நடிகையின் ஆசையை நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலின் | அனுஷ்காவின் ‛காட்டி' டிரைலர் வெளியீடு : ரிலீஸ் தேதியும் அறிவிப்பு | ரவி மோகனை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் ஆர்யா | பராசக்தி படத்தில் நடிக்காதது ஏன் : லோகேஷ் கனகராஜ் விளக்கம் | ராம் சரண் படம் கைவிடப்பட்டது ஏன் : கவுதம் தின்னனூரி விளக்கம் | சிவகார்த்திகேயனின் மன அழுத்தத்தை போக்கும் பிள்ளைகள் | ‛கிங்டம்' படத்திற்கு எதிர்ப்பு : வருத்தம் தெரிவித்த படக்குழு | 23 ஆண்டுகளுக்கு பின் நாளை மறுநாள் ரீ-ரிலீஸ் ஆகிறது சுந்தரா டிராவல்ஸ் | ஆகஸ்ட் 8ல் 13 படங்கள் வெளியீடா ??? | வரவேற்பைப் பெறாத 'பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீமேக் |
மண் சார்ந்த படைப்புகளைத் தந்ததன் மூலமாக, படப்பிடிப்புத் தளத்தின் உள்ளே அடைபட்டுக் கிடந்திருந்த தமிழ் திரையுலகை வெளியுலகிற்கு எடுத்துச் சென்ற பெருமைமிகு படைப்பாளியாக பார்க்கப்படுபவர்தான் 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா. இவரது “16 வயதினிலே” திரைப்படத்தின் வருகைக்குப் பின், தென் தமிழகத்தின் செழுமை மிகு கிராமப்புறங்கள் ஒவ்வொன்றும் படப்பிடிப்புத் தளங்களாக பரிணாம வளர்ச்சி அடைந்ததை நாம் அறிவோம். கதையில் புதுமை, காட்சியமைப்பில் புதுமை என புதுமைகள் பல செய்து, தமிழ் திரையுலகை அடுத்த கட்ட உச்சத்திற்கு எடுத்துச் சென்ற இவர், சுதாகர், ராதிகா, கார்த்திக், ராதா, பாண்டியன், ரேவதி, சந்திரசேகர், விஜயசாந்தி, ஜனகராஜ், வடிவுக்கரசி, நெப்போலியன் என பல திரைக்கலைஞர்களையும், கே பாக்யராஜ், மணிவண்ணன், மனோபாலா, பொன்வண்ணன், போன்ற திறமைமிகு படைப்பாளிகளையும் தந்து புதுமை செய்தவர். அப்படி பல புது முகங்களை அறிமுகம் செய்து, புதிய கோணத்தில் இவர் தந்த ஒரு புரட்சிக் காவியம்தான் “நிழல்கள்”.
1980ம் ஆண்டு தீபாவளித் திருநாளில் வெளிவந்த இத்திரைப்படத்தின் வாயிலாகத்தான் ரவி என்ற 'நிழல்கள்' ரவி நாயகனாக வெள்ளித்திரைக்கு விஜயம் செய்தார். பாரதிராஜாவின் “நிறம் மாறாத பூக்கள்” படத்தின் ஆடிஷன் போதே நடிகர் விஜயனுக்காக டப்பிங் கலைஞராக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டு, பின் பாரதிராஜாவே அவருக்காக பின்னணி பேசி படம் வெளிவர, அந்த வாய்ப்பு ரவிக்கு கிடைக்காமல் கைநழுவிச் சென்று, பாரதிராஜாவின் அடுத்த படமான “நிழல்கள்” படத்தில் நாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்கப் பெற்று நாயகனானார். இந்தப் படத்திற்குப் பின் படத்தின் பெயரும் இவரோடு ஒட்டிக்கொண்டு 'நிழல்கள்' ரவி என அழைக்கப்பட்டார். பின்னாளில் பல நூறு பாடல்களை எழுதி, ஒரு தமிழ் திரையிசைக் கவிஞராக உச்சம் தொட்ட பாடலாசிரியர் வைரமுத்து, “பொன்மாலைப் பொழுது” என்ற தனது முதல் பாடலை எழுதி, பதிவு செய்ய காரணமாக அமைந்திருந்ததும் இந்த “நிழல்கள்” திரைப்படம்தான்.
குணச்சித்திரம், நகைச்சுவை, வில்லன் என பல்வேறுபட்ட கதாபாத்திரங்களில் எண்ணற்ற படங்களில் நடித்து, நம்மை மகிழ்வித்தவரும், ஏறக்குறைய 50 திரைப்படங்கள் வரை இயக்கி, ஒரு இயக்குநராக நம் இதயம் தொட்டவருமான இயக்குநர் மணிவண்ணனை ஒரு கதாசிரியராக, வசனகர்த்தாவாக நமக்கு அறிமுகப்படுத்தி அழகு பார்த்ததும் இந்த “நிழல்கள்”தான். இது தவிர, ஓரிரு படங்களில் சிறு சிறு வேடங்களில் வந்து போய்க் கொண்டிருந்த நடிகர் வாகை சந்திரசேகர், ஒரு நல்ல கதாபாத்திரமேற்று நடிக்கவும், “மடை திறந்து தாவும் நதி அலை நான்” என்ற பாடல் காட்சியில் தோன்றி நடிக்கும் வாய்ப்பினையும் பெற்றுத் தர காரணமாக அமைந்த திரைப்படமும் இந்த “நிழல்கள்”தான்.
மேலும் ராது என்ற நடிகை ரோஹிணி இந்தப் படத்தின் மூலமாகத்தான் அறிமுகமானார். “பாலைவனச்சோலை”, “கல்யாண காலம்”, “தூரம் அதிகமில்லை”, “சின்னப்பூவே மெல்லப் பேசு”, “மனசுக்குள் மத்தாப்பு”, “பறவைகள் பலவிதம்” போன்ற சில படங்களை இயக்கிய இரட்டை இயக்குனரான ராபர்ட்-ராஜசேகர் என்ற இரட்டையரில் ஒருவரான ராஜசேகர், ஒரு நடிகராக அவதாரம் எடுக்க அச்சாரமிட்டதும் இந்த “நிழல்கள்”தான். இத்தனை பெரிய ஆளுமைகளைத் தந்து புதுமை படைத்திருந்த போதிலும், “நிழல்கள்”, நிஜத்தில் வணிக ரீதியாக தோல்வியை சந்தித்திருந்தது என்பது துரதிர்ஷ்டமே.