பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது | ரெட்ரோ டிரைலர் : விதவிதமாய் 'குக்' செய்துள்ள கார்த்திக் சுப்பராஜ் |
70ஸ் கிட்ஸ்களுக்கும், 80களில் இளம் பருவத்தில் இருந்தவர்களுக்கும் மறக்க முடியாத ஒரு படம் 'வருஷம் 16'. பாசில் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், கார்த்திக், குஷ்பு, ஜனகராஜ், சார்லி உள்ளிட்ட பலர் நடித்து 18 பிப்ரவரி 1989ம் ஆண்டு வெளிவந்த படம். இன்றுடன் 36 வருடங்களை நிறைவு செய்கிறது.
மலையாளத்தில் பாசில் இயக்கத்தில் வெளிவந்த 'என்னேன்னும் கண்ணேட்டன்டே' என்ற மலையாளப் படத்தின் ரீமேக்தான் இந்த 'வருஷம் 16'.
கிராமத்து கோவில் திருவிழாவுக்காக தனது தாத்தா வீட்டுக்கு போகிறார் கார்த்திக். அவரது முறைப் பெண்ணான டில்லியில் வசிக்கும் குஷ்புவும் அந்த வீட்டுக்கு வருகிறார். இருவருக்குள்ளும் காதல் வருகிறது. ஆனால், இந்த காதலுக்கு குஷ்புவின் பாட்டி எதிர்ப்பு தெரிவிக்கிறார். இதனால், குடும்பத்தில் குழப்பம் வருகிறது. காதலர்கள் எதிர்ப்புகளை மீறி ஒன்று சேர்ந்தார்களா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள பத்மநாபபுரம் அரண்மனையில்தான் இப்படத்தின் பெரும்பான்மையான காட்சிகள் படமாக்கப்பட்டன. படம் முழுவதும் ஒரு பெரிய குடும்பத்தின் பாசம், ரகளை, மகிழ்ச்சி, சோகம், நட்பு என அந்தக் கால சினிமா ரசிகர்களை இப்படம் வெகுவாகக் கவர்ந்தது. ஒரு முறை பார்த்தவர்களே திரும்பத் திரும்ப பல முறை படத்தைப் பார்த்தார்கள். பல சிறிய ஊர்களில் கூட இப்படம் 100 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடியது.
கார்த்திக் - குஷ்பு ஜோடியின் முதல் படம். பொருத்தமான காதல் ஜோடி என ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இரண்டாவது படத்திலேயே தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் குஷ்பு. கார்த்திக்கின் துறுதுறு நடிப்பை இன்று வரையிலும் எந்த ஒரு ஹீரோவாலும் மிஞ்ச முடியாது என்பதே உண்மை. கண்ணன், ராதிகா இருவரும் இன்னும் மறக்க முடியாத கதாபாத்திரங்கள். இருவரும் சேர்ந்துவிட மாட்டார்களா என்று படம் பார்க்கும் போது பதைபதைக்க வைத்தவர்கள்.
விகே ராமசாமி, ஜனகராஜ், சார்லி உள்ளிட்டோரின் நகைச்சுவை, பூர்ணம் விஸ்வநாதனின் குணச்சித்திர நடிப்பு, பேபி ஷாலினி, டிங்கு உள்ளிட்டோரின் குறும்புத்தனம், விஜய் மேனனின் வில்லத்தனம், வடிவுக்கரசியின் காதல் எதிர்ப்பு, ஜெயபாரதியின் தாய்ப் பாசம் என இந்தப் படத்தின் கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் மனதில் பதிந்தவை.
இளையராஜாவின் இசையில் படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்துமே சூப்பர் ஹிட்டானவை. அப்போதைய கேசட் பதிவுக் கடைகளில் இந்தப் படத்தின் பாடல்களை பதிவு செய்தவர்கள் மிக அதிகம். “பழமுதிர்ச்சோலை எனக்காகத்தான், ஹே ஐயாசாமி, பூ பூக்கும் மாசம், கங்கைக் கரை மன்னனடி' ஆகிய பாடல்கள் வானொலிகளில் தொடர்ந்து ஒலித்தவை. இப்போதும் கார் பயணங்களில் இந்தப் பாடல்களைக் கேட்காதவர்கள் இருக்க முடியாது.
வருஷம் 16 போன்ற படங்கள் ஒரு காவியம். அது போன்றதொரு படம் இந்த 36 ஆண்டுகளில் வந்ததில்லை என்பது உண்மை.