‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
தமிழ் திரையுலகில் குலை நடுங்கச் செய்யும் வில்லன் நடிகர் என்றாலே, சட்டென நம் நினைவிற்கு வருபவர் நடிகர் எம் என் நம்பியார் என்பது எழுதப்படாத விதியாகிப் போன ஒன்று. ஆரம்ப காலங்களில் கதையின் நாயகனாகவே நடித்து வந்த இவர், பின்னாளில் வில்லன் நடிகராக மாறி, தனது தனித்துவமிக்க உடல் மொழியாலும், வசன உச்சரிப்பாலும், அந்த வில்லன் கதாபாத்திரத்திற்கே ஒரு தனி அங்கீகாரம் தேடித் தந்த அடையாளமாகியும் போனார். இவர் கதாநாயகனாக நடித்து, சேலம் “மாடர்ன் தியேட்டர்ஸ்” தயாரிப்பில் வெளிவந்த “கல்யாணி”, “கவிதா” ஆகிய படங்களின் வரிசையில் வந்த மற்றுமொரு வெற்றித் திரைப்படம்தான் “திகம்பர சாமியார்”.
வடவூர் துரைசாமி ஐயங்கார் எழுதிய துப்பறியும் நாவல்தான் இந்த “திகம்பர சாமியார்”. ஊழல்வாதியான வழக்கறிஞர் சட்டநாதன் பிள்ளை செய்யும் சட்டவிரோத செயல்களையும், நடவடிக்கைகளையும் ஊருக்கு அம்பலப்படுத்த, சொக்கலிங்கம் பிள்ளை என்ற கதாபாத்திரத்தில் படத்தின் நாயகனாக நடித்திருக்கும் எம் என் நம்பியார், திகம்பர சாமியாராக எடுக்கும் முயற்சிகளையும், செயல்பாடுகளையும் சுற்றிச் சுழலுவதாக செல்வதுதான் இந்த “திகம்பர சாமியார்” திரைப்படத்தின் கதை.
துப்பறியும் நாயகனாக நடித்திருக்கும் எம் என் நம்பியார், 'செவிட்டு மந்திரவாதி', 'முகமதிய பிரபு', 'வெற்றிலை வியாபாரி', 'நாதஸ்வர வித்வான்', 'மைனர்', 'போஸ்ட்மேன்' என பல மாறுவேடங்களில் தோன்றி, தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதோடு ஒரு சாகஸ நாயகனாகவும் தன்னைக் காட்டியிருப்பார். மூன்று நாள்களுக்கு மேல் ஒருவர் இரவு பகலாகக் கண் விழிக்க நேர்ந்தால், மூளை தளர்ச்சியுற்று பொய்யைப் பொருத்தமாகச் சொல்லும் சக்தியை இழந்து விடுவார் என்ற அறிவியலின் கூற்றுப்படி, படத்தில் சட்டவிரோத செயல்களைச் செய்துவரும் வழக்கறிஞர் சட்டநாதன் பிள்ளையையும் மூன்று நாள்கள் இரவு பகல் தூங்கவிடாமல் செய்து, அதன்படி திகம்பர சாமியார் உண்மையை அவரிடமிருந்து வரவழைப்பதுபோல் காட்சிப் படுத்தப்பட்டிருந்தது அந்நாளில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்கத்தக்க ஒரு பேசு பொருளாகவே இருந்தது.
ஜி ராமநாதன், எஸ் எம் சுப்பையா நாயுடு என்ற இருபெரும் இசை ஜாம்பவான்களின் இசையமைப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தின் பாடல்களை, கா மு ஷெரீப், அ மருதகாசி, கே பி காமாட்சி சுந்தரம், தஞ்சை என் ராமையாதாஸ், கண்ணதாசன் ஆகியோர் எழுதியிருந்தனர். படத்தில் இடம் பெற்ற பாடல்களில் “ஊசிப் பட்டாசே ஊசிப் பட்டாசே” என்ற பாடல், 1949ல் வெளிவந்த இந்தி திரைப்படமான “பதங்கா” என்ற படத்தில் இடம் பெற்ற “ஓ தில்வாலோ தில் கா லகானா அச்சா ஹை” என்ற பாடலின் சாயலிலும், “பாருடப்பா பாருடப்பா பாருடப்பா” என்ற பாடல், 1949ல் வெளிவந்த “ஏக் தி லட்கி” என்ற இந்திப் படத்தின் பாடலான “லாரா லப்பா லாரா லப்பா” என்ற பாடலை அடிப்படையாகக் கொண்டும் மெட்டமைக்கப்பட்டிருந்தது.
மேலும் டி பாலசுப்ரமணியம், எம் எஸ் திரவுபதி, நரசிம்ம பாரதி, எம் ஜி சக்கரபாணி, வி கே ராமசாமி, டி கே ராமச்சந்திரன், சி கே சரஸ்வதி, லட்சுமி பிரபா, ஏ கருணாநிதி என ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருந்த இத்திரைப்படம், வணிக ரீதியாக ஒரு பெரும் வெற்றியை ஈட்டித் தந்து, சிறப்பித்திருந்தது “மாடர்ன் தியேட்டர்ஸ்” தயாரிப்பு நிறுவனத்திற்கு.