‛எல்லாமும் கைவிடும் போது உன்னை நம்பு' - திடீரென இரவில் வெளியான விடாமுயற்சி டீசர் | வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் |
பாலிவுட் திரையுலகம் கண்டெடுத்த பன்முகத் திரைக்கலைஞன். ஹிந்தி திரையிசை உலகின் முடிசூடா மன்னன் என்று ரசிகர்களால் கொண்டாடி, “கிஷோர்தா” என அன்போடும், மரியாதையோடும் அழைக்கப்படும் பின்னணிப் பாடகர் கிஷோர் குமாரின் 37வது நினைவு தினம் இன்று…
* பிரிட்டிஷ் இந்தியாவின் மத்திய மாகாணங்களில் ஒன்றான, தற்போதைய மத்திய பிரதேசத்தின் கந்த்வா மாவட்டத்தில் 1929ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 4 அன்று, குஞ்சலால் கங்குலி மற்றும் கவுரி தேவி இணையரின் மகனாக ஒரு பெங்காலி குடும்பத்தில் பிறந்தார் கிஷோர் குமார். இவரது இயற்பெயர் அபாஸ் குமார் கங்குலி.
* கிஷோர் குமாரின் சகோதரர்களான அசோக்குமார் மற்றும் அனூப்குமார் இருவரும் திரைப்படத் துறையில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டவர்கள். இவரது அண்ணன் அசோக்குமார் 40 மற்றும் 50களில் பிரபல நாயகனாக ஹிந்தி திரையுலகில் வலம் வந்தவர். சிறு வயதில் தனது சகோதரர்களுடன் நேரத்தைக் கழித்த கிஷோர் குமாருக்கும் கலைத்துறையின் மீது தாக்கம் ஏற்பட்டது.
* அன்றைய ஹிந்தி திரையுலகில் பாடகராகவும், நடிகராகவும் இருந்த குந்தன்லால் சைகல் என்பவரை தனது மானசீக குருவாக எண்ணிய கிஷோர் குமார், அவரையே பின்தொடர்ந்து தனது திரையிசைப் பயணத்தை தொடங்க முன் வந்தார்.
* ஹிந்தி திரையுலகின் நட்சத்திர நடிகராக வலம் வந்து கொண்டிருந்த தனது சகோதரர் அசோக் குமார் பணிபுரிந்து வந்த பாம்பே டாக்கீஸில் ஒரு கோரஸ் பாடகராக தனது திரையிசைப் பயணத்தை துவக்கினார் கிஷோர் குமார்.
* பின்னர் அசோக்குமார் நாயகனாக நடித்த “ஷிகாரி” என்ற திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து, ஒரு நடிகனாகவும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். 1948ல் வெளிவந்த “ஜித்தி” என்ற திரைப்படத்தின் மூலம் ஒரு பின்னணிப் பாடகராகவும் அறியப்பட்டார் கிஷோர் குமார். பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கரோடு இணைந்து இவர் பாடிய முதல் பாடல் இடம்பெற்ற திரைப்படமும் இதுவே.
* தொடர்ந்து பாடும் வாய்ப்புகள் கிடைத்துக் கொண்டிருந்த வேளையில், 1951ல் “அந்தோலன்” என்ற திரைப்படத்தில் நாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்கப் பெற்று நாயகனாக தோன்றிய கிஷோர் குமார், தொடர்ந்து “முஸாபிர்”, “நியூ டெல்லி”, “ஆஷா”, “ஹாப் டிக்கட்”, “சல் தி கா நாம் காடி” என தொடர்ந்து படங்களில் நடித்து வந்தாலும், ஒரு தலைசிறந்த பாடகராக வரவேண்டும் என்ற ஆர்வம் அவரிடம் காணப்பட்டது.
* கிஷோர் குமாரின் திரையிசைப் பயணத்தில் அவருக்கு பேருதவியாய் இருந்து பெரும் பங்காற்றியவர் என்றால் இசையமைப்பாளர் எஸ்டி பர்மனை கூறலாம். இவரது இசையில் ஏராளமான வெற்றிப் பாடல்களை தனது மயக்கும் குரலில் பதிவு செய்திருக்கின்றார் கிஷோர் குமார். “முனிம்ஜி”, “டாக்ஸி டிரைவர்”, “ஹவுஸ் நம்பர் 44”, “நவ் தோ கியாரா”, “பேயிங் கெஸ்ட்”, “கைடு”, “ஜுவல் தீஃப்”, “பிரேம் பூஜாரி” போன்ற திரைப்படங்களில் நடிகர் தேவ் ஆனந்திற்காக எஸ் டி பர்மன் இசையில் இவர் பாடிய பாடல்கள் இன்றும் ரசிகர்களால் பெரிதும் ஆராதிக்கக் கூடிய பாடல்கள் என்றால் அது மிகையன்று.
* திரையிசைப் பாடல்களில் 'யோடலிங்' என்ற முறையை சரியாகப் பயன்படுத்தி வெற்றி கண்ட முதல் இந்தியப் பின்னணிப் பாடகர் கிஷோர் குமார் என்றால் அது மிகையன்று. “ச்சலா ஜாத்தா ஹூன்”, “ஜிந்தகி ஏக் ஸபர் ஹே சுஹானா” என்ற இவர் பாடிய இந்த இரண்டு பாடல்களைக் கேட்டால் போதும் 'யோடலிங்' இவருக்கு கைவந்த கலை என்று.
* தேவ் ஆனந்த், தர்மேந்திரா, ராஜேஷ் கண்ணா, அமிதாப்பச்சன், ஜிதேந்திரா, சஞ்சீவ்குமார், மிதுன்சக்கரவர்த்தி, சஞ்சய்தத், அணில்கபூர், கோவிந்தா என இவர் பின்னணி பாடாத பாலிவுட் நாயகர்களே இல்லை எனும் அளவிற்கு அனைத்து பாலிவுட் முன்னணி நாயகர்களுக்கும் பின்னணி பாடியிருக்கும் கிஷோர் குமார், ஃபிலிம் ஃபேர் விருதுகள் மற்றும் பெங்கால் சினிமா பத்திரிகையாளர்கள் சங்க விருதுகள் என விருதுகள் பல வென்று, ரசிகர்கள் மனங்களில் ஒரு ஜனரஞ்சக பாடகராக இன்னமும் வாழ்ந்து கொண்டுதானிருக்கின்றார்.
* 1961ஆம் ஆண்டு “ஜும்ரு” என்ற திரைப்படத்தை சொந்தமாக தயாரித்து வெளியிட்டதோடு, இத்திரைப்படத்திற்கு இசையமைத்தும், பாடல்களை எழுதியும், நடித்தும் இருந்தார் கிஷோர் குமார். இதுதவிர மேலும் ஒருசில படங்களுக்கு இசையமைத்து தன்னை ஒரு இசையமைப்பாளராகவும் அடையாளப்படுத்திக் கொண்டார் கிஷோர் குமார்.
* 1988ஆம் ஆண்டு நடிகர் மிதுன் சக்கரவர்த்தி மற்றும் ஸ்ரீதேவி நடிப்பில் வெளிவந்த “வக்த் கி ஆவாஜ்” என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற “குரு குரு” என்று ஆரம்பமாகும் பாடலை, பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லேயுடன் இணைந்து பாடியதே இவரது கடைசிப் பாடலாகும்.
* 1950களில் ஒரு நடிகராக, பாடகராக அறியப்பட்ட பின்னணிப் பாடகர் கிஷோர் குமார், 1960களில் தயாரிப்பாளராக, இசையமைப்பாளராக, பாடலாசிரியராக, இயக்குநராக உயர்ந்து ஒரு பன்முகத் திரைக்கலைஞராக வலம் வந்து, இனம், மொழி, தேசம் கடந்து, இன்றும் இசை என்ற வடிவம் கொண்டு நம்மோடு பயணித்து வரும் பின்னணிப் பாடகர் கிஷோர் குமார் அவர்களின் நினைவு நாளான இன்றுஅக்., 13) அவரைப் பற்றிய ஒரு சிறு குறிப்பினை பகிர்ந்து கொள்வதில் நாம் பெருமை கொள்வோம்.