மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திற்கு 'பராசக்தி' என்று தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. நடிகர் திலகம் சிவாஜியின் முதல் படத்தின் தலைப்பான 'பராசக்தி' என்ற டைட்டிலை பயன்படுத்த கூடாது என்று சிவாஜி சமூக நல பேரவையினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது : 'பராசக்தி' என்பது வெறும் திரைப்படப் பெயர் மட்டுமல்ல. தமிழ்த் திரையுலக வரலாற்றை 1952க்கு முன் - 1952க்குப் பின் என்று பிரித்துப் பார்க்கலாம். பாடல்களே படங்களாக, பாடத் தெரிந்தவர்களே நடிகர்களாக இருந்ததை மாற்றி, அனல் தெறிக்கும் வசனங்கள், உணர்ச்சியைத் தூண்டும் நடிப்பு, இவற்றோடு சமுதாய புரட்சியையும் ஏற்படுத்திய 'பராசக்தி' திரைப்படத்தின் பெயரை மீண்டும் ஒரு திரைப்படத்திற்கு வைப்பது என்பதை ஏற்றுக் கொள்ளவே இயலாது.
நடிகர்திலகம் சிவாஜியை, தமிழ் திரையுலகம், கலையின் கொடையாக உலகிற்குத் தந்த திரைப்படம் தான் 'பராசக்தி'. தமிழ்த் திரையுலகுக்கு இப்போது என்ன ஆயிற்று என்றே தெரியவில்லை? கதைப் பஞ்சம் இருப்பதை புரிந்து கொள்ளமுடிகிறது. கருத்துள்ள பல பழைய பாடல்களை ரீமிக்ஸ் என்ற பெயரில் சிதைக்கிறார்கள். இப்போது, படத் தலைப்பிற்கும் பஞ்சம் ஏற்பட்டுள்ளதா? ஏற்கனவே பராசக்தி என்ற பெயரில் ஒரு திரைப்படம் எடுக்க முயன்றபோது, அதற்கான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு, 'மீண்டும் பராசக்தி' என்ற பெயரில் அந்தத் திரைப்படம் வெளியானது.
தற்போது மீண்டும், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் திரைப்படத்திற்கு 'பராசக்தி' என்று பெயர் சூட்டியிருப்பது லட்சோசோப லட்சம் நடிகர் திலகம் சிவாஜி ரசிகர்களை மட்டுமல்லாமல், உலகெங்கிலும் வாழும் தமிழ் சினிமாவை நேசிப்பவர்களுக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது. வேண்டுமென்றே தமிழ்த் திரையுலக வரலாற்றை சிதைக்க முற்படும் இந்த போக்கிற்கு எங்களுடைய கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.
'பராசக்தி' என்ற பெயரை உடனடியாக மாற்றி அமைக்க வேண்டும் என்று இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் படக்குழுவினரை கேட்டுக்கொள்கிறோம். பராசக்தி என்ற பெயரை மாற்றவில்லை என்றால் ரசிகர்களை ஒன்றுதிரட்டி போராட்டம் நடத்தப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.