மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா | சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை | சிவராஜ் குமாருக்கு பதிலாக விஷால் | விஜய் மகன் இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | 27 ஆண்டுகளுக்கு முந்தைய ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா விடாமுயற்சி? | 20வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய அனிகா சுரேந்திரன் | தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மலையாளத் திரையுலகில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் சித்திக். இவர் நேற்று முன்தினம் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் நேற்று (ஆக -8) சிகிச்சை பலனின்றி இவரது உயிர் பிரிந்தது. இதனால் அதிர்ச்சியும் சோகமும் அடைந்துள்ள மலையாள திரையுலகினரும் ரசிகர்களும் தங்களது வருத்தத்தையும் இரங்கல்களையும் தெரிவித்து வருகின்றனர்.
எண்பதுகளில் இயக்குனர் பாசிலிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் தான் சித்திக். அவருடன் கூடவே இன்னொரு உதவி இயக்குனராக பணியாற்றியவர் வில்லன் நடிகர் லால். பின்னர் இருவரும் 1986ல் இருந்து இரட்டை கதாசிரியர்களாக மாறி சில படங்களுக்கு கதை எழுதினார்கள். இவர்கள் கதை எழுதிய படங்கள் தொடர்ந்து ஹிட் ஆகவே, இருவரும் 1989ல் ராம்ஜி ராவ் ஸ்பீக்கிங் என்கிற படத்தின் மூலம் இயக்குனர்களாக மாறினார்கள்.
தொடர்ந்து காட்பாதர், வியட்நாம் காலனி என ஹிட் படங்களை இயக்கினார்கள். ஒரு கட்டத்தில் லாலுக்கு நடிப்பதற்கான வாய்ப்புகள் நிறைய தேடி வர ஆரம்பித்ததால் லால் நடிப்பு பக்கம் தீவிர கவனம் செலுத்த துவங்க சித்திக் மட்டும் தனியாக படங்களை இயக்க ஆரம்பித்தார். அப்படி அவர் இயக்கிய ஹிட்லர், ஃபிரண்ட்ஸ் ஆகிய படங்கள் மிகப்பெரிய அளவில் ஹிட்டாகின.மேலும் தமிழிலும் இயக்குனர் சித்திக்கிற்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
அந்த வகையில் மலையாளத்தில் தனது இயக்கத்தில் வெற்றி பெற்ற ஃபிரண்ட்ஸ் படத்தை விஜய், சூர்யா இருவரையும் வைத்து அதே பெயரில் ரீமேக் செய்து இயக்கி தமிழிலும் முதல் வெற்றியைப் பெற்றார் சித்திக். அடுத்ததாக விஜயகாந்த் நடித்த எங்கள் அண்ணா, மீண்டும் விஜய் நடித்த காவலன் என தொடர்ந்து தமிழிலும் வெற்றி படங்களை கொடுத்தார். குறிப்பாக மலையாளத்தில் இவர் இயக்கி ஹிட் ஆன பாடிகார்ட் திரைப்படம் தமிழில் காவலன் ஆக மாறியதுடன் தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டது.
இதில் ஹிந்தி ரீமேக்கை சல்மான்கானை வைத்து பாடிகார்ட் என்கிற பெயரில் சித்திக்கே இயக்கி ஹிந்தியிலும் தனது வெற்றி கொடியை ஏற்றினார். சித்திக் இயக்கத்தில் வெளியான பெரும்பாலான படங்கள் தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாது ஹிந்தியிலும் ரீமேக் ஆகும் அளவுக்கு அனைத்து மொழிகளுக்கும் பொருந்தும் கதை அம்சத்துடன் இருக்கும் என்பது தான் ஹைலைட்.
கடைசியாக தமிழில் 2018ல் பாஸ்கர் ஒரு ராஸ்கல் என ஏற்கனவே மலையாளத்தில் மம்முட்டியை வைத்து தான் இயக்கிய படத்தை இங்கே தமிழில் அரவிந்த்சாமியை வைத்து ரீமேக் செய்தார். அதை தொடர்ந்து 2020ல் மோகன்லால் நடித்த பிக் பிரதர் என்கிற படத்தை இயக்கினார் சித்திக். அதன் பிறகு அவரது டைரக்சனில் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்க சரியான நேரத்தை எதிர்பார்த்து வந்த சமயத்தில் தான் இப்படி எதிர்பாராமல் மாரடைப்பால் காலமாகி உள்ளார் இயக்குனர் சித்திக்.
இவரது டைரக்ஷனில் மம்முட்டி அதிக படங்களில் நடித்துள்ளதுடன் அதன் மூலம் கமர்சியலாக தனது மார்க்கெட்டையும் உயர்த்திக்கொண்டார். அதேபோல இரட்டை இயக்குனர்களாக பணியாற்றிய போது நடிகர் லால் இவரிடம் இருந்து பிரிந்து நடிகராக மாறினாலும். அவரை ஒரு தயாரிப்பாளராக மாற்றி அவரது தயாரிப்பில் படங்களை இயக்கினார் சித்திக். அது மட்டுமல்ல தொடர்ந்து அவருக்கு தனது படங்களிலும் நல்ல கதாபாத்திரங்களை கொடுத்து கடைசி வரை சுமூகமான நட்பை பேணி வந்தார் இயக்குனர் சித்திக்.
படம் பார்க்க வரும் ரசிகர்களை இரண்டு மணி நேரமும் ரசித்து பார்க்க செய்யும் வித்தை தெரிந்த சித்திக், தனது படங்களின் ரீமேக் உரிமைகள் மூலமாகவே அதிக அளவில் பொருளீட்டவும் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இயக்குனர் சித்திக்கின் மறைவு மலையாள திரையுலகுக்கு மட்டுமல்ல, தென்னிந்திய திரையுலகிற்கே. பேரிழப்பு என்று தான் சொல்ல வேணடும்.