கதையின் நாயகனாக சமுத்திரக்கனிக்கு அடுத்தடுத்து ரிலீஸ் | ரஜினியின் பிறந்தநாளில் 'டபுள்' அப்டேட்? | மாரி தொடரிலிருந்து வெளியேறுகிறாரா ஹீரோயின் ஆஷிகா படுகோன் | சைலண்டாக நிச்சயதார்த்தத்தை முடித்த தனுஷிக் | சீதாவின் தங்கையா இந்த வில்லி நடிகை | மீடியாவுக்கு குட்பை சொன்ன சுந்தரி நடிகை | அஜித் படத்தில் இருந்து வெளியேறியது ஏன்? - மனம் திறந்த விக்னேஷ் சிவன் | மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா | சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை |
2003ம் ஆண்டு ஜூன் 20 ஆம் தேதி வெளிவந்த 'ஜெயம்' படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் ரவி. தான் நாயகனாக அறிமுகமான முதல் படத்தின் பெயரே ரவிக்கு ஒரு அடையாளமாக மாறிப் போய்விட்டது.
தனது தந்தை தயாரிக்க, அண்ணன் இயக்கம் செய்ய முதல் படமே ஹிட்டானது . ஜெயம் ரவி முறைப்படி பரதம் கற்று 12 வயதில் அரங்கேற்றம் நிகழ்த்தியவர். சென்னை லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷனும் மும்பையில் உள்ள நடிப்புக் கல்வி மையத்தில் முறைப்படி நடிப்பு பயிற்சியும் பெற்றவர். ரவியின் சினிமா பயணம் 'ஆளவந்தான்' திரைப்படத்தில் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவின் உதவி இயக்குநராகத் தொடங்கியது. அதற்கு முன்பு தந்தை தயாரித்த இரண்டு தெலுங்குப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிச்சிருந்தார். அந்தப் படத்திற்குக் கிடைத்த வரவேற்பு அவரை தமிழ் சினிமாவில் 19 வருடங்கள் வெற்றிகரமாக நடைபோட உதவிக்கொண்டிருக்கிறது. குடும்பமே கலைக்குடும்பமாக இருந்தாலும் தனித் திறமை இல்லை என்றால் இத்தனை காலம் தாக்குப் பிடிக்க முடியாது என்பதற்கு இவரே உதாரணம்.
அதே அண்ணன் டைரக்ஷனில் அடுத்தடுத்து 'எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்பிரமணியம்' என வெற்றி கொடுத்தாலும் ஆரம்ப காலங்களில் மற்ற இயக்குனர்களின் படங்களில் ஜெயம் ரவி நடித்த படங்கள் பெரிய வெற்றியைப் பெறவில்லை. 2009ம் ஆண்டில் வெளிவந்த 'பேராண்மை' படம் தான் அவருக்கு அந்த வெற்றியைப் பெற்றுத் தந்தது. அந்தப் படம் மூலம் ஆக்ஷன் ஹீரோவாகவும் உயர்ந்தார்.
தொடர்ந்து வெற்றி, தோல்வி என மாறி மாறி பயணித்து வந்தாலும் அவருடைய மார்க்கெட்டை அப்படியே தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். “நிமிர்ந்து நில், ரோமியோ ஜுலியட், தனி ஒருவன், பூலோகம், மிருதன், போகன், டிக் டிக் டிக், அடங்க மறு, கோமாளி' ஆகிய படங்களில் அவர் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள் அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்துள்ளன.
தற்போது 'பொன்னியின் செல்வன்' உள்பட தேர்ந்தெடுத்த சில படங்களில் நடித்து வருகிறார் ஜெயம் ரவி. ஆம்.. கல்கியின் அமரத்துவம் பெற்ற சரித்திரப் புனைவு நாவலான 'பொன்னியின் செல்வன்' மணிரத்னம் இயக்கத்தில் திரைப்படமாகிறது. இதில் தலைப்புக் கதாபாத்திரமான பொன்னியின் செல்வனாக அதாவது சோழ சாம்ராஜ்யத்தின் மாபெரும் பேரரசன் ராஜராஜ சோழன் என்று அறியப்பட்ட அருண்மொழிவர்மனாக நடித்துவருகிறார் ஜெயம் ரவி. இதுவே அவர் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கும் முதல் படம். அவர் நடிக்கும் முதல் சரித்திரப் படமும்கூட.
ஜெயம் ரவி வெற்றிப் படங்களிலும் தோல்விப் படங்களிலும் நடித்திருக்கிறார். எல்லா நடிகர்களையும் போலவே அவருடைய திரைவாழ்விலும் ஏற்றங்களும் இறக்கங்களும் இருந்துள்ளன. ஆனால் என்றைக்கும் ஜெயம் ரவியின் படத்தில் ஆபாசம், அதீத வன்முறை போன்ற விஷயங்கள் இருந்ததில்லை. அவருடைய திரைப்படங்கள் எதுவும் சமூகத்துக்கு தீங்கு விளைவிக்கும் கருத்துகளை முன்னிறுத்தியதில்லை. அப்படிப்பட்ட தீங்கில்லாத கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பதாலேயே அனைத்து தரப்பினரின் நன்மதிப்பைப் பெற்ற நாயக நடிகராக விளங்குகிறார் ஜெயம் ரவி. அதோடு தொடர்ந்து ஒவ்வொரு படத்திலும் கதையிலும் சரி, தன்னுடைய கதாபாத்திரத்திலும் சரி ஏதேனும் ஒரு புதுமை இருப்பதை உறுதி செய்வது ஜெயம் ரவி அமைதியாகச் செய்துகொண்டிருக்கும் ஒரு சாதனை.
சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் விருதையும் பிலிம்பேர் விருதையும் இன்னும் பல விருதுகளையும் வென்றுள்ளார் ஜெயம் ரவி. மேலும் வரும் காலங்களில் தேசிய விருது உள்ளிட்ட தேசிய அங்கீகாரங்களையும் பெறுவார் என்பதில் சந்தேகம் இல்லை.