வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் | ‛96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி |
தமிழ் சினிமா உலகில் நடிகர் சூர்யா இன்று முன்னணி நடிகராக இருப்பதற்கு திருப்புமுனையாக அமைந்த படம் பாலா இயக்கத்தில் வெளிவந்த 'நந்தா'. அதன்பின் பாலா இயக்கிய 'பிதாமகன்' படத்திலும் சூர்யாவின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. சுமார் 19 ஆண்டுகளுக்குப் பிறகு பாலா, சூர்யா மீண்டும் இணைய கடந்தாண்டு அக்டோபர் மாதம் இப்படத்தின் ஆரம்பம் பற்றி “எனக்குள் இருக்கும் நம்பிக்கையை விட என் மீது அதிக நம்பிக்கை வைத்தவர். எனக்கு புதிய உலகத்தைக் காட்டியவர், இந்த இடையாளத்தை எனக்கு ஏற்படுத்தியவர். 20 ஆண்டுகளுக்குப் பிறகு அதே உற்சாகத்துடன் அவர் முன் நிற்கிறேன். அப்பாவின் ஆசீர்வாதத்துடன், எனது பாலா அண்ணாவுடன் மற்றுமொரு அழகான பயணம் ஆரம்பம். உங்களது அன்பும், வாழ்த்துகளும் எப்போதும் போல் தேவை,” என்று இயக்குனர் பாலா, அப்பா சிவகுமாருடன் தான் இருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டு கடந்தாண்டு அக்டோபர் 28ம் தேதி பகிர்ந்துள்ளார் சூர்யா.
அதற்கடுத்து இந்தாண்டு மார்ச் 28ம் தேதி, “எனது வழிகாட்டி இயக்குனர் பாலா ணா ஆக்ஷன் சொல்வதற்காகக் காத்திருக்கிறேன். 18 ஆண்டுகளுக்குப் பிறகு இது மகிழ்ச்சியான நாள். இந்தத் தருணம்… உங்கள் அனைவரின் வாழ்த்துகள் தேவை… சூர்யா 41,” என இயக்குனர் பாலாவுடன் இணையும் தன்னுடைய 41வது படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாவதைப் பற்றிய ஒரு போஸ்டர், படப்பிடிப்புத் தளத்தில் பாலாவுடன் நிற்கும் ஒரு புகைப்படத்துடன் பதிவிட்டிருந்தார் சூர்யா. அவரது சொந்த படத் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் படத்தைத் தயாரிப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.
கன்னியாகுமரியில் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகியது. சுமார் ஒரு வார காலம் அங்கு படப்பிடிப்பு நடைபெற்றது. அதன் பிறகு சூர்யா படப்பிடிப்பிலிருந்து சென்றுவிட்டார் என்று தகவல் பரவியது. அவருக்கும் இயக்குனர் பாலாவுக்கும் கருத்து வேறுபாடு, அதனால் படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டது என்ற செய்திகள் வைரலாகப் பரவின.
கதையில் சூர்யாவுக்குத் திருப்தியில்லை என்றும் கதையை மாற்றச் சொல்லி பாலாவிடம் சொன்னதாகவும் அதனால் இருவருக்குமிடையே பிரச்சினை என்றெல்லாம் செய்திகள் வெளிவந்தன. ஆனால், இருவரது தரப்பிலும் எந்த ஒரு பதிலும் இல்லாமல் இரண்டு மாத காலம் கடந்தது. மே மாதம் 26ம் தேதி “சூர்யா 41, மீண்டும் செட்டுக்குத் திரும்ப காத்திருக்கிறேன்,” என ஒரே வரியில் பாலாவுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்து வெளியான வதந்திகள், தகவல்கள், செய்திகள் ஆகியவற்றிற்கு முற்றுப்புள்ளி வைத்தார் சூர்யா.
அதற்கடுத்த சில வாரங்கள் படம் பற்றிய எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. சூர்யா கேட்டுக் கொண்டது போல, பாலா கதையில் சில மாற்றங்களைச் செய்து வருகிறார் என்று தகவல் வெளியானது. அடுத்து பாலாவின் பிறந்தநாளான ஜுலை 11ம் தேதியன்று 'சூர்யா 41' என்றழைக்கப்பட்டு வந்த இந்தப் படத்திற்கு 'வணங்கான்' என்ற தலைப்பை அறிவித்தார்கள். அந்த போஸ்டருன், “உங்களுடன் மீண்டும் இணைந்ததில் பெரு மகிழ்ச்சி…பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா,” என சூர்யா சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார். அருமையான தலைப்பு என ரசிகர்களும், திரையுலகினரும் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தார்கள்.
விரைவில் 'வணங்கான்' படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு ஆகஸ்ட் 24ம் தேதி தனது அடுத்த படமான 'சூர்யா 42' பற்றிய அறிவிப்பை வெளியிட்டார் சூர்யா. சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்க ஆரம்பமான அந்தப் படத்தின் படப்பிடிப்பு அப்போதிருந்து இப்போது வரை சரியாக நடந்து வருகிறது. 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சூர்யாவின் 39வது படமாக சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் அறிவிக்கப்பட்ட படம் தான் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு 'சூர்யாவின் 42'வது படமாக ஆரம்பமானது. சூர்யாவின் 41வது படமான 'வணங்கான்' படத்திற்கு முன்பாக இந்த 'சூர்யா 42' படம்தான் வெளியாகும் என்றார்கள்.
இடையில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்த 'விக்ரம்' படத்தில் 'ரோலக்ஸ்' கதாபாத்திரத்தில் அதிரடி வில்லனாக சிறப்புத் தோற்றத்தில் சூர்யா நடித்தது பற்றி அவரது ரசிகர்கள் பரபரப்பாகப் பேச ஆரம்பித்தார்கள். 'சூரரைப் போற்று' படத்திற்காக சூர்யா சிறந்த நடிகருக்கான தேசிய விருது வாங்கியதும் நடந்ததால் அவற்றைப் பற்றிப் பேசியதில் 'வணங்கான்' படத்தைப் பற்றி அவரது ரசிகர்களும் பேசுவதை மறந்துவிட்டார்கள்.
சிவா இயக்கத்தில் 'சூர்யா 42' படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகுதான் 'வணங்கான்' படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பமாகும் என்று சில தகவல்களும் வந்தன. இந்நிலையில் இயக்குனர் பாலா நேற்று திடீரென 'வணங்கான்' படத்திலிருந்து சூர்யா விலகுவது பற்றிய அறிக்கை ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திவிட்டார்.
கடந்த மார்ச் மாதம் படப்பிடிப்பு ஆரம்பமாகி ஒரு வாரத்திலேயே வந்த 'வதந்தி'யை நேற்றைய பாலாவின் அறிவிக்கை அது வதந்தி அல்ல 'உண்மை'தான் என்பதை உணர்த்திவிட்டது. 'வணங்கான்' படத்திலிருந்து சூர்யா விலகல் குறித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு விதமான கருத்துக்களை சினிமா ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள். 19 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இணைந்த கூட்டணி இப்படி பிரிவது சரியா என்ற ரீதியில் பலரும் கேள்விகளை எழுப்பியுள்ளார்கள்.
இந்த விவகாரம் குறித்து திரையுலகில் விசாரித்த வரையில் ‛வணக்கான்' படத்தின் முழு திரைக்கதையை சூர்யாவிடம் பாலா சொல்லாமலே இருந்துள்ளார். தனது வழிகாட்டி ஆயிற்றே என்று சூர்யாவும் அதை பெரிதும் எடுத்துக் கொள்ளாமல் படப்பிடிப்புக்கு கிளம்பி சென்றார். அங்கு சென்ற பின்னர் தான் படப்பிடிப்பில் பாலா தடுமாறுவது சூர்யாவிற்கு தெரியவந்து இருக்கிறது. முழுதிரைக்கதையையும தயார் செய்துவிட்டு வாருங்கள் அதன்பின் படப்பிடிப்பை நடத்துவோம் என சூர்யா சொல்லிவிட்டு சென்றதாக தெரிகிறது. அந்த புகைச்சல் தான் கொஞ்சம் கொஞ்சமாக விஸ்வரூபமெடுத்து நேற்றைய அறிக்கையில் வந்து முடிந்திருக்கிறது.
கடந்த சில ஆண்டுகளாகவே சூர்யாவின் படங்கள் குறித்த பல குழப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. பெயர் வைக்காமல் ஆரம்பமாகும் அவருடைய படங்களை சூர்யா 39, 40, 41, 42 என்று அழைக்க ஆரம்பித்து அதில் எது ஆரம்பமாகும், எது நின்று போகும், எது விரைவில் வரும் என்பது புரியாத புதிராகவே தொடர்கிறது.
வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் சூர்யாவின் 40வது படம் என்று ஆரம்பத்தில் அழைக்கப்பட்ட, 'வாடிவாசல்' படம் எப்போது ஆரம்பமாகும் என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை. அந்தப் படத்தில் நடிப்பதற்காக இரண்டு ஜல்லிக்கட்டு காளைகளை சூர்யா வளர்த்து வருகிறார், படத்தின் டெஸ்ட் ஷுட்களும் நடந்துவிட்டது என்றெல்லாம் சொன்னார்கள். சிவா இயக்கத்தில், சூர்யா நடிக்கும் சூர்யா 42 படப்பிடிப்பு முடிந்த பிறகு, வெற்றிமாறன் தற்போது இயக்கி வரும் 'விடுதலை' படத்தை முடித்த பிறகு தான் 'வாடிவாசல்' ஆரம்பமாகும் எனத் தெரிகிறது.
சூர்யாவுக்குள் இருந்த நடிகரை 'நந்தா' படம் மூலம் வெளியில் கொண்டு வந்தவர் இயக்குனர் பாலா. சூர்யாவை ஒரு கமர்ஷியல் நாயகனக 'காக்க காக்க' படத்தின் மூலம் மாற்றியவர் இயக்குனர் கவுதம் மேனன். அதன் பின் அவரது இயக்கத்தில் சூர்யா நடிக்க ஆரம்பமான 'துருவ நட்சத்திரம்' படமும் கவுதம், சூர்யா கருத்து வேறுபாட்டால் அப்படியே நின்று போனது. அதன் பிறகு அந்தப் படத்தை விக்ரம் நடிக்க ஆரம்பித்தார் கவுதம்.
இப்போது 'வணங்கான்' படத்திலிருந்து சூர்யா விலகிவிட்டார். அப்படத்தைத் தயாரித்து வந்த சூர்யாவின் படத் தயாரிப்பு நிறுவனமான 2 டி என்டெர்டெயின்மென்ட் நிறுவனமும் விலகிக் கொள்கிறோம் என அறிவித்துள்ளது. பாலாவின் அறிக்கைப்படி 'வணங்கான்' படப்பணிகள் தொடரும்' என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. சூர்யாவுக்கு பதிலாக அப்படத்தில் நடிக்கப் போகிறவர் யார் என்பது விரைவில் தெரிந்துவிடும். சூர்யா இடத்தில் ஆர்யா என்று ஒரு தகவலும் கசிந்துள்ளது.
பாலாவுடன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இணைவது பற்றி பட ஆரம்பத்தில் தொடர்ந்து பதிவிட்டு, தனது மகிழ்ச்சியை, குரு பக்தியை வெளிப்படுத்திய சூர்யா, தற்போது 'வணங்கான்' படத்திலிருந்து விலகியது குறித்து இதுவரை எந்த ஒரு அறிக்கையும் வெளியிடவில்லை.
'வணங்கான்' என எந்த நேரத்தில் தலைப்பு வைத்தார்களோ, யார் யாரை வணங்கி, இணங்கி நடக்காமல் போய்விட்டார்கள் என்பது தெரியவில்லை. அது வெளியில் வரவும் வாய்ப்பில்லை.