புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் |
தமிழ் திரையுலக கலைஞர்கள் ஒவ்வொருவரின் கவுரவம் என்பது அவர்கள் பணிபுரிந்து வந்த திரைப்படங்களின் எண்ணிக்கை 100 என்ற இலக்கை அடைந்து, வெற்றி என்ற ஒன்றை சுவைப்பதில்தான் உள்ளது. அந்த வகையில் இந்த 100வது திரைப்படம் என்பது எல்லோருக்கும் வெற்றித் திரைப்படங்களாக அமைந்துவிடுவதுமில்லை. இது அவர்களது கலையுலகப் பயணத்தின் மைல்கல் என்ற காரணத்தால், கதையை தேர்வு செய்வதிலிருந்து ஒவ்வொன்றிலும் மிக கவனமாகவும், எச்சரிக்கையாகவும் செயல்பட்டு தங்களது 100 திரைப்படத்தை வெளியிடுவர்.
எம் ஜி ஆருக்கு “ஒளி விளக்கு”, சிவாஜிக்கு “நவராத்திரி”, விஜயகாந்துக்கு “கேப்டன் பிரபாகரன்” என ஒரு சில நடிகர்களுக்கு மட்டுமே அவர்களது 100வது திரைப்படம் மாபெரும் வெற்றித் திரைப்படங்களாக அமைந்திருக்கின்றன. அந்த வரிசையில் 'நவரச நாயகன்' என அழைக்கப்படும் நடிகர் கார்த்திக் நடித்து வெளிவந்த அவரது 100வது திரைப்படம்தான் “உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்”.
குடும்ப உறவுகளின் உன்னதம், நட்பின் ஆழம் என இரண்டையும் வைத்து பல வெற்றித் திரைப்படங்களைத் தந்தவர்தான் இயக்குநர் விக்ரமன். இவரது இயக்கத்தில்தான் தனது 100வது திரைப்படமான “உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்” திரைப்படத்தைத் தந்திருந்தார் நடிகர் கார்த்திக். இவர் நடித்து, 1995ல் வெளிவந்த “கோகுலத்தில் சீதை” என்ற திரைப்படத்தை தயாரித்திருந்த “லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ்” என்ற தயாரிப்பு நிறுவனம்தான் கார்த்திக்கின் 100வது திரைப்படமான “உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்” திரைப்படத்தையும் தயாரித்திருந்தது.
1996ல் நடிகர் விஜய்யை வைத்து “பூவே உனக்காக” என்ற வெற்றித் திரைப்படத்தைத் தந்திருந்த இயக்குநர் விக்ரமன், தான் இயக்க இருக்கும் இந்தப் படத்திலும் அவரது நாயகன் தேர்வாக முதலில் இருந்தது நடிகர் விஜய்யே. தயாரிப்பு தரப்பில் நடிகர் கார்த்திக்கின் கால்ஷீட்கள் வாங்கி வைத்திருக்க, படத்தின் நாயகன் ஆனார் கார்த்திக். படப்பிடிப்பு ஆரம்பித்து தொடர்ந்து நடந்து வந்த வேளையில் நடிகர் கார்த்திக், இயக்குநர் விக்ரமனிடம் இது ஏற்கனவே நான் நடித்து வெளிவந்த “நந்தவனத் தேரு” திரைப்படம் போல் இருப்பதாக சொல்லி தன் அதிருப்தியை வெளிப்படுத்த, அதற்கு இயக்குநர் விக்ரமன் இந்தக் கதையின் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது.
நிச்சயம் இந்தத் திரைப்படம் ஒரு வெள்ளிவிழா திரைப்படமாக உருவாகும் என்று தனது அசைக்க முடியாத நம்பிக்கையை நடிகர் கார்த்திக்கின் மனதில் விதைக்க, நடிகர் கார்த்திக்கும் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் எனக்கு ஓகே தான் என சொல்லி நடித்துக் கொடுக்க, படமும் வெளிவந்தது. 1998ல் வெளிவந்த இத்திரைப்படம், இயக்குநர் விக்ரமன் சொல்லியது போலவே, ஒரு வெள்ளி விழா திரைப்படமாகி, நடிகர் கார்த்திக்கின் திரைப்பயணம் என்ற மகுடத்தில் பதித்த வைரமாகவும் மின்னியது இந்த “உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்” திரைப்படம்.