‛ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் 4, ரஜினி, வித்யா நம்பர் 1'' - டிச., 26 முதல் ஜீ தமிழில் புது நிகழ்ச்சிகள்
23 டிச, 2021 - 12:53 IST
ஜீ தமிழ் டிவி தனது ரசிகர்களுக்கு பொழுதுபோக்கான வித்தியாசமான பல நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறது. அந்தவகையில் வரும் டிச., 26 முதல் ‛ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் சீஸன்4', ‛ரஜினி' மற்றும் ‛வித்யா நம்பர் 1' ஆகிய நிகழ்ச்சிகளை துவங்குவதாக அறிவித்துள்ளது.
குழந்தைகளின் திறமைக்கு அங்கீகாரம் வழங்கும் ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸின் சீஸன் 4 நிகழ்ச்சி தமிழகத்தின் இளம் மற்றும் வளர்ந்து வரும் திறன் மிக்கவர்களுக்கு, தங்கள் திறமைகளை வெளிப்படுத்த ஒரு மாபெரும் தளத்தை ஜீ தமிழ் வழங்க உள்ளது. துவக்க நிகழ்ச்சியாக டிச., 26ல் ஞாயிறு மாலை 6.30 மணிக்கு மூன்று மணிநேர நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகிறது. ஒவ்வொரு வாரயிறுதி நாட்களிலும் (சனி மற்றும் ஞாயிறு) ஒன்றரை மணிநேர நிகழ்ச்சியாக மாலை 6:30 மணிக்குஒளிபரப்பாகும். இந்த சீஸனில் 5 - 13 வயது வரம்பில் உள்ள 30 குழந்தைகள் பல்வேறு சுற்றுகளில் பலவிதமான கலைநடைகளில் தங்களது நடிப்புத் திறமைகளை நிரூபித்து, மாபெரும் இறுதிச்சுற்றினை நோக்கிச் செல்வார்கள்.
விஜே கல்யாணி மற்றும் அமுதவாணன் ஆகியோர் இந்த சீஸனின் வழிகாட்டி நிபுணர்களாக செயல்பட உள்ளனர். திரைத்துறையின் பிரபல நட்சத்திரங்களான சினேகா, மிர்ச்சி செந்தில் மற்றும் சம்யுக்தா ஆகியோர் நடுவர்களாக களமிறங்கி உள்ளனர். கேளிக்கை மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் வழங்க கீகீ விஜய் தொகுப்பாளராக மீண்டும் களமிறங்கியுள்ளார்.
'ரஜினி'டிசம்பர் 27 திங்கள் முதல் ஜீ தமிழில் 'ரஜினி' என்கிற புதிய தொடர் ஒளிபரப்பாகவுள்ளது. தன் ஆசைகளைக் காட்டிலும் தனது குடும்பத்தின் மகிழ்ச்சிக்கு முக்கியத்துவம் வழங்கும் துணிச்சலும் மிக்க ஒருபெண்ணின் கதையே இத்தொடர். ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் பெண்கள் எப்படி திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கலாம் என்கிற சமூகத்தின் கேள்விகள், மற்றும் விமர்சனங்கள் பற்றிப் பேசும் இக்கதை. இதில் மாறுபட்ட பெண்ணான ரஜினி சமுதாயத்தின் அடக்குமுறைகளை உடைத்தும், தன் குடும்பத்தின் மீது அன்பும் அக்கறையும் செலுத்தி வாழ்கிறாள். முடிவில் ரஜினியின் வாழ்க்கை எப்படி அமையும் என்பதே சுவாரஸ்யமானகதையாகும். ரஜினியாக நடிகை ஸ்ரேயா அஞ்சன் நடிக்கிறார். இவருடன் யாழினி, அருண், ஸ்ரீலேகா, சுபிக்ஷா, ப்ரீத்தா, சுரேஷ் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். இந்த தொடர் திங்கள் முதல் சனி வரை இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகும்.
வித்யா நம்பர் 1' அடுத்த புதிய வரவான 'வித்யா நம்பர் 1' தொடரும் டிசம்பர் 27 முதல், திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 10:00 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. இரக்ககுணம் மிகுந்த கிராமத்துப் பெண்ணான வித்யாவின் வாழ்க்கையைச் சுற்றியே கதை நகர்கிறது. தைரியமான இந்த இளம்பெண், தான் படிக்கவில்லை என்கிற தடையைத் தாண்டி, தன்னுடைய இயற்கையான திறன்களையும், திறமையையும் வெற்றிகரமாக வளர்த்துக்கொள்கிறாள். இருப்பினும், வேதவல்லியின் மகன் சஞ்சயுடன் திருமணமான பிறகு அவளது வாழ்க்கை தலைகீழாக மாறுகிறது. நன்கு படித்து, பல கல்வி நிறுவனங்களை நடத்தி வரும் வேதவல்லிக்கு வாழ்க்கையில் அனைத்திலும் முதல் இடத்தில் வரவேண்டும் என்பதே லட்சியம். மனதை தொடும் இந்த கதையில், வாழ்க்கையில் அனைத்திலும் முதல் இடத்தில் வருவதைவிட அன்புடனும், மகிழ்ச்சியுடனும் எப்படி வாழ வேண்டும் என்று மருமகளான வித்யா தனது மாமியார் வேதவல்லிக்குப் புரிய வைக்கும் சுவாரஸ்யமான கதை. நடிகை நிஹாரிகா மற்றும் இளம் நட்சத்திரம் தேஜஸ்வினி ஆகியோர் மாமியார் மற்றும் மருமகள் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இவர்களுடன் யூடியூப் பிரபலம் இனியன், வேதவல்லிக்கு விசுவாசமான மற்றும் மரியாதையான மகன் சஞ்சய் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.