வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் | ‛96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி |
எம் ஜி ஆர், சிவாஜிக்குப் பின், தமிழ் திரையுலகின் அடுத்த தலைமுறை நாயகர்களாகவும், 1970களின் இறுதியில் வளர்ந்து வரும் இளம் நாயகர்களாகவும் அறியப்பட்டவர்கள்தான் நடிகர் ரஜினிகாந்தும், நடிகர் கமல்ஹாசனும். இயக்குநர் கே பாலசந்தரின் அறிமுக நாயகர்களான இவர்கள் இருவரும் ஆரம்ப காலங்களில் பல திரைப்படங்களில் இணைந்து நடித்தும் வந்தனர். “அபூர்வ ராகங்கள்”, “ஆடுபுலி ஆட்டம்”, “அவள் அப்படித்தான்”, “நினைத்தாலே இனிக்கும்”, “இளமை ஊஞ்சலாடுகிறது”, “அலாவுதீனும் அற்புத விளக்கும்” என இவ்விருவர் இணைந்து நடித்த திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றிருந்தன.
ஒரு காலகட்டத்திற்குப் பின் இவ்விருவரும் இணைந்து நடிப்பதை தவிர்த்து, தனித்தனியே நடித்து பிரபலமாகத் தொடங்கினர். இவ்விருவரும் மீண்டும் இணைந்து ஒரு படத்திலாவது நடித்து விடமாட்டார்களா? என்ற ஏக்கமும், ஆசையும் அவரவர் ரசிகர்கள் மத்தியில் இன்றும் இருந்து வருவதை யாராலும் மறுக்க இயலாது. அப்படிப்பட்ட இந்த இருபெரும் நடிகர்களை அன்றைய காலகட்டத்தில் தங்களது தயாரிப்பில் உருவாகும் ஒரு படத்தில் நடிக்க வைத்துவிட வேண்டும் என்ற ஏ வி எம்மின் விருப்பத்தைத்தான் நாம் இங்கு காண இருக்கின்றோம்.
“ஆடுபுலி ஆட்டம்” படத்தின் படப்பிடிப்பு ஏ வி எம்மின் ஒரு தளத்தில் நடைபெற்று வந்த நிலையில், படத்தின் இயக்குநரான எஸ் பி முத்துராமன் நடிகர் ரஜினிகாந்தைப் பார்த்து ஏ வி மெய்யப்ப செட்டியாரைப் பார்க்கிறாயா? என கேட்க, கரும்பு திண்ண கூலியா? என்பதைப் போல், அப்போது வளர்ந்து வரும் நடிகராக இருந்த நடிகர் ரஜினியும் ஆர்வத்தோடு தலையசைக்க, ஏ வி மெய்யப்ப செட்டியாரை சந்தித்து அவரிடம் ரஜினியை அறிமுகம் செய்து வைத்தார் இயக்குநர் எஸ் பி முத்துராமன். ரஜினியைப் பார்த்த ஏ வி மெய்யப்ப செட்டியார், உன் படங்களை எல்லாம் பார்த்திருக்கிறேன். நன்றாக நடிக்கின்றாய். நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று ரஜினியை ஆசிர்வதித்ததோடு, இயக்குநர் எஸ் பி முத்துராமனை அழைத்து, 1956ல் ஹிந்தியில் ஏ வி எம் தயாரித்த “பாய் பாய்” என்ற திரைப்படத்தை மீண்டும் தமிழில் எடுக்கும் தனது விருப்பத்தைக் கூறியதோடு, அந்தப் படத்தில் ரஜினியையும், கமலையும் நடிக்க வைக்க வேண்டும் என்ற தனது ஆசையை வெளிப்படுத்தி, படத்தை நீயே இயக்கு என்று சொன்னவுடன் இயக்குநர் எஸ் பி முத்துராமன் அவரது காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்று, அதற்கான முயற்சியிலும் இறங்கினார்.
1954ம் ஆண்டு இயக்குநர் சி வி ஸ்ரீதரின் கதையான “ரத்தபாசம்” படத்தின் கதையை, நடிகர் டி கே சண்முகம் மற்றும் டி கே பகவதி தங்களது “அவ்வை புரொடக்ஷன்ஸ்” சார்பில் படமாக எடுத்திருந்தனர். அந்தக் கதையின் ஹிந்தி உரிமையை ஏ வி எம்; வாங்கி “பாய் பாய்” என்ற பெயரில் தயாரித்து வெளியிட்டனர். அசோக்குமார், கிஷோர் குமார் நடித்த இத்திரைப்படத்தை மீண்டும் தமிழில் எடுக்க விரும்பிய ஏ வி மெய்யப்ப செட்டியாரின் திடீர் மறைவிற்குப் பின், அவரது புதல்வர்கள் தந்தையின் ஆசைப்படி அந்தப் படத்தை ரஜினி மற்றும் கமல்ஹாசனை வைத்து எடுத்துவிடலாம் என முடிவெடுத்து, இயக்குநர் எஸ் பி முத்துராமனை அதற்கான ஏற்பாடுகளை செய்யச் சொல்ல, நடிகர் கமல்ஹாசன் சம்மதம் தெரிவிக்க மறுத்துவிட்டார்.
நானும் ரஜினியும் இனி ஒன்றாக நடிப்பதாக இல்லை. இருவரும் தனித்தனியாக நடிப்பதாக முடிவெடுத்ததைச் சொல்ல, அதன் பிறகு இவ்விருவரின் கால்ஷீட்டையும் பெற்று தனித்தனியாக ஏ வி எம் தயாரித்து, எஸ் பி முத்துராமன் இயக்கி 1980ல் ரஜினி ஏ வி எம்மிற்காக நடித்த முதல் திரைப்படமான “முரட்டுக்காளை”யும், அதன்பின் 1982ல் கமல்ஹாசன் நடிப்பில் ஏ வி எம் தயாரிக்க, எஸ் பி முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த “சகலகலா வல்லவன்” திரைப்படமும் வெளிவந்து மாபெரும் வெற்றித்திரைப்படங்களாக அவ்விருவருக்கும் அமைந்ததோடு, ஏ வி எம்மிற்கும், இயக்குநர் எஸ் பி முத்துராமனுக்கும் பேர் சொல்லும் படங்களாகவும் அமைந்திருந்தன.