துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | ஜிவி பிரகாஷ்குமார் - நடிப்பில் 25, இசையில் 100 | விடாமுயற்சி படத்துடன் மோதும் தண்டேல் | சினேகன் - கன்னிகாவுக்கு இரட்டை பெண் குழந்தை | அமெரிக்காவிலிருந்து புதிய கதையுடன் சென்னை திரும்பிய கமல் | 100 கோடியைக் கடந்த 'ஸ்கை போர்ஸ்' | 'என் இனிய பொன் நிலாவே' பாடல் : இளையராஜாவுக்கு உரிமையில்லை என நீதிமன்றம் தீர்ப்பு | 'பராசக்தி' தலைப்பு தொடரும் சிக்கல் ? | பொங்கல் படங்களில் தாக்குப் பிடிக்கும் 'மத கஜ ராஜா' |
“ஊருக்காக உழைக்கும் கைகள் உயர்ந்திட வேண்டாமோ, அவை உயரும்போது இமயம் போலத் தெரிந்திட வேண்டாமோ, பிறருக்காக வாழும் நெஞ்சம் விரிந்திட வேண்டாமோ, அது விரியும்போது குன்றைப் போல நிமிர்ந்திட வேண்டாமோ” என்று அவர் பாடிய பாடல் வரிகளுக்கேற்ப நிஜ வாழ்விலும் வாழ்ந்து காட்டி, நிரந்தரமாய் மக்கள் மனங்களில் நிலைத்து நின்றவர்தான் பொன்மனம் கண்ட 'புரட்சித் தலைவர்' எம் ஜி ஆர்.
இயல்பிலேயே தீய பழக்க வழக்கங்கள் ஏதும் இல்லாதவராகவே வாழ்ந்து மறைந்த எம் ஜி ஆர், வளர்ந்து வரும் இளைய சமுதாயத்தின் நலன் கருதி, அவர்களின் எதிர்கால வாழ்வினை மனதிற் கொண்டு, தான் நடித்த எந்த ஒரு திரைப்படத்திலும் புகைப்பது, மது அருந்துவது, பெண்களை துன்புறுத்துவது போன்ற காட்சிகளில் அவர் நடித்ததே இல்லை. ரசிகர்கள் மற்றும் உடன் நடிக்கும் கலைஞர்களின் நலனிலும் மிகுந்த அக்கறை கொண்டவராகவே இருந்தவர்தான் 'மக்கள் திலகம்' எம் ஜி ஆர்.
1968ம் ஆண்டு ஆர் எம் வீரப்பனின் “சத்யா மூவீஸ்” தயாரிப்பில் வெளிவந்த திரைப்படம்தான் “கண்ணன் என் காதலன்”. எம் ஜி ஆர், ஜெயலலிதா, வாணிஸ்ரீ ஆகியோர் நடித்திருந்த இத்திரைப்படத்தில், ஜெயலலிதா கால் ஊனமுற்றவரைப் போல் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி நடித்திருப்பார். படப்பிடிப்பில் கலந்து கொண்ட எம் ஜி ஆர், அவர் சம்மந்தப்பட்ட காட்சிகளில் நடித்து முடித்துவிட்டு புறப்படத் தயாராகி காரில் ஏறும் சமயம், இயக்குநரைப் பார்த்து, ''மதியம் என்ன காட்சி எடுக்கப் போகிறீர்கள்?'' என கேட்க, ''சக்கர நாற்காலியிலிருந்து ஜெயலலிதா மாடிப்படியில் உருண்டு விழும் காட்சி'' என்று இயக்குநர் சொன்னவுடன், காரில் ஏறி புறப்படத் தயாரான எம் ஜி ஆர், ''அது கவனமாக எடுக்க வேண்டிய காட்சி அல்லவா? நானும் உடன் இருக்கிறேன்'' என கூறி காரில் இருந்து இறங்கிவிட்டார்.
மாடிப்படியில் இருந்து உருளப்போவது டூப் என்றாலும், மாடிப்படியின் விளிம்பு வரை சக்கர நாற்காலியில் அமர்ந்து ஜெயலலிதா வரவேண்டும். படியின் விளிம்பைத் தாண்டி நாற்காலி கூடுதலாக சிறிது நகர்ந்தாலும் ஜெயலலிதா கீழே விழுந்துவிடுவார். ஆகவே முன்னேற்பாடாக சக்கர நாற்காலி அந்த குறிப்பிட்ட தொலைவிற்கு மேல் நகர முடியாதபடி நாற்காலியின் பின்னே கயிறு கொண்டு கட்டச் செய்து, அதில் எம் ஜி ஆரே அமர்ந்து படியின் விளிம்பு வரை நகர்ந்து பார்த்து, கயிறு இறுக்கமாக கட்டப்பட்டுள்ளதா என்பதை ஒருமுறைக்கு பலமுறை சோதித்து உறுதி செய்யப்பட்ட பின்புதான் ஜெயலலிதா நடிக்க வேண்டிய அந்தக் காட்சியை படமாக்கினர் படக்குழுவினர்.
இவ்வாறு தன்னோடு நடிக்கும் சக கலைஞர்கள், ஸ்டன்ட் நடிகர்கள் என ஒவ்வொருவரின் நலனிலும் மிகுந்த அக்கறை காட்டி, மனிதநேயத்தின் மறு உருவமாக வாழ்ந்து மறைந்தவர்தான் 'மக்கள் திலகம்' எம் ஜி ஆர். இன்று (டிச.,24) அவரது நினைவு தினம்.