ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
விஜய் நடித்துள்ள 'பீஸ்ட்' டிரைலர் நேற்று மாலை யு டியூபில் வெளியானது. அந்த டிரைலரை சில தியேட்டர்களில் ரசிகர்களுக்காக இலவசமாகத் திரையிட்டனர். 500 பேர் அளவிற்கு அமரக் கூடிய தியேட்டர்களில் ஆயிரக்கணக்கானோரை உள்ளே அனுமதித்துள்ளன சில தியேட்டர்கள்.
திருநெல்வேலியில் உள்ள பிரபலமான ராம் தியேட்டரில் நேற்று மாலை இது போல டிரைலரைத் திரையிட்டுள்ளனர். நூற்றுக்கணக்கானோர் தியேட்டருக்குள் சென்று டிரைலரைப் பார்த்துள்ளனர். டிரைலர் திரையீடு முடிந்த பின் பார்த்தால் பெரும்பாலான இருக்கைகளை நாசம் செய்துள்ளனர் ரசிகர்கள்.
அது பற்றிய தகவல் சினிமா தியேட்டர் வட்டாரங்களில் பரவியது. பின் அது குறித்து தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் பேசியுள்ளார். இம்மாதிரியான டிரைலர் திரையிடல்களை சம்பந்தப்பட்ட தியேட்டர்காரர்கள் நிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். குறிப்பிட்ட அளவு மக்களே உள்ளே அமரக் கூடிய தியேட்டர்களில் இப்படி அளவுக்கதிகமாக மக்களை அனுமதிக்கக் கூடாது என்றும், அதனால் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்கு தியேட்டர்காரர்களே பொறுப்பேற்க வேண்டிய சூழல் ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
பல வருடங்களுக்கு முன்பு 'இணைந்த கைகள்' படம் வெளிவந்த போது கோயம்பத்தூர் சாந்தி தியேட்டரில் படம் பார்க்க கட்டுக்கடங்காத கூட்டம் வந்த போது நெரிசலில் சிக்கி இரண்டு பேர் மரணம் அடைந்தனர். அதன்பின் அந்த தியேட்டரின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டது. கடும் போராட்டத்திற்குப் பிறகே லைசென்ஸ் பெற முடிந்தது என்பதையும் ஞாபகப்படுத்தி உள்ளார்.
ரசிகர்களை மகிழ்விப்பதற்காக இப்படி நடந்து கொள்ளும் தியேட்டர்காரர்கள் அதனால் ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்தால் என்ன ஆகும் என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
திருப்பூர் சுப்பிரமணியம் சொல்வது நியாயமான ஒரு கோரிக்கை தான். திரைப்படங்களைத் திரையிட மட்டுமே தியேட்டர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. டிரைலரைத் திரையிட எந்த அனுமதியும் வழங்கப்படுவதில்லை. 500 பேர் அமரும் இடத்தில் ஆயிரக்கணக்கானோர் வருவதை எப்படி அனுமதிக்கிறார்கள் என்று தெரியவில்லை. இப்படி நடந்து கொள்ளும் தியேட்டர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்குமா என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.