வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் | ‛96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி |
வணிக ரீதியாக பெரிய வெற்றியை பெறாவிட்டாலும் விமர்சன ரீதியாக வெற்றி பெற்ற படம் நந்தன். வெள்ளித்திரையை விட ஓ.டி.டி தளத்தில் வெளியான குறைந்த நாட்களிலேயே அதிக பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. பொழுதுபோக்கு, வணிக ரீதியாக பிரமாண்டத்தை விடுத்து குறைந்த பட்ஜெட்டில் சமூக பார்வையுடன் படங்களை எடுத்து பெயர் பெற்ற இயக்குனர் சரவணன் தான் நந்தனையும் இயக்கி பாராட்டுக்களை குவித்து வருகிறார்.
கத்துக்குட்டி, உடன்பிறப்பே, நந்தன் என இயக்கிய மூன்று படங்களிலும் உறவுகளின் வழியாக சமூக கருத்துக்களை வலியுறுத்தி சினிமாவையும் தாண்டி அனைத்து தரப்பினரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.
தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக அவருடன் பேசியதிலிருந்து...
உள்ளாட்சி அமைப்புகள் தான் ஜனநாயகத்தின் அடித்தளம். ஜனநாயகம், இடஒதுக்கீடு பெயரில் பின்தங்கியவர்களுக்கு உரிய அங்கீகாரத்தை வழங்குகிறோமா என்றால் உண்மையில் இல்லை என்று தான் சொல்வேன். ஒரு தொகுதி ரிசர்வ் தொகுதியாக மாறுகிறது என்றால் அங்குள்ள அச்சமூகத்தினருக்கு மாற்றம், முன்னேற்றம் ஏற்பட வேண்டும். அது நடப்பதில்லை.
பத்திரிகையில் பணிபுரிந்த போது பல கிராமங்களுக்கு சென்ற போது நெஞ்சில் அறைந்த அந்த நிஜத்தை படமாக்க முடிவு செய்தேன். அப்படி அமைந்தது தான் நந்தன். அது நிஜ, உண்மை, புராண, இதிகாசம் என எந்த கதையாக இருந்தாலும் நந்தனுக்கு ஏற்பட்ட அநீதி இன்றும் நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.
முதலில் இந்த படத்தை நடிகர் சூரியை வைத்து இயக்க இருந்தேன். அந்த கேரக்டருக்கு சூரி சரியாகவும் இருப்பார். ஆனால் அவர் விடுதலை படத்தில் பிசியாக இருந்தார். பிறகு நானே நடிக்கிறேன் என சசிகுமார் முன்வந்தார். எனக்கு அவர் இப்படி கூறியதும் முதலில் தயக்கம் இருந்தது. ஆனால் அவர் இந்தளவுக்கு மெனக்கெடுவார் என நினைக்கவேயில்லை. நந்தனில் கேரக்டருக்கு தகுந்தவாறு சசிகுமார் மாறி விட்டார்.
பாராட்டு, விருதுக்காக நந்தன் எடுக்கப்படவில்லை. நம் கண் முன் நடக்கும் ஒரு துயரம் 50, நுாறு ஆண்டுகள் என்றில்லை... இன்றளவுக்கும் நடக்கிற அவலம். நிஜத்தை சொல்ல வேண்டும் என நானும் சசிக்குமாரும் பேசி தான் படத்தை உருவாக்கினோம். இதுபோன்ற படங்களை எடுக்கும் போது லாபத்தை எதிர்பார்க்க முடியாது. முடிந்தளவுக்கு நஷ்டத்தை எப்படி சரிகட்டலாம் என யோசித்தோம். அதன்படி நந்தன் இன்று எல்லோரையும் கவர்ந்திருக்கிறான்.
காதல் சப்ஜெக்ட் மூலம் மீத்தேன் திட்டத்தால் விவசாயிகளுக்கு எந்தளவுக்கு பாதிப்பு என்பதை மையப்படுத்தியது தான் நான் முதலாவதாக இயக்கிய 'கத்துக்குட்டி'.
'உடன் பிறப்பே' அண்ணன் தங்கை பாசத்தை பிரதிபலித்தாலும் சமூக பார்வையுடன் கூடிய கருத்துக்களை சொல்லியிருந்தேன். என்னை பொறுத்தவரையில் குடும்பம், உறவு சரியாக இருந்தால் மனிதன் சரியாக இருப்பான். சமூகக் கேடுகளுக்கு காரணம் நம்மை கண்டிக்க யாரும் இல்லை என்ற தைரியம் தான். ஒவ்வொரு படமும் ஒரு வகையில் சமூகத்திற்கு பயனளிப்பதாகவும் அமைய வேண்டும். என் அடுத்த படைப்புகளும் அதுபோல தான் அமையும்.
உண்மையிலேயே எனக்கு நடிக்க தெரியாது. பொதுவெளியில் பேச கூச்சப்படுவேன். ஆனாலும் ஒரு காட்சி எந்த மாதிரி அமைய வேண்டும் என தெரிவித்தால் போதும். நடிகர்கள் அதை பிரதிபலித்து விடுவர்.
தற்போது தமிழ் சினிமா ஆரோக்கியமாக, அற்புதமாக சென்று கொண்டுள்ளது. கமர்ஷியல் ரீதியாக படங்களை எடுத்தாலும் கூட அதில் சமூகம் சார்ந்த விஷயங்களை சொல்வது பாராட்டுக்குரியதாகும்.
பொதுவாக தீபாவளி, பொங்கலுக்கு சொந்த ஊரான தஞ்சாவூர் புனல்வாசலுக்கு சென்று விடுவேன். நண்பர்களுடன் கொண்டாடுவதுண்டு. தீபாவளிக்கு எங்கள் வீட்டிலிருந்து பலகாரங்கள் சுற்றியுள்ள மற்ற சமூக வீடுகளுக்கு சென்று விடும். கிறிஸ்துமஸ் என்றால் அந்த வீடுகளிலிருந்து வரும் கேக்குகள் எங்கள் வீட்டில் குவிந்து விடும் என்றவர், 'அடுத்த பட டிஸ்கஸ்ஷனுக்கு ரெடியாகணும்' என்றவாறு விடைபெற்றார்.