என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் | விளையாட்டால் நிகழும் பிரச்னையே ‛கேம்' : சொல்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர் | தெலுங்கில் முதல் முறையாக நுழைந்த அக்ஷய் கன்னா ; சுக்ராச்சாரியார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் | கன்னட நடிகர் தர்ஷனுக்கு தனிமை சிறை ஏன்? நீதிமன்றத்தில் மனு தாக்கல் | 'திரிஷ்யம் 3' ; ஜீத்து ஜோசப் வெளியிட்ட முதல் புகைப்படம் | ஜீவாவின் 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | காதலில் கரைபவர் வெகு சிலரே : தனுஷின் ‛தேரே இஷ்க் மே' டீசர் வெளியீடு | கமல் பிறந்தநாள் : ரீ-ரிலீஸாகும் ‛நாயகன்' | படிப்புக்கும் நடிப்புக்கும் சம்பந்தமில்லை: பள்ளிகால அனுபவம் பகிர்ந்த அனுபமா பரமேஸ்வரன் |
பெரிய கல்வி ஞானமோ, பொருளாதார பின்புலமோ ஏதுமின்றி ஒரு மில் தொழிலாளியாக, ஒரு சாமானியனாக வெள்ளித்திரையில் நுழைந்து, இந்தியத் திரையுலகையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த ஒரு மாபெரும் தயாரிப்பாளர்தான் சாண்டோ எம் எம் ஏ சின்னப்ப தேவர்.
ஒரு சாதாரண மில் தொழிலாளியாக கோவையில் வேலை பார்த்து வந்த சின்னப்ப தேவர், ஒரு உணவகத்தில் சிற்றுண்டி சாப்பிட்டுக் கொண்டிருக்க, அவரது எதிரே அமர்ந்திருந்த இயக்குநர் எச் எல் என் சிம்ஹா சின்னப்ப தேவரின் கட்டுமஸ்தான உடம்பைப் பார்த்து சினிமாவில் நடிக்க வருகிறாயா? என்று அவரைப் பார்த்து கேட்க, எனக்கு விருப்பம்தான் இருந்தாலும் நான் மில்லில் வேலை செய்து வருகின்றேனே? என்று சின்னப்ப தேவர் பதிலளிக்க, வேலை நேரம் முடிந்த பின் நடிக்கலாம் என இயக்குநர் எச் எல் என் சிம்ஹா கூறியதோடு, தான் எடுக்கின்ற படத்திற்கு சின்னப்ப தேவரைப் போலவே கட்டுமஸ்தான இன்னொரு ஆளும் தேவை என்பதையும் அவரிடம் கூற, தனது அண்ணன் சுப்பையா தேவர் இருக்கிறார். நான் 'சாண்டோ' என்றால், எனது அண்ணன் 'பயில்வான்' என இயக்குநர் எச் எல் என் சிம்ஹாவிடம் கூறினார் சின்னப்ப தேவர்.
அதன்படி கோவை பிரீமியர் ஸ்டூடியோவில் படப்பிடிப்பும் ஆரம்பமானது. படத்தில் 'அஹி', 'மஹி' என்று இரண்டு ராட்சஸர்கள். ராட்சஸர்கள் கதாபாத்திரங்களில் வேறு இரண்டு நடிகர்கள் நடிக்கின்றனர். அவர்களுக்கு சண்டை போடத் தெரியாது. அவர்களுக்கு பதிலாகத்தான் நீங்கள் இருவரும் சண்டையிடப் போகின்றீர்கள். நிழல் காட்சியாகத்தான் படம் பிடிக்கப் போகின்றோம். அதனால் உங்கள் முகம் தெரியாது என்று இயக்குநர் எச் எல் என் சிம்ஹா சின்னப்ப தேவரிடம் விளக்கிக் கூற, ஏமாற்றம் அடைந்த சின்னப்ப தேவரும், அவரது அண்ணன் சுப்பையா தேவரும் முதல் பட வாய்ப்பு என்பதால் அதை தவறவிடக் கூடாது என்ற எண்ணம் கொண்டு, ஒரு இருட்டுக் குகை போன்ற செட்டிற்குள் 'அஹி'யும் 'மஹி'யுமாக மோதிக் கொள்ள படப்பிடிப்பு ஆரம்பமானது.
முதல் பட வாய்ப்பு என்பதால் சண்டை சரியாகப் போடவில்லை என்று படத்திலிருந்து நம்மை நீக்குவதற்கும் வாய்ப்பு உள்ளது. எனவே நிஜமாகவே நாம் சண்டையிடுவோம் என்று சின்னப்ப தேவரும், அவரது அண்ணன் சுப்பையா தேவரும் மோதிக் கொண்டு, பலத்த காயங்களோடு படப்பிடிப்பு முடிந்து வீடு திரும்பினர். சாண்டோ சின்னப்ப தேவருக்கும், அவரது அண்ணன் பயில்வான் சுப்பையா தேவருக்கும் தலா ஐந்து ரூபாய் ஊதியமாகத் தந்து அனுப்பினார் இயக்குநர் எச் எல் என் சிம்ஹா. பின்னாளில் மிகப் பெரிய தயாரிப்பாளராக, இயக்குநராக தென்னிந்தியத் திரையுலகையே தன்பால் ஈர்க்கச் செய்திருந்த இயக்குநர் பி ஆர் பந்துலுவுக்காகத்தான் சாண்டோ சின்னப்ப தேவர் 'டூப்'பாக நடித்திருந்தார். அந்தப் படம்தான் “திலோத்தமா”. 1940ல் வெளிவந்த இத்திரைப்படம் பெரும் வெற்றியையும் பெற்றது.