பாரதிராஜா இயக்கத்தில் 1978ம் ஆண்டு வெளிவந்து வெள்ளி விழா கொண்டாடிய படம் 'கிழக்கே போகும் ரயில்'. '16 வயதினிலே' என்ற ஒரே படத்தின் மூலம் உலக புகழ்பெற்ற பாரதிராஜா இயக்கிய 2வது படம் இது. இந்த படத்திற்காக ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சுதாகர் தேர்வாகி இருந்தார். கதாநாயகி தேர்வில் பாரதிராஜாவுக்கு திருப்தி ஏற்படவில்லை.
அப்போது கொஞ்சம் கிராமத்து பெண்ணின் சாயலில் இருந்த வடிவுக்கரசியை ஹீரோயினாக நடிக்க வைப்பது என்று முடிவு செய்திருந்தார் பாரதிராஜா. வடிவுக்கரசிக்கு கொஞ்சம் முதிர்ந்த தோற்றம் இருந்ததாலும், உடல் ஒல்லியாக இருந்த காரணங்களால் வடிவுக்கரசியால் நடிக்க முடியாமல் போய்விட்டது.
இந்த நிலையில்தான் இதில் ஒரு மாற்றம் நிகழ்ந்தது. அப்போது அவர் வசித்த தெருவில் தான் ராதிகா தனது அம்மாவுடன் குடியிருந்தார். லண்டனில் படித்து விட்டு திரும்பிய அவரது தெனாவெட்டையும், ஆங்கில உச்சரிப்பையும் பார்த்து வியந்த பாரதிராஜா அவரையே நாயகி ஆக்கினார். ராதிகாவுககு முதலில் நடிப்பதில் விருப்பமே இல்லை. மீண்டும் லண்டன் சென்று மேற்படிப்பை தொடரவே விரும்பினார். 'சும்மா டைம் பாசுக்கு இந்த படத்தில் மட்டும் நடி அப்புறம் லண்டன் செல்' என்று அம்மா சொல்ல ராதிகா ஒப்புக் கொண்டார். நுனிநாக்கும் ஆங்கிலம் பேசிய ராதிகாவை மதுரை தமிழ் பேச வைத்து சாதனை படைத்தார் பாரதிராஜா.