வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் | ‛96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி |
கமல்ஹாசன் தயாரிப்பில் வெளியாகி உள்ள 'அமரன்' படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்துள்ள இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கி உள்ளார். கமல்ஹாசன் வெளிநாட்டில் இருப்பதால் ஓரிரு நிகழ்வு தவிர்த்து படத்தின் மற்ற புரமோசன் நிகழ்வில் அவர் கலந்து கொள்ளவில்லை. இந்த நிலையில் படத்தை பாராட்டி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
திரையிட்ட இடங்களில் எல்லாம் 'அமரன்' படத்துக்கு மகத்தான வரவேற்பு கிடைத்துள்ளது. அமரன் திரைப்படத்தை அறிவித்தபோது 'சில வேலைகள் சந்தோஷத்தைத் தரும், சில வேலைகள் கவுரவத்தையும், பெருமையையும் தரும். அமரன் அனைவருக்குமே பெருமைத் தேடித் தரும் என்று சொன்னேன். 1000 நாட்களுக்கும் மேலான உழைப்புக்குப் பிறகு வெளியான அமரன் அடைந்திருக்கும் வெற்றி 'மக்கள் நல்ல படத்தைக் கொண்டாடுவார்கள்' எனும் எனது நம்பிக்கையை உறுதி செய்திருக்கிறது.
மேஜர் முகுந்த் வரதராஜன் இந்தத் தேசத்துக்காக எதிரிகளுடன் தீரத்துடன் போரிட்டு வீர மரணம் எய்தியவர். அன்புத் தந்தையை இழந்த மகள், அருமைக் கணவனை இழந்த மனைவி, ஆசை மகனைப் பறிகொடுத்த பெற்றோர், உயிர் நட்பைப் பறி கொடுத்த நண்பர்கள் சிந்திய கண்ணீர் அளவீடற்றவை. மேஜர் முகுந்த் சிந்திய ரத்தத்திற்கும், அவரது அன்புக்குரியவர்கள் சிந்திய கண்ணீருக்குமான எங்களது எளிய காணிக்கைதான் அமரன். இது தனியொரு நபரின் சரிதை மட்டுமல்ல. இந்திய நிலப்பரப்பைக் காக்கும் ஒவ்வொரு வீரர் மற்றும் ஒவ்வொரு இந்தியக் குடும்பத்தின் கதையும் தான்.
ஒரு நிஜமான கதாபாத்திரத்துக்கு உயிரூட்டப் போகிறோம் என்பதை உணர்ந்து தன்னை முழுதாக அர்ப்பணித்து மேஜர் முகுந்த் வரதராஜனாகவே வாழ்ந்திருக்கிறார் சிவகார்த்திகேயன். இந்தப் படத்தின் மூலம் சிவகார்த்திகேயனின் திரைப்பயணம் புதிய பரிமாணத்தை அடைந்துள்ளது. இந்தப் படத்திற்கான அவரது முழுமையான பங்களிப்பும், உழைப்பும் திரை ரசிகர்களால் நீண்ட காலத்துக்குப் போற்றப்படும் என்பதில் ஐயமில்லை. வாழ்த்துக்கள்சிவகார்த்திகேயன்.
ஒரு நல்ல திரைப்படம் என்பது தனிக் கனவு அல்ல. இயக்குனர், கதாநாயகன், தயாரிப்பாளர் தொடங்கி மொத்த அணியுமே நன்மையில் நம்பிக்கை வைத்து உழைக்க வேண்டிய பொதுக்கனவு. இந்தப்படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிய சாய், எடிட்டர் கலை உள்ளிட்ட அனைத்துத் தொழில்நுட்பக் கலைஞர்களும், நடிகர் நடிகைகளும் அர்ப்பணிப்புடன் உழைத்து அமரன் எனும் பொதுக் கனவைச் சாத்தியமாக்கி இருக்கிறார்கள்.
தன்னைத் தந்து மண்ணைக் காத்த தமிழ் வீரனுக்கான சிறந்த சமர்ப்பணமாகவும், நாமறியாத ராணுவ வாழ்க்கையை, அவர்களின் குடும்பத்தார் செய்யும் தியாகங்களை மக்கள் அறிந்து கொள்ளக் கூடிய படமாகவும் அமரன் அமைந்ததில் நானும், எனது சகோதரர் ஆர்.மகேந்திரனும், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும் பெருமை கொள்கிறோம். ஜெய்ஹிந்த்
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.