இந்த ஆண்டில் திரிஷா நடிப்பில் ஆறு படங்கள் ரிலீஸ் | பேட்ட படத்திற்கு பிறகு ரெட்ரோ படம் தான் : கார்த்திக் சுப்பராஜ் | சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்தி உறுதி | முதல் முறையாக ஜோடி சேரும் துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே | அஜித் வைத்த நம்பிக்கை குறித்து நெகிழ்ந்த அர்ஜுன் தாஸ் | 7 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பை துவங்கிய கிச்சா சுதீப்பின் பிரமாண்ட படம் | 15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா | போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை |
“சித்திரமே நில்லடி” என்ற பாடலால் தமிழ் திரை ரசிகர்களின் மனங்களை வென்றெடுத்த சித்திரப் பாவை நடிகை “வெண்ணிற ஆடை” நிர்மலாவின் 75வது பிறந்த தினம் இன்று…
தமிழகத்தில் கும்பகோணத்தை பூர்வீகமாகக் கொண்ட நடிகை “வெண்ணிற ஆடை” நிர்மலா 1948ம் ஆண்டு ஜுன் 27 அன்று பிறந்தார். இவரது இயற்பெயர் ஏ பி சாந்தி.
புதுமை இயக்குநர் சிவி ஸ்ரீதர் இயக்கத்தில் 1965ம் ஆண்டு வெளிவந்த “வெண்ணிற ஆடை” என்ற திரைப்படத்தின் மூலம் நாயகியாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார் நிர்மலா. படத்தின் வெற்றிக்குப் பின் படத்தின் பெயரும் அவருடைய பெயரோடு இணைந்து “வெண்ணிற ஆடை” நிர்மலாவானார்.
முதல் படத்தோடு நடிப்பை விடுத்து படிப்பை தொடர நினைத்த நிர்மலாவை “காட்டு துளசி” என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலம் மீண்டும் வெள்ளித்திரைக்கு அழைத்து வந்தவர் இயக்குநர் குஞ்சாகோ.
இத்திரைப்படத்தின் மிகப் பெரிய வெற்றி, மலையாளத் திரையுலகில் நிர்மலாவிற்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வர வழிவகை செய்தது. இதனால் மேற்கொண்டு படிக்கும் எண்ணத்தை கைவிட்டு, மலையாளத் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார்.
1968ல் ஜிஆர் நாதன் இயக்கத்தில், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளிவந்த “லக்ஷ்மி கல்யாணம்” திரைப்பட வாய்ப்பு வர, அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி, கதாபாத்திரத்திற்கு ஏற்ப தனது அற்புதமான நடிப்பை வெளிக்காட்டி, தமிழ் திரையுலகில் தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொண்டார் நடிகை “வெண்ணிற ஆடை” நிர்மலா.
தொடர்ந்து தமிழில் “ரகசிய போலீஸ் 115”, “மன்னிப்பு”, “பூவா தலையா”, “எங்க மாமா”, “தங்கச்சுரங்கம்”, “கன்னிப்பெண்”, “சுடரும் சூறாவளியும்”, “இதயக்கனி”, “இன்று போல் என்றும் வாழ்க”, “ஊருக்கு உழைப்பவன்” என தமிழில் பிஸியான நடிகையாக வலம் வரத் தொடங்கினார்.
1972ல் ஹிந்தியில் வெளிவந்த “தோ ரஹா” என்ற படத்தை தமிழில் “அவள்” என்ற பெயரில் இயக்குநர் ஏசி திருலோகசந்தர் இயக்க, நாயகியாக நடித்திருந்தார் “வெண்ணிற ஆடை” நிர்மலா. இத்திரைப்படம் இவரது திரைப்பயணத்தில் மிகவும் குறிப்பிடும்படியான ஒரு மைல் கல் திரைப்படமாகவும் அமைந்தது.
எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி, ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், சிவக்குமார் என அன்றைய அனைத்து முன்னணி நாயகர்களோடும் இணைந்து பணிபுரிந்த சிறப்புக்குரிய இவர், “அவளுக்கு நிகர் அவளே” என்று ஒரு படத்தை தயாரித்து, தன்னை ஒரு தயாரிப்பாளராகவும் அடையாளப்படுத்திக் கொண்டார்.
தமிழக அரசால் “கலைமாமணி” விருதும் “நாட்டிய திலகம்” என்ற பட்டமும் கிடைக்கப் பெற்ற நடிகை “வெண்ணிற ஆடை” நிர்மலா ஏறக்குறைய 200 படங்களுக்கும் மேல் தமிழிலும், 50 படங்கள் வரை மலையாளத்திலும் நடித்திருக்கின்றார்.
ஒரு சிறந்த பரநாட்டியக் கலைஞரான இவர், வெள்ளித்திரையையும் தாண்டி, “ஆடிவரும் தேனே”, “கல்கி”, “கற்பகம்”, “தெய்வமகள்” போன்ற சின்னத்திரை தொடர்களில் நடித்ததன் மூலம் சின்னத்திரை ரசிகர்களின் இதயங்களிலும் இடம் பிடித்தார்.
அழகு, நடிப்பு, நாட்டியம் ஒருங்கே அமையப் பெற்ற அற்புத திரைக்கலைஞரான நடிகை “வெண்ணிற ஆடை” நிர்மலா அவர்களின் பிறந்த தினமான இன்று அவரைப் பற்றிய ஒரு சிறு குறிப்பினை பகிர்ந்து கொண்டு அவரை வாழ்த்தி அகம் மகிழ்வோம்.