் கரம் பிடிக்க 15 வருடங்கள் காத்திருந்த கீர்த்தி சுரேஷ் | தமிழ் இயக்குனர்களைக் கவர்ந்த நாகார்ஜுனா 'ஹேர்ஸ்டைல்' | ஓடிடியில் நேரடி படங்கள், வெப் தொடர்கள் அறிவிப்பு | நடிப்பில் விக்ரமை வெல்ல தொடர்ந்து போராடுவேன்: துருவ் விக்ரம் | அம்மாவின் பச்சை நிற கண்ணை பெற்ற அழகான மகள்: அக்ஷராவுக்கு கமல் பிறந்த நாள் வாழ்த்து | பிளாஷ்பேக்: கதை நாயகனாக முதல் படத்தில் தோற்ற எஸ்.எஸ்.ராஜேந்திரன் | நாற்று நட்டேன், செங்கல் சூளையில் வேலை செய்தேன்: அனுபமா பரமேஸ்வரன் | 35 நாளில் முடிந்த 'டூரிஸ்ட் பேமிலி' அபிஷன் படம் |
2023ம் ஆண்டு முடிய இன்னும் ஒன்றரை மாதங்களே உள்ளன. சினிமா வெளியீட்டைப் பொறுத்தவரையில் இன்னும் 7 வெள்ளிக்கிழமைகள் மட்டுமே உள்ளன. இன்று வெள்ளிக் கிழமை இரண்டே இரண்டு படங்கள் மட்டுமே வெளியாகிறது. அதற்கடுத்து நவம்பர் 24ம் தேதியிலும், டிசம்பர் 1ம் தேதியிலும் சில முக்கிய நடிகர்களின் படங்கள் வெளியாக உள்ளன.
நவம்பர் 24ம் தேதியில் விக்ரம் நடித்துள்ள 'துருவ நட்சத்திரம்', சந்தானம் நடித்துள்ள '80ஸ் பில்டப்', ரியோ ராஜ் நடித்துள்ள 'ஜோ' ஆகிய படங்களும் டிசம்பர் 1ம் தேதி நயன்தாரா நடித்துள்ள 'அன்னபூரணி', ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள 'பார்க்கிங்', ஆகிய படங்களும், டிசம்பர் மாதத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள 'சைரன்' படமும் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பருக்குள்ளாக மேலும் சில பல படங்கள் வெளியாகவும் வாய்ப்புள்ளது.
துருவ நட்சத்திரம்
நீண்ட காலமாக படமாக்கப்பட்டு வந்த 'துருவ நட்சத்திரம்' படத்தை எப்படியோ திரைக்குக் கொண்டு வர ஆயத்தமாகிவிட்டார்கள். கவுதம் மேனன், விக்ரம் கூட்டணியின் முதல் படம் இது. டிரைலருக்குக் கிடைத்துள்ள வரவேற்பைப் பார்க்கும் போது படத்திற்கும் அது போல கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
80ஸ் பில்டப்
சந்தானம் கதாநாயகனாக நடித்து கடைசியாக வெளிவந்த ஐந்து படங்களில் 'டிடி ரிட்டன்ஸ்' படம் மட்டுமே வசூலைக் கொடுத்தது. '80ஸ் பில்டப்' படத்தை 80 கால கட்டங்களில் நடக்கும் கதையாகப் படமாக்கியிருக்கிறார்கள். “குலேபகாவலி, ஜாக்பாட், கோஸ்டி' படங்களை இயக்கிய கல்யாண் இப்படத்தை இயக்கியிருக்கிறார். வழக்கம் போலவே இந்தப் படத்தையும் நகைச்சுவைப் படமாகத்தான் கொடுத்திருப்பார் என நம்பலாம்.
ஜோ
ரியோ ராஜ் கதாநாயகனாக அறிமுகமான 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு' படம் ஓரளவுக்கு வசூலைக் கொடுத்தது. அதன்பின் அவர் நடித்து வெளிவந்த 'பிளான் பண்ணி பண்ணணும், ப்ரோக்கன் ஸ்கிரிப்ட்' ஆகிய இரண்டு படங்களும் வந்ததும் தெரியவில்லை, போனதும் தெரியவில்லை. அவர் நடித்து அடுத்து வர உள்ள 'ஜோ' படம் ஒரு கல்லூரி காதல் கதையாக உருவாகியுள்ளது. படத்தைப் பார்த்தவர்கள் '96' படம் போல இந்தப் படமும் வரவேற்பு பெறும் என தெரிவித்துள்ளார்கள்.
அன்னபூரணி
நயன்தாரா முதன்மைக் கதாநாயகியாக நடித்து “அறம், கோலமாவு கோகிலா” ஆகிய படங்கள்தான் பெரிய வரவேற்பைப் பெற்றன. “ஐரா, கொலையுதிர் காலம், நெற்றிக் கண், ஓ 2, கனெக்ட்” ஆகிய படங்களுக்கு வரவேற்பும், விமர்சனங்களும் சரியாகக் கிடைக்கவில்லை. அந்தக் குறையை 'அன்னபூரணி' படம் போக்குமா என்பதுதான் கேள்வியாக உள்ளது. அறிமுக இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கியுள்ள படம். படத்தின் அறிமுக வீடியோ ஒரு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் படக்குழு இன்னும் அமைதியாகவே உள்ளது. எந்த ஒரு பரபரப்பையும் ஏற்படுத்தவில்லை.
பார்க்கிங்
அறிமுக இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண், இந்துஜா மற்றும் பலர் நடித்துள்ள படம் 'பார்க்கிங்'. நமது வாழ்வில் பலரும் சந்திக்கும் 'பார்க்கிங்' பிரச்சனைகளை மையமாக வைத்து எடுத்துள்ளார்கள். படத்தின் டீசரைப் பார்த்த போதே படத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஒரு ஆர்வம் ஏற்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் ஒரு இடத்தைப் பிடித்து தன்னை 'பார்க்கிங்' செய்ய வேண்டும் என ஆசைப்படும் ஹரிஷுக்கு இப்படம் அதைக் கொடுக்குமா என்பதற்கு இரண்டு வாரங்கள் காத்திருக்க வேண்டும்.
சைரன்
ஜெயம் ரவி முதல் முறையாக நடுத்தர வயதுக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் 'சைரன்'. படத்தின் டீசர் ஒரு அதிரடியான ஆக்ஷன் படமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 'பொன்னியின் செல்வன் 1' தவிர்த்து ஜெயம் ரவி நடித்து வெளிவந்த 'அகிலன், இறைவன்' இரண்டுமே தோல்வியடைந்தது. அதற்கு முன்பு 'டிக் டிக் டிக், அடங்க மறு, கோமாளி,' ஹாட்ரிக் வெற்றியைக் கொடுத்த ஜெயம் ரவிக்கு 'சைரன்' ஒலித்து மீண்டும் வெற்றிப் பாதையை ஏற்படுத்தித் தருமா ? என்பது சீக்கிரம் தெரிந்துவிடும்.
டிசம்பர் முதல் வாரம் வரையிலும் வர உள்ள சில படங்களைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. அதற்கடுத்து வர உள்ள படங்களின் அறிவிப்புகள் வரும் நாட்களில் வெளியாகலாம். இந்த 2023ல் இதுவரையில் வெளியான படங்களின் எண்ணிக்கை 200ஐக் கடந்துள்ளது. அது 250ஐத் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டை விடவும் அடுத்த ஆண்டில் பல முன்னணி நடிகர்களின் முக்கிய படங்கள் வெளியாக உள்ளதால் அடுத்த வருடத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.