வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் | ‛96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி |
எங்கும் முதன்மை, எதிலும் முதன்மை என்ற எண்ணம் கொண்ட புதுமை விரும்பியான திரைப்பட அதிபரும், இயக்குநருமான டி.ஆர் சுந்தரத்தால் உருவாக்கப்பட்டதுதான் கலையுலக கனவுக்கூடமான “மாடர்ன் தியேட்டர்ஸ்”. எஸ்.எஸ் வாசனின் “ஜெமினி ஸ்டூடியோஸ்”, ஏவி மெய்யப்ப செட்டியாரின் “ஏவிஎம் ஸ்டூடியோஸ்”, பி நாகிரெட்டியின் “விஜயா வாஹினி ஸ்டூடியோஸ்” ஆகிய இந்த மாபெரும் மூன்று படப்பிடிப்புத் தளங்களும் சென்னையில் இயங்கி வந்த நிலையில், சேலத்திலிருந்து ஏற்காடு செல்லும் மலையடிவாரத்தில் 10 ஏக்கர் நிலப்பரப்பில், 1936ம் ஆண்டு நிறுவப்பட்ட இந்நிறுவனம், தனது முதல் படைப்பான “சதி அகல்யா” என்ற திரைப்படத்தை 1937ல் தயாரித்து வெளியிட்டது.
தமிழ் திரையுலகின் முதல் கவர்ச்சிக் கன்னி, சிங்களத்துக் குயில் என அன்றைய திரைப்பட ரசிகர்களால் வர்ணிக்கப்பட்ட நடிகை தவமணி தேவிதான் அகல்யாவாக நடித்திருந்தார். ஆங்கில சாகசப் படங்களை விரும்பிப் பார்க்கும் டிஆர் சுந்தரம், தமிழிலும் அப்படிப்பட்ட சாகச சண்டைக் காட்சிகள் நிறைந்த திரைப்படங்களை தயாரிக்க விரும்பினார். இதற்காகவே ஜெர்மனியிலிருந்து இரண்டு ஒளிப்பதிவாளர்களை தனது படப்பிடிப்புத் தளத்திற்கு வரவழைத்து, ஒளிப்பதிவில் நன்கு தேர்ச்சி பெற்ற அவர்களைக் கொண்டு, புதிய தொழில் நுட்பத்துடன் தனது “மாடர்ன் தியேட்டர்ஸ்” படப்பிடிப்புத் தளத்தில் முதல் சண்டைப் படமான “மாயா மாயவன்” என்ற திரைப்படத்தையும் தயாரித்து வெளியிட்டார்.
தமிழ் திரையுலகில் முதல் முறையாக அன்றைய சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான நடிகர் பியு சின்னப்பாவை இரட்டை வேடங்களில் நடிக்க வைத்து, பிரஞ்ச் கதாசிரியரான அலெக்ஸாண்டர் டூமாஸ் எழுதிய “தி மேன் இன் தி அயன் மாஸ்க்” என்ற ஆங்கில படத்தின் கதையை தழுவி “உத்தமபுத்திரன்” என்று தமிழில் தயாரித்து வெளியிட்டு பெறும் வெற்றியையும் சுவைத்தது “மாடர்ன் தியேட்டர்ஸ்”.
மலையாள மொழியில் வந்த முதல் பேசும் படமான “பாலன்”, தமிழ்நாட்டில் எடுக்கப்பட்ட முதல் ஆங்கிலப் படமான “தி ஜங்கிள்”, தமிழில் வெளியான முதல் முழுநீள வண்ணத்திரைப்படமான “அலிபாபாவும் 40 திருடர்களும்”, நகைச்சுவை நடிகையாக இருந்த 'ஆச்சி' மனோரமாவை முதல் முறையாக கதாநாயகியாக்கிய “கொஞ்சும் குமரி”, முதல் சிங்கள மொழி திரைப்படம், தென்னிந்திய திரையுலகிலேயே 100 திரைப்படங்களை தயாரித்த முதல் தயாரிப்பு நிறுவனம் என்ற பெருமையை பெற்றது. அதன் உடன், எம்ஜிஆர், கருணாநிதி, வி.என் ஜானகி, என்டி ராமாராவ் என நான்கு முதல்வர்களை கலையுலகில் வளர்த்துவிட்டதோடு, கதாசிரியர்கள், பாடலாசிரியர்கள், இசையமைப்பாளர்கள், பாடகர்கள், வசனகர்த்தாக்கள், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் என ஏராளமானவர்களை வளர்த்துவிட்டு அழகு பார்த்த “மாடர்ன் தியேட்டர்ஸ்” என்ற இந்த மாபெரும் கலைக்கூடம், பல முதன்மைகளை உள்ளடக்கிய தமிழ் திரையுலகின் உயிர் மூச்சு என்றால் அது மிகையன்று.
மிக பிரமாண்டமான படப்பிடிப்புத் தளத்தைக் கொண்ட இந்நிறுவனம், படத்தொகுப்புத் தளம், பாடல் பதிவு செய்யும் அறை, இசைக்கோர்ப்புப் பகுதி மற்றும் உள்ளரங்கம், என ஒரு திரைப்படம் உருவாவதற்கான அத்தனை தொழில் நுட்பங்களையும் உள்ளடக்கிய ஒரு வியக்கத்தக்க படப்பிடிப்புத் தளமாக செயல்பட்டு வந்தது.
இந்நிறுவனத்தின் அதிபரான டிஆர் சுந்தரத்தின் திடீர் மறைவிற்குப் பின் அவரது மகனான இராம சுந்தரம் தனது தந்தையின் வழியிலேயே திறம்பட தயாரிப்புப் பணியை தொடர்ந்ததோடு, நடிகர் ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் ஆகியோரை வைத்து பல ஜேம்ஸ்பாண்ட் பாணி திரைப்படங்களைத் தனது “மாடர்ன் தியேட்டர்ஸ்” தயாரிப்பில் தந்து கொண்டிருந்தார். இவரது தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் வெளிவந்த “இரு வல்லவர்கள்”, “வல்லவன் ஒருவன்”, “காதலித்தால் போதுமா”, “நான்கு கில்லாடிகள்”, “சிஐடி சங்கர்”, “கருந்தேள் கண்ணாயிரம்”, “தேடிவந்த லக்ஷ்மி” போன்ற “மாடர்ன் தியேட்டர்ஸ்” திரைப்படங்களில் நடித்ததன் மூலம் நடிகர் ஜெய்சங்கரும் “தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட்” என்ற பட்டத்திற்கு உரியவரானார்.
1970களில் வெளிவந்த “மாடர்ன் தியேட்டர்ஸ்” திரைப்படங்களான “வல்லவன் வருகிறான்”, “காளி கோயில் கபாலி”, “துணிவே தோழன்”, “அன்று முதல் இன்று வரை”, “வெற்றி நமதே” போன்ற திரைப்படங்களின் தொடர் தோல்விகளால் தனது தயாரிப்புப் பணியிலிருந்து தன்னை முற்றிலும் விலக்கிக் கொண்டது “மாடர்ன் தியேட்டர்ஸ்”.
இந்நிறுவனத்தின் தயாரிப்புகளில் நடிக்கும் நடிகர்கள், நடிகையர் மற்றும் மற்ற கலைஞர்களுக்கு, அவர்கள் தங்கி பணிபுரிய தனி குடியிருப்புகளும் படப்பிடிப்புத் தளத்திலேயே கட்டித் தரப்பட்டிருந்தது குறிப்பிடத் தகுந்த ஒன்று. 1937ல் தனது தயாரிப்புப் பணியை துவங்கிய இந்நிறுவனம் 1982வரை ஏறக்குறைய 45 ஆண்டுகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, சிங்களம் மற்றும் ஆங்கிலம் என 136 திரைப்படங்களை தயாரித்திருக்கின்றது. அதில் 102 தமிழ் திரைப்படங்களைத் தந்து தமிழர்களின் வாழ்வில் ஓர் அங்கமாக மாறியிருந்ததுதான் இந்த “மாடர்ன் தியேட்டர்ஸ்”.
டிஆர் சுந்தரமின் மகனும், இயக்குநருமான ராம சுந்தரத்தின் மறைவிற்குப் பின் அவரது குடும்பத்தாரின் மேற்பார்வையில் தற்போது “மாடர்ன் தியேட்டர்ஸ்” ஒரு நவீன குடியிருப்பு வளாகமாக மாறியிருக்கின்றது. பல ஜாம்பவான் கலைஞர்கள் உருவாக காரணமாயிருந்த, பல அரிய கலைப் படைப்புகளின் பொக்கிஷமாய் விளங்கிய “மாடர்ன் தியேட்டர்ஸ்” என்ற அந்த கலையுலக கனவுக்கூடம், தன் உருவத்தை மாற்றி, இப்போது நம் உள்ளங்களில் மட்டுமே உறங்கா நினைவாக நிலைத்து நிற்கின்றது. நினைவை விட்டு விலக மறுக்கும் அந்த மகத்தான தயாரிப்பு நிறுவனத்தின் அடையாளமான “மாடர்ன் தியேட்டர்ஸ்” என்ற அந்த அலங்கார வளைவு மட்டும், இன்றும் அதன் வரலாற்றை நினைவு கூறச் செய்யும் ஒரு சாட்சியாக கம்பீரமாய் நம் கண்களுக்கு காட்சியளித்துக் கொண்டிருக்கின்றது.