கடந்த வாரம் மலையாளத்தில் நடிகர் டொவினோ தாமஸ் நடிப்பில் அஜயண்டே இரண்டாம் மோசனம் என்கிற திரைப்படம் வெளியானது. மூன்று காலகட்டங்களில் நடக்கும் கதையாக ஒரு பீரியட் படமாக உருவாகி இருந்த இந்த படத்தில் மூன்று வித கதாபாத்திரங்களில் டொவினோ தாமஸ் நடித்திருந்தார். இந்த மூன்று கதாபாத்திரங்களுக்கும் ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ், கிர்த்தி ஷெட்டி மற்றும் மலையாள நடிகை சுரபி லட்சுமி ஆகியோர் நடித்திருந்தனர். இதில் நடிகை சுரபி லட்சுமி பல படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து, கடந்த 2017ல் வெளியான மின்னாமினுங்கு படத்தில் கதாநாயகியாக நடித்து அந்த படத்திற்காக சிறந்த குணச்சித்திர நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றவர்.
இந்த நிலையில் ஏஆர்எம் படத்தில் இவர் மாணிக்கம் என்கிற கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்ததற்காக இவருக்கு பாராட்டுக்கள் குவிகின்றன. இந்த நிலையில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் சுரபி லட்சுமிக்கு தனது பாராட்டுகளை ஒரு வீடியோ மூலமாக தெரிவித்துள்ளார். இதற்கு முன்னதாக மின்னாமினுங்கு படத்திற்கான தேசிய விருதை பெறுவதற்காக அந்த விழாவில் கலந்து கொண்டபோது அதிர்ஷ்டவசமாக அக்ஷய் குமாரின் அருகில் அமரும் வாய்ப்பு சுரபி லட்சுமிக்கு கிடைத்தது. அந்த சமயத்தில் அவருடன் பேசும்போது தான் அக்ஷய் குமாரின் தீவிர ரசிகை என்றும் தற்போது தான் கதாநாயகியாக நடித்துள்ள முதல் படத்திற்கே தனது தேசிய விருது கிடைத்துள்ளது என்றும் தனக்குத் தெரிந்த அளவு ஹிந்தியில் பேசியுள்ளார்.
இந்த நிலையில் அக்ஷய் குமார் அப்போது அவரிடம் பேசிய விஷயங்களை நினைவு கூர்ந்து தற்போது பாராட்டியுள்ளார். அதே சமயம் தான் கதாநாயகியாக நடித்த முதல் படம் என கூறியதை அக்ஷய் குமார் தவறாக புரிந்து கொண்டு தான் நடித்த முதல் படத்திலேயே தேசிய விருது வாங்கும் அளவுக்கு திறமையான நடிகை என்று அந்த வீடியோவில் அவர் பேசியுள்ளார். இது குறித்து சுரபி லட்சுமி கூறும்போது, “நான் அப்போது எனக்குத் தெரிந்த அரைகுறை ஹிந்தியில் பேசியதை அவர் இவ்வாறு புரிந்து கொண்டார் என்று நினைக்கிறேன். ஆனாலும் இத்தனை வருடங்கள் கழித்து என்னை ஞாபகம் வைத்து அவர் பாராட்டியதை என்னால் நம்பவே முடியவில்லை” என்று கூறியுள்ளார்.