டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

புதிய படங்களின் டிரைலர்கள், டீசர்கள் ஆகியவற்றை ஆவலுடன் எதிர்பார்த்து பார்க்கும் ரசிகர்கள் இப்போதும் இருக்கிறார்கள். ஆனால், ஓரிரு வருடங்களாக அதன் பார்வைகள், முந்தைய சாதனைகள் ஆகியவற்றைக் குறித்து யாரும் பரபரப்பாகப் பேசுவதில்லை. சில முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் கூட 'பாட்'களை வைத்து போலியாக அதன் பார்வைகளை ஏற்றுகிறார்கள் என்பதை ரசிகர்கள் தெரிந்து கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள். அதனால், இந்த ஆண்டில் இவ்வளவு வியூஸ், அவ்வளவு வியூஸ் என ரசிகர்களின் சண்டைகளை சமூக வலைதளங்களில் அதிகம் பார்க்க முடியவில்லை.
யு டியூப் மட்டுமல்லாது, ரீல்ஸ், ஷார்ட்ஸ் என மற்ற சிறு வீடியோக்கள் இந்த டிரைலர், டீசர் பார்வைகளை விட பல மடங்கு அதிகமாகப் பார்க்கப்படுவதால் இந்த போட்டியும், சண்டையும் குறைவதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
இந்த ஆண்டில் சில படங்களுக்குத்தான் டீசர், டிரைலர் என இரண்டும் வெளியாகி உள்ளன. சில படங்களுக்கு இரண்டில் ஏதாவது ஒன்றுதான் வெளியிடப்பட்டுள்ளது. அதனால், இரண்டில் எவையெவை அதிகப் பார்வைகளில் உள்ளதோ அவற்றை கணக்கில் எடுத்துக் கொண்டு இந்த டாப் 10 பட்டியலைத் தந்துள்ளோம்.
1. குட் பேட் அக்லி
டிரைலர் - 39 மில்லியன்
இயக்கம் - ஆதிக் ரவிச்சந்திரன்
இசை - அனிருத்
நடிப்பு - அஜித், த்ரிஷா
சமூக வலைதளங்கள், யு டியுப் தளம் ஆகியவற்றில் விஜய், அஜித் ஆகிய இருவருக்கும்தான் அதிகமான போட்டி இருக்கும். இந்த வருடம் விஜய் படம் ஒன்று கூட வராமல் போக, அஜித்தின் இரண்டு படங்கள் வெளிவந்து ஆச்சரியப்படுத்தியது. ஆதிக், அஜித்தின் முதல்முறை கூட்டணி என்ன செய்திருக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு பட வெளியீட்டிற்கு முன்பு வந்ததால், இந்தப் படத்தின் டிரைலர் அதிகப் பார்வைகளைப் பெற்று இந்த வருடத்தில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. 2023ல் வெளிவந்த 'துணிவு' படத்தின் டிரைலர் 69 மில்லியன் பார்வைகளுடன் அஜித் படங்களின் டிரைலர்களில் முதலிடத்தில் உள்ளது. அதற்கடுத்து இரண்டாவது இடத்தில் 39 மில்லியன்களுடன் இந்தப் படம் உள்ளது.
2. தக் லைப்
டிரைலர் - 35 மில்லியன்
இயக்கம் - மணிரத்னம்
இசை - ஏஆர் ரஹ்மான்
நடிப்பு - கமல்ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா
'நாயகன்' படத்திற்குப் பிறகு 38 வருடங்கள் கழித்து மணிரத்னம், கமல்ஹாசன் கூட்டணி மீண்டும் இணைய, அதில் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான், சிலம்பரசன், த்ரிஷா ஆகியோரும் சேர, எதிர்பார்ப்பு பல மடங்கு இருந்தது. ஆனால், அத்தனை எதிர்பார்ப்புகளையும் இந்தப் படம் ஏமாற்றியது. அந்த எதிர்பார்ப்புதான் இந்தப் படத்திற்கான டிரைலரை 35 மில்லியன் பார்வைகளைக் கடக்க வைத்தது. மூன்று வருடங்களுக்கு முன்பு வந்த 'விக்ரம்' படத்தின் டிரைலர் 50 மில்லியனைக் கடந்தது. அதை விட 'தக் லைப்' 15 மில்லியன் குறைவான பார்வைகளைத்தான் பெற்றுள்ளது.
3. கூலி
டிரைலர் - 28 மில்லியன்
இயக்கம் - லோகேஷ் கனகராஜ்
இசை - அனிருத்
நடிப்பு - ரஜினிகாந்த், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன், சத்யராஜ், சவுபின் ஷபிர், உபேந்திரா
இயக்குனர் லோகேஷ் கனகராஜ், ரஜினிகாந்த் கூட்டணி முதல் முறை இணைந்த படம். அவர்களோடு நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன், சத்யராஜ், சவுபின் ஷபிர், உபேந்திரா, இசையமைப்பாளர் அனிருத் என ஒரு வலுவான கூட்டணி இணைந்தது. அதனால், இந்தப் படத்திற்குத் தென்னிந்திய அளவில் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. தமிழில் 28 மில்லியன் பார்வைகளையும், தெலுங்கில் 10 மில்லியன் பார்வைகளையும் பெற்றது. கடந்த வருடம் வெளிவந்த 'வேட்டையன்' டிரைலர் பார்வைகளை விடவும் அதிகம் என்பது ஒரு ஆறுதல். 'ஜெயிலர்' டிரைலரை விடவும் குறைவு என்பது ஒரு ஏமாற்றம். அதே சமயம் 'ஜெயிலர் 2' படத்தின் அறிவிப்பு டிரைலர் 23 மில்லியன் பார்வைகளைப் பெற்றது ரஜினி ரசிகர்களுக்கு மகிழ்ச்சிதான்.
4. ரெட்ரோ
டிரைலர் - 24 மில்லியன்
டீசர் - 26 மில்லியன்
இயக்கம் - கார்த்திக் சுப்பராஜ்
இசை - சந்தோஷ் நாராயணன்
நடிப்பு - சூர்யா, பூஜா ஹெக்டே
புதிய கூட்டணி என்ற விதத்தில் இந்த வருடத்தில் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் இதுவும் ஒன்று. கார்த்திக் சுப்பராஜ், சூர்யா கூட்டணி முதல் முறை என்பதால் இப்படத்திற்கும் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. அதனால்தான் டீசர் 26 மில்லியன்களையும், டிரைலர் 24 மில்லியன்களையும் கடந்தது. இருந்தாலும் படம் ஏமாற்றியது. கடந்த வருடம் வெளியான சூர்யாவின் 'கங்குவா' டிரைலர் 38 மில்லியன் பார்வைகளையும், 'கங்குவா' க்ளிம்ப்ஸ் 40 மில்லியன் பார்வைகளையும், 'கங்குவா' சிசில் டீசர் 25 மில்லியன் பார்வைகளையும் பெற்றிருந்தது.
5. டிராகன்
டிரைலர் - 21 மில்லியன்
இயக்கம் - அஸ்வத் மாரிமுத்து
இசை - லியோன் ஜேம்ஸ்
நடிப்பு - பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர்
இந்த வருடத்தில் தனுஷின் இடத்தை பிரதீப் ரங்கநாதன் பிடித்துவிட்டாரோ என்ற ஒரு கேள்வியை எழுப்பிய படம் இது. படத்திற்கான 150 கோடி வசூல்தான் அதற்குக் காரணம். தான் நாயகனாக அறிமுகமான காலத்தில் இளைஞர்களுக்கான படங்களைக் கொடுத்து அவர்களிடத்தில் இடம் பிடித்தவர் தனுஷ். அதை 20 வருடங்களுக்குப் பிறகு இப்போது பிரதீப் ரங்கநாதன் செய்ய ஆரம்பித்துள்ளார். 2022ல் பிரதீப்பின் 'லவ் டுடே' டிரைலர் 11 மில்லியன் பார்வைகளைப் பெற்றது. அதனுடன் ஒப்பிடும் போது 10 மில்லியன் கூடுதலாக வந்துள்ளது. இந்த வருடம் வெளிவருவதாக அறிவிக்கப்பட்ட 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' படத்தின் 'பர்ஸ்ட் பன்ச்' வீடியோவும் 19 மில்லியனைக் கடந்துள்ளது.
6. விடாமுயற்சி
டிரைலர் - 20 மில்லியன்
டீசர் - 14 மில்லியன்
இயக்கம் - மகிழ் திருமேனி
இசை - அனிருத்
நடிப்பு - அஜித், த்ரிஷா
அஜித் நடித்து இந்த வருடம் வெளிவந்த முதல் படம் இப்படம்தான். இதற்குப் பிறகுதான் 'குட் பேட் அக்லி' வந்தது. இரண்டு படங்களின் டிரைலர்களுக்கான வித்தியாசமே 19 மில்லியன் உள்ளது. அதிலிருந்தே இந்தப் படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தவில்லை என்பதைப் புரிந்து கொள்ளலாம். அஜித்தின் 62வது படமாக அறிவிக்கப்பட்ட இந்தப் படத்திற்கு முன்பாக நடந்த பல குழப்பங்கள், இயக்குனர் மாற்றம் ஆகியவையும் இந்தப் படத்திற்கான ஒட்டு மொத்த வரவேற்பு குறைவதற்குக் காரணமாக இருந்தது.
7. மதராஸி
டிரைலர் - 19 மில்லியன்
இயக்கம் - ஏஆர் முருகதாஸ்
இசை - அனிருத்
நடிப்பு - சிவகார்த்திகேயன், ருக்மிணி வசந்த்
அஜித், விஜய், சூர்யா, ரஜினிகாந்த் என முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கிய ஏஆர் முருகதாஸ் ஒரு இடைவெளிக்குப் பிறகு இயக்க ஆரம்பித்த படம். ஏஆர் முருகதாஸ், சிவகார்த்திகேயன் என இதுவும் புதிய கூட்டணிதான். இந்தப் படத்தை இயக்க ஆரம்பித்த பின் ஹிந்தியில் சல்மான் கான் கூப்பிடுகிறார் என 'சிக்கந்தர்' படத்தை இயக்கப் போனார். இரண்டு படங்களிலும் மாறி மாறி பணியாற்றி இரண்டையும் கோட்டைவிட்டார். கடந்த வருடம் வெளிவந்த சிவகார்த்திகேயனின் 'அமரன்' டிரைலருடன் ஒப்பிடும் போது இப்படத்திற்கு 4 மில்லியன் பார்வைகள் கூடுதலாகக் கிடைத்துள்ளன.
8. பைசன் காளமாடன்
டிரைலர் - 15 மில்லியன்
இயக்கம் - மாரி செல்வராஜ்
இசை - நிவாஸ் கே பிரசன்னா
நடிப்பு - துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன்
அப்பா விக்ரம் படத்தை விடவும், மகன் துருவ் விக்ரம் படம் முன்னே நிற்கிறது. அப்பாவாக மகனைப் பார்த்து விக்ரம் பெருமைப்படத்தான் செய்வார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் தன்னை முழுமையாக ஒப்படைத்து இந்த ஒரு வெற்றியைப் பெற்றிருக்கிறார் துருவ் விக்ரம். டிரைலருக்குக் கிடைத்த வரவேற்பு படத்திற்கும் கிடைத்து இந்தப் படத்தை விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பேச வைத்தது.
9. வீர தீர சூரன் 2
டிரைலர் - 10 மில்லியன்
டீசர் - 15 மில்லியன்
இயக்கம் - எஸ்யு அருண்குமார்
இசை - ஜிவி பிரகாஷ்குமார்
நடிப்பு - விக்ரம், துஷாரா விஜயன், எஸ்ஜே சூர்யா
புதிய கூட்டணியில் வந்த இந்த ஆண்டின் மற்றுமொரு திரைப்படம். இப்படத்தின் அறிவிப்பையே ஒரு டிரைலராக வெளியிட்டு ஆச்சரியப்படுத்தினார்கள். இரண்டு வருடங்களுக்கு முன்பு 2023ல் வெளிவந்த அந்த வீடியோ 9 மில்லியன் பார்வைகளைக் கடந்தது. கடந்த வருடம் ஏப்ரல் மாதம் தலைப்பு அறிவிப்பு டீசர் வெளிவந்து 15 மில்லியன் பார்வைகளைப் பெற்றது. 'வீர தீர சூரன் 2' டீசர் கடந்த வருடம் டிசம்பர் மாதமும், அதன் டிரைலர் மார்ச் மாதமும் வெளிவந்தது. ஒரு படத்திற்கு இத்தனை முன்னோட்ட வீடியோக்கள் என்பது ஆச்சரியமான ஒன்று.
10. டியூட்
டிரைலர் - 5.9 மில்லியன்
டீசர் - 17 மில்லியன்
இயக்கம் - கீர்த்தீஸ்வரன்
இசை - சாய் அபயங்கர்
நடிப்பு - பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு
'டிராகன்' படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படமாக வந்தது. அந்தப் படத்தின் வரவேற்பும், வசூலும் இந்தப் படத்திற்கு ஒரு எதிர்பார்ப்பைக் கொடுத்தது. இளைஞர்களுக்கான படமாகவும் இருந்ததால் வரவேற்பைப் பெற்றது. இதன் டீசர் 17 மில்லியன் பார்வைகளைப் பெற்றிருந்தாலும், டிரைலர் 6 மில்லியனை மட்டுமே நெருங்கியது. டீசரில் செலுத்திய கவனத்தை டிரைலரில் செலுத்தவில்லை போலிருக்கிறது.
இந்த 2025ம் வருடத்தின் பட்டியலில் தனுஷ் நடித்த படம் இடம் பெறாமல் போனது ஆச்சரியம்தான். யு டியூப் தளத்தை 'ஒய் திஸ் கொலவெறி' பாடல் மூலம் 10 ஆண்டுகளுக்கு முன்பு ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்த்தவர் அவர்தான். இந்த ஆண்டில் அவர் இயக்கிய 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்,', இயக்கி நடித்த 'இட்லி கடை' ஆகிய படங்களின் டிரைலர்கள் டாப் 10 பட்டியலில் இல்லை. இருந்தாலும் இந்த ஆண்டில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் கதாநாயகனாக நடித்துள்ளார். அதில் ஹிந்திப் படமான 'தேரே இஷ்க் மென்' பட டிரைலர் 69 மில்லியன் பார்வைகளைப் பெற்றது. இந்த வருட தமிழ்ப்படங்களின் டிரைலர்கள், டீசர்கள் ஒன்று கூட 50 மில்லியனைக் கடக்கவில்லை என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.
2026ல் வெளியாக உள்ள 'ஜனநாயகன், பராசக்தி' ஆகிய படங்களின் டீசர் அல்லது டிரைலர் அடுத்த பத்து நாட்களுக்குள் வெளியாகலாம். அவையும், அதற்கடுத்து அடுத்த வருடத்தில் வர உள்ள முன்னணி நடிகர்களின் டீசர்கள், டிரைலர்கள் இந்த வருடம் போல இல்லாமல் ஏதாவது புதிய சாதனையைப் படைக்கப் போகிறதா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
இதுபோல, இந்தாண்டு வெளியான டீசர், டிரைலர்களில் உங்களுக்கு பிடித்தவற்றை கமென்டில் தெரிவிக்கவும்.