மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா | சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை | சிவராஜ் குமாருக்கு பதிலாக விஷால் | விஜய் மகன் இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | 27 ஆண்டுகளுக்கு முந்தைய ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா விடாமுயற்சி? | 20வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய அனிகா சுரேந்திரன் | தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கலைந்த முடி, கருப்பு நிறம் சகிதமாய் கலையுலகில் கால் பதித்து, கனவுலக நாயகர்களின் இலக்கணத்திற்கு புது வடிவம் தந்த “புதுக்கவிதை” சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் 72வது பிறந்த தினம் இன்று. அவரை பற்றிய ஹைலைட்ஸ்....
* வேகமான நடை, விதவிதமான ஸ்டைல், வித்தியாசமான வசன உச்சரிப்பு, வியக்க வைக்கும் நடிப்பு, விறுவிறுப்பான சண்டை என இந்த விந்தை மனிதரின் சிறப்புகள் தமிழ் திரை ரசிகர்களின் சிந்தையில் ஆழமாக பதிந்த ஒன்று.
* ஆன்மிகத்தின் ஆழம் அறிந்த இந்த அபூர்வ திரை நாயகன், 1950, டிசம்பர் 12ஆம் தேதி, கர்நாடக மாநிலம் பெங்களுருவில் பிறந்தார்.
* ராணோஜி ராவ், ராம்பாய் தம்பதியருக்கு 3வது மகனாக பிறந்தார். இவரது இயற்பெயர் சிவாஜிராவ் கெய்க்வாட்.
* இவரது தந்தை கர்நாடக காவல்துறையில் காவலராக பணிபுரிந்தவர். பால்ய பருவத்திலேயே தனது தாயை இழந்த ரஜினிகாந்த், தனது அண்ணன் அண்ணியின் பராமரிப்பில் வளர்ந்து வந்தார்.
* ஸ்ரீராமகிருஷ்ணா மடத்துப் பள்ளியான “ஆச்சார்யா பாடசாலை”யில் தான் தனது எஸ்எஸ்எல்சி பள்ளிப்படிப்பை படித்தார்.
* மெடிடேஷன், பிராணாயாமம் போன்ற மூச்சுப் பயிற்சி எல்லாம் இந்தப் பள்ளியில் கற்று, பக்தி அனுபவங்கள் கிடைக்கப் பெற்றார்.
* சிவாஜிராவ் என்ற மனிதருக்குள் ஒளிந்திருந்த நடிகரை முதன் முதலில் அடையாளம் கண்டது இவரது நண்பர் ராஜ்பகதூர்.
* சினிமாவிற்கு வருவதற்கு முன் ஆபீஸ் ப்யூனாக, மூட்டை தூக்கும் தொழிலாளியாக, தச்சுப் பட்டறை தொழிலாளியாக பணிபுரிந்துள்ளார் ரஜினி.
* பின்னர் கர்நாடகா போக்குவரத்துக் கழகத்தில் சிவாஜி நகர், சாம்ராஜ் பேட்டையை இணைக்கும் 134 எண் கொண்ட பேருந்தில் கண்டக்டராக பணிபுரிந்தார்.
* நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் தமிழ்நாடு அரசு திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து, நடிப்புத் துறையில் பயிற்சி பெற்றார்.
* அங்கு கே பாலசந்தரின் பார்வை இவர் மீது பட 1975ல் அவரது இயக்கத்தில் வெளிவந்த “அபூர்வ ராகங்கள்” படத்தில் நடிகராக அறிமுகமானார்.
* சிவாஜிராவ் என்ற இவரது இயற்பெயரையும் சினிமாவிற்காக ரஜினிகாந்த் என பெயர் மாற்றம் செய்தார் பாலசந்தர்.
* “பைரவி வீடு இதுதானா?”, “நான் பைரவியின் புருஷன்” என்று தனது நண்பர் கமல்ஹாசனிடம் பேசிய வசனமே, ரஜினி திரைப்படத்தில் பேசிய முதல் வசனம்.
* “மூன்று முடிச்சு”, “அவர்கள்”, “16 வயதினிலே”, “ஆடு புலி ஆட்டம்”, “காயத்ரி” என ஆரம்ப காலங்களில் தொடர்ந்து வில்லனாக நடித்தார் ரஜினி.
* முதன் முதலில் குணச்சித்திர வேடமேற்று இவர் நடித்த திரைப்படம் தான்; “புவனா ஒரு கேள்விக்குறி?”.
* “பைரவி வீடு இதுதானா?” என்று ரஜினி திரையில் பேசிய முதல் வசனத்தின் முதல் வார்த்தை “பைரவி” தான் ரஜினி கதாநாயகனாக நடித்து வெளிவந்த முதல் படம்.
* தமிழ் திரையுலகின் ஆளுமை இயக்குநர்களில் ஒருவர் என அறியப்படும் இயக்குநர் மகேந்திரனின் முதல் கதாநாயகனும் இவரே. படம் “முள்ளும் மலரும்”.
* ரஜினிகாந்த் இரட்டை வேடமேற்று நடித்த முதல் திரைப்படமும் இயக்குநர் மகேந்திரனின் “ஜானி” திரைப்படமே.
* “ராஜ ராஜ சோழன்” திரைப்படத்திற்குப் பின் சினிமாஸ்கோப்பில் உருவான முதல் சமூக திரைப்படம், ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த “காளி”.
* ரஜினி நடிப்பில் வந்த முதல் முழுநீள நகைச்சுவை திரைப்படம் “தில்லு முல்லு”.
* சிவாஜியின் ரசிகரான நடிகர் ரஜினிகாந்த், திரைத்துறைக்கு வருவதற்கு முன் அவரின் மனம் கவர்ந்த நடிகராக இருந்தவர் நடிகர் நாகேஷ்.
* தனது நண்பரும், நடிகருமான கமல்ஹாசனோடு இணைந்து ஏறக்குறைய 18 திரைப்படங்கள் வரை நடித்திருக்கின்றார்.
* எம்ஜிஆருக்குப் பின் “சத்யா மூவீஸ்” தயாரிப்பில் அதிக படங்களில் நடித்த நடிகர் ரஜினிகாந்த். “இராணுவவீரன்” முதல் “பாட்ஷா” வரை 6 படங்கள் நடித்தார்.
* ரஜினியின் “சூப்பர் ஸ்டார்” பட்டத்தை உறுதி செய்த படமாக வெளிவந்த படம்தான் “முரட்டுக்காளை”. ஏவிஎம் நிறுவனத்திற்காக ரஜினி நடித்த முதல் படமும் இதுவே.
* ரஜினி கதை திரைக்கதை எழுதி தயாரித்த முதல் திரைப்படம் “வள்ளி”.
* 1983ல் “அந்தா கானூன்” என்ற ஒரு வெற்றிப்படத்தின் மூலம் தனது பாலிவுட் கலையுலகப் பிரவேசத்தை துவக்கினார் ரஜினி.
* ரஜினி நடித்த ஒரே ஹாலிவுட் திரைப்படம் “ப்ளட் ஸ்டோன்”.
* இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினி நடித்த “பாட்ஷா” திரைப்படம் தான் அவரது அரசியல் பார்வையை உலகுக்கு காட்டியது.
* தமிழக்கத்தில் 175 நாட்கள் ஓடி சாதனை படைத்த “முத்து” திரைப்படம், ஜப்பான் நாட்டில் திரையிடப்பட்டு அங்கும் ரஜினிக்கு ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியது.
* தென்னிந்தியாவில் அதிக நாட்கள் ஓடிய திரைப்படம் என்ற பெருமையை பெற்றது ரஜினியின் “சந்திரமுகி”. 890 நாட்கள் ஓடியது.
* ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளிவந்த “சிவாஜி”யும், “எந்திரன்” திரைப்படமும் பல சாதனைகள் புரிந்து, தமிழ் திரையுலகில் புதிய வரலாறு படைத்தன.
* எதிர்பார்த்த அளவு ஓடாத ரஜினியின் “பாபா” திரைப்படம், தற்போது நவீன தொழில்நுட்பத்துடன், டிஜிட்டல் வடிவில் புதுப்பொலிவுடன் ஒரு சில மாற்றங்களுடன், அவரது பிறந்த நாளை ஒட்டி வெளியாகி உள்ளது.
* 1996ல் நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலின் போது, அப்போதைய ஆளுங்கட்சியான அதிமுகவிற்கு எதிராக இவரது 'வாய்ஸ்' பேசு பொருளானது. அந்த தேர்தலில் அதிமுகவின் தோல்விக்கு ஒரு முக்கிய காரணமாகவும் இருந்தார் ரஜினி.
* இதன் காரணமாக ரஜினி ரசிகர்கள், ரஜினி முதல்வர் பதவிக்கு போட்டியிட அழைப்பு விடுத்த வண்ணம் இருந்தன. கடைசியில் தேர்தலை சந்திக்கப்போவதாக கூறிய ரஜினி பின்னர் உடல்நிலை உள்ளிட்ட பிரச்னைகளை காரணம் காட்டி பின்வாங்கினார்.
* “பத்மபூஷன்”, “பத்மவிபூஷன்”, “தாதா சாகேப் பால்கே” என மத்திய அரசின் விருதுகள் கிடைக்கப் பெற்று கௌரவிக்கப்பட்டார் ரஜினி.
* தமிழக அரசின் “கலைமாமணி விருது”, “எம் ஜி ஆர் விருது”, “தமிழ்நாடு அரசு சினிமா விருது” “பிலிம் பேர் விருது” என இவர் வாங்கிய விருதுகளின் பட்டியல் மிகப் பெரிது.
அயராத உழைப்பும், அற்பணிப்பு உள்ளமும் கொண்டிருந்தால், சாமானியனும் சாதிக்க இயலும் என்பது, சூப்பர் ஸ்டார் ரஜினி பயணித்த பாதை உணர்த்தும் உண்மை.