படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

தமிழ் சினிமாவில் இந்த ஆண்டில் வெளியான சுமார் 275 படங்களில் ஒரு படத்திற்கு சராசரியாக 4 பாடல்கள் என்று வைத்துக் கொண்டாலும் 1100 பாடல்கள் வெளியாகி இருக்கும். ஆனால், அந்தப் பாடல்களில் ஹிட் பாடல்கள் என்று பார்த்தால் மொத்த எண்ணிக்கையோடு ஒப்பிடும் போது மிகவும் குறைவாகவே இருக்கிறது.
இளையராஜா, ஏஆர் ரஹ்மான், யுவன் ஷங்கர் ராஜா, ஜிவி பிரகாஷ்குமார், அனிருத், சந்தோஷ் நாராயணன், ஷான் ரோல்டன், சாம் சிஎஸ் உள்ளிட்ட இசையமைப்பாளர்களின் படங்கள் அறிமுக இசையமைப்பாளர் சாய் அபயங்கர் உள்ளிட்ட சிலரது படங்கள் என இவற்றில் அடங்கும்.
கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டிலும் குறைவான பாடல்கள்தான் ஹிட் பாடல்கள் வரிசையில் சேர்ந்துள்ளன. விஜய் தவிர மற்ற முன்னணி நடிகர்களின் படங்கள் இந்த ஆண்டில் வந்ததால் அதிகமான ஹிட் பாடல்கள் வரலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. பாடல்களுக்காகவே ஓடிய படங்கள் என்று இருந்த காலம் எல்லாம் 90களோடு போய்விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.
இந்த ஆண்டில் வெளிவந்த படங்களில் இடம் பெற்ற சுமார் 1100 பாடல்களில் 10க்கும் குறைவான பாடல்கள்தான் சூப்பர் டூப்பர் ஹிட் வரிசையில் இடம் பிடித்துள்ளது. அதற்கான தரவாக நாம் எடுத்துக் கொண்டது யு டியுப் பார்வைகள். அந்த விதத்தில் அதிகப் பார்வைகளைப் பெற்ற பாடல்கள் எவையெவை என்பதைப் பற்றிப் பார்ப்போம்.
1. மோனிகா….
படம் - கூலி
இசை - அனிருத்
பாடல் - விஷ்ணு எடவன்
பாடியவர்கள் - சுபலாஷினி, அனிருத், ராப் பாடியது அசல் கோலார்
யு டியூப் - லிரிக் வீடியோ - 234 மில்லியன், பாடல் வீடியோ - 76 மில்லியன்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நாகார்ஜுனா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடித்து வெளிவந்த இந்தப் படத்தில் இடம் பெற்ற சிறப்புப் பாடல் இது. பூஜா ஹெக்டேவின் அசத்தலான நடனமும், ஆடை அலங்காரமும், சவுபின் ஷபிரின் ஆச்சரியமான நடனமும், அனிருத்தின் இசையில் பெரும் 'வைப்'ஐ இந்தப் பாடலில் ஏற்படுத்தியது.
2. கோல்டன் ஸ்பாரோ…
படம் - நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்
இசை - ஜிவி பிரகாஷ்குமார்
பாடல் - அறிவு
பாடியவர்கள் - சுபலாஷினி, ஜிவி பிரகாஷ்குமார், தனுஷ், அறிவு
யு டியூப் - வீடியோ பாடல் - 243 மில்லியன்

தனுஷ் இயக்கத்தில், பவிஷ், மாத்யு தாமஸ், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த படம். இப்படத்தில் இடம் பெற்ற இந்தப் பாடலை கடந்த வருடமே வெளியிட்டுவிட்டார்கள். அப்போதே இந்தப் பாடல் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்தது. பிரியங்கா மோகனின் அசத்தல் நடனமும் இந்தப் பாடலின் வரவேற்புக்கு ஒரு காரணம். படம் வெளிவந்த பின் மேலும் சூப்பர் ஹிட்டாகி இந்த வீடியோ பாடல் மட்டுமே 243 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. வீடியோ என்று பார்த்தால் இந்தப் பாடல் 'கூலி' படத்தின் 'மோனிகா' பாடலை விடவும் 9 மில்லியன் கூடுதல் பார்வைகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளது.
3. கன்னிமா…
படம் - ரெட்ரோ
இசை - சந்தோஷ் நாராயணன்
பாடல் - விவேக்
பாடியவர்கள் - சந்தோஷ் நாராயணன், த இந்தியன் கோரல் என்சம்பில்
யு டியூப் - லிரிக் வீடியோ - 123 மில்லியன், வீடியோ பாடல் - 101 மில்லியன்

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சூர்யா, பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த படம். சந்தோஷ் நாரயாணன் ஸ்டைலில் ஒரு மாறுபட்ட குத்துப் பாடல். பாடல் வரிகளும் ஈர்த்து, இந்த வருடத்தில் அதிக ரீல்ஸ்களை உருவாக்கிய பாடல் என்றும் சொல்லலாம். வழக்கம் போல பூஜா ஹெக்டேவின் அசத்தல் நடனம், ஆனால், கிளாமர் இல்லாமல் பட்டுப் புடவையில்…லிரிக் வீடியோவும், வீடியோ பாடலும் தனித் தனியே 100 மில்லியன் பார்வைகளைக் கடந்தது.
4. ஊறும் பிளட்…
படம் - டியூட்
இசை - சாய் அபயங்கர்
பாடல் - பால் டப்பா
பாடியவர்கள் - சாய் அபயங்கர், ராப் பாடியது பால் டப்பா
யு டியூப் - 127 மில்லியன்

ஜென் ஸி கிட்ஸ்களுக்காக, ஜென் ஸி கிட்ஸ்களால் உருவாக்கப்பட்ட பாடல் என்று சொல்வதுதான் பொருத்தம். அறிமுகப் படத்திலேயே இசையமைத்த ஒரு பாடல் 100 மில்லியன் பார்வைகளைக் கடப்பது சாதாரண விஷயமல்ல. இதற்கு முன்பு '3' படத்திற்காக அனிருத்திற்கு இப்படி அமைந்தது. அதற்கடுத்து சாய் அபயங்கருக்கு அமைந்துள்ளது. இந்த வரவேற்பை அடுத்தடுத்த படங்களிலும் தொடர வைப்பதும், தக்க வைத்துக் கொள்வதும் சாய் அபயங்கரின் கையில் உள்ளது.
5. முத்த மழை…
படம் - தக் லைப்
இசை - ஏஆர் ரகுமான்
பாடல் - சிவா ஆனந்த்
படத்தில் பாடியவர் - தீ
யு டியூப் - சின்மயி பாடிய மேடைப் பாடல் - 128 மில்லியன்

சினிமா வரலாற்றிலும், யு டியுப் வரலாற்றிலும் இதற்கு முன்பு இப்படி நடந்திருக்குமா என்பது ஆச்சரியம்தான். ஒரு படத்தில் இடம் பெற்ற பாடலின் லிரிக் வீடியோவோ, அல்லது அதன் வீடியோ பாடலோ 100 மில்லியன் பார்வையைப் பெறாமல் அந்தப் பாடலை வேறொருவர் பாடியவது 100 மில்லியனைக் கடந்தது இந்தப் படத்தில் நிகழ்ந்துள்ளது. படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஒரிஜனலாகப் பாடிய தீ பங்கேற்க முடியாமல் போக அவருக்குப் பதிலாக மேடையில் பாடகி சின்மயியைப் பாட வைத்தார்கள். அந்தப் பாடலும், அவரது குரலும் ரசிகர்களை வசீகரிக்க 100 மில்லியன் பார்வைகளைக் கடந்தது. அதன்பின் வெளியான தீ பாடிய வீடியோ பாடல் 10 மில்லியன்களை மட்டுமே கடந்துள்ளது.
6. பொட்டல முட்டாயே…
படம் - தலைவன் தலைவி
இசை - சந்தோஷ் நாராயணன்
பாடல் - விவேக்
பாடியவர்கள் - சந்தோஷ் நாராயணன், சுபலாஷினி
யு டியூப் - லிரிக் வீடியோ - 67 மில்லியன், வீடியோ பாடல் - 98 மில்லியன்

பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன் மற்றும் பலர் நடித்து வெளிவந்த படம். இந்தப் பாடலின் லிரிக் வீடியோ வெளியான போதே மாறுபட்ட கிராமியப் பாடலாய் வசீகரித்தது. படத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன் ஆகியோரது நடிப்பு பாடலுக்கான ஈர்ப்பை இன்னும் அதிகப்படுத்திக் கொடுத்தது. அதனால்தானோ என்னவோ, லிரிக் வீடியோவை விடவும், வீடியோ பாடல் அதிகப் பார்வைகளைப் பெற்று 100 மில்லியனை நெருங்கியுள்ளது.
100 மில்லியனுக்கும் குறைவாக 50 மில்லியனைக் கடந்த பாடல்கள் என ஒரு தேடலைப் பார்த்தால், 'ரெட்ரோ' படத்தின் 'கண்ணாடிப் பூவே' பாடலின் லிரிக் வீடியோ 78 மில்லியன், வீடியோ பாடல் 10 மில்லியன், 'டிராகன்' படத்தின் 'வழித்துணையே' பாடல் 'லிரிக் வீடியோ 77 மில்லியன், வீடியோ பாடல் 31 மில்லியன், 'கூலி' படத்தின் 'பவர்ஹவுஸ்' பாடல் லிரிக் வீடியோ 75 மில்லியன், வீடியோ பாடல் 4 மில்லியன், டீசல் படத்தின் ‛பீர்' பாடலின் லிரிக் வீடியோ 74 மில்லியன், வீடியோ 1 மில்லியனுக்கும் குறைவான பார்வைகளையும், 'தக் லைப்' படத்தின் 'ஜிங்குச்சா' லிரிக் வீடியோ 58 மில்லியன், வீடியோ பாடல் 37 மில்லியன் பார்வைகளையும் பெற்றுள்ளன.
6 பாடல்கள் மட்டுமே இந்த ஆண்டில் யு டியூப் தளத்தில் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது அதிர்ச்சிகரமான ஒன்றுதான். கடந்த வருடத்தில் 100 மில்லியனைக் கடந்த பாடல்கள் 3 என இருந்தது. அதனுடன் ஒப்பிட்டால் இந்த ஆண்டில் 3 பாடல்கள் கூடுதல் என்பதால் அதில் கொஞ்சம் ஆறுதல் உண்டு.
ஒரு படத்தில் இடம் பெற்ற அனைத்துப் பாடல்களுமே சூப்பர் ஹிட் என்பதை தற்போதைய சினிமாவில் பார்க்க முடிவதில்லை. மீண்டும் அப்படி ஒரு இசைக்காலம் வருமா என்பதும் சந்தேகமாகவே உள்ளது.
2026ம் ஆண்டில் அப்படி ஒரு படமாவாது அமையாதா என்ற ஏக்கம் திரையிசை ரசிகர்களிடம் நிச்சயம் இருக்கும்.
இந்த பாடல்கள் தவிர்த்து 2025ல் வெளியான படங்களில் உங்களுக்கு பிடித்த பாடல்கள் எதுவும் இருந்தால் கீழே கமென்ட்டில் சொல்லுங்க....!