காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | பிறமொழி சினிமா: 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் | 3டியில் வெளியாகும் பான் இந்தியா சூப்பர் ஹீரோ படம் | பிளாஷ்பேக்: முதல் 'பார்ட் 2' படம் |
இன்று உலகெங்கும் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. திரைப்படங்களில், குறிப்பாக தமிழ் சினிமாக்களில் இப்போதுவரை அம்மா சென்டிமென்ட்டுக்கு ரொம்பவே முக்கியத்துவம் கொடுக்கப்படுவது வழக்கம். தமிழ் சினிமாவில் பல நடிகைகள் அம்மா கதாபாத்திரங்களில் தங்களது திறமையை வெளிப்படுத்தி உள்ளனர். அதேசமயம் அதில் வெகு சிலர் மட்டுமே இப்போதும் மக்களது மனதில் தனித்துவமான அம்மாக்களாக இடம் பிடித்துள்ளனர். அப்படி தமிழ் சினிமாவை தங்களது அற்புதமான நடிப்பால் தாங்கி பிடித்த பத்து 'அம்மா'க்களை இந்த சிறப்பு கட்டுரையில் பார்க்கலாம்.
பண்டரிபாய்
தமிழ் சினிமாவில் சீனியர் சூப்பர் ஸ்டார்களான எம்.ஜி.ஆர் சிவாஜி காலத்தில் அறிமுகம் ஆகி அவர்களுக்கு ஜோடியாக நடித்து பின்னர் அவர்களுக்கே அம்மாவாக நடித்து பிரபலமானவர் நடிகை பண்டரிபாய். அதன்பிறகு பல முன்னணி நடிகர்களுக்கு அவர் அம்மாவாக நடிதிருந்தாலும் மன்னன் படத்தில் ரஜினிகாந்தின் அம்மாவாக அவர் நடித்திருந்த அந்த கதாபாத்திரம் தான் இன்றைய இளைய தலைமுறை ரசிகர்களிடமும் அவரைப்பற்றி நினைவூட்டல் செய்து வருகிறது. குறிப்பாக அம்மா என்று அழைக்காத உயிரில்லையே என்கிற பாடல் எங்கே கேட்டாலும் அவரது முகம் நம் ஞாபகத்திற்கு வந்து செல்வதை தவிர்க்க முடியாது.
மனோரமா
ஆயிரம் படம் கண்ட ஆச்சி என எல்லோராலும் செல்லமாக ஆச்சி என அழைக்கப்பட்டவர் நடிகை மனோரமா. தமிழ் சினிமாக்களிலேயே அதிக படங்களில் அம்மா கதாபாத்திரங்களில் நடித்தவர் இவராகத்தான் இருக்கும். சீரியஸ், நகைச்சுவை, கோபம், சென்டிமென்ட் என எல்லாவிதமான குணாதிசயங்களையும் கொண்ட விதவிதமான அம்மா கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு மனோரமாவை தவிர இன்னொருவரை குறிப்பிட்டு சொல்வது கடினம்.
அவர் நடித்த ஆயிரம் படங்களில் கிட்டத்தட்ட 500 படங்களுக்கு மேல் அவர் அம்மாவாக தான் நடித்துள்ளார். அதில் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் சின்னத்தம்பி, சின்ன கவுண்டர், அண்ணாமலை ஆகிய படங்களில் அவரது கதாபாத்திரம் படத்தின் கதை ஓட்டத்திற்கே பக்க பலமாக அமைந்திருக்கும். பெரும்பாலான படங்களில் கதையை தாங்கி பிடிக்கும் வலுவான அம்மா கதாபாத்திரங்களிலேயே மனோரமா நடித்துள்ளார் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
எஸ்.என்.லட்சுமி
தமிழ் சினிமா கருப்பு வெள்ளையில் நடமாடிக்கொண்டிருந்தபோது எப்படி நடிகை பண்டரிபாய், அம்மா என்கிற ஆளுமையாக மாறினாரோ அதேபோல எம்ஜிஆர், சிவாஜி போன்றவர்கள் வண்ண (கலர்) படங்களில் நடிக்க ஆரம்பித்த சமயத்தில் அவர்களுக்கு அம்மாவாக நடித்து புகழ்பெற்றவர் நடிகை எஸ்.என்.லட்சுமி. குறிப்பாக எம்ஜிஆர்-க்கு அம்மாவாக பல படங்களில் இணைந்து இவர் நடித்துள்ளார். தொண்ணூறுகளில் நாசரின் அம்மாவாக தேவர் மகன் படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் தனது அசாத்தியமான நடிப்பாலும் வசனங்களாலும் இன்னும் மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இன்றைய தலைமுறை இளைஞர்கள் பெரும்பாலும் இவரை பாட்டி கதாபாத்திரத்திலேயே பார்த்து பழகி இருப்பார்கள். அம்மாவாக பல படங்களில் குணச்சித்திர நடிப்பை வெளிப்படுத்திய இவர் எண்பதுகளுக்குப் பிறகு மைக்கேல் மதன காமராஜன், வானத்தைப்போல உள்ளிட்ட பல படங்களில் தனது நகைச்சுவை நடிப்பையும் வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார்.
ஸ்ரீவித்யா
கதாநாயகியாக அறிமுகமாகி ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத அம்மா நடிகையாக மாறியவர் நடிகை ஸ்ரீவித்யா. ரஜினிகாந்த் அறிமுகமான படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து அதன்பிறகு 17 வருடங்கள் கழித்து தளபதி படத்தில் அவருக்கே அம்மாவாக நடித்து, அதிலும் தனது மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தி பிரமிக்க வைத்தவர். காதலுக்கு மரியாதை படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் தனது நடிப்பால் அந்த படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு உறுதுணையாக நின்றவர் ஸ்ரீவித்யா என்றால் அதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.
சுஜாதா
பாலச்சந்தர் இயக்கிய அவள் ஒரு தொடர்கதை படம் மூலமாக கதையின் நாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சுஜாதா. ஹீரோக்களுடன் காதல் டூயட் பாடும் வழக்கமான கதாநாயகிகளில் இருந்து மாறுபட்டு கதையம்சம் கொண்ட படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி நடித்து வந்த சுஜாதா, ஒரு காலகட்டத்திற்கு பிறகு மிகச்சிறந்த அம்மா நடிகையாக தன்னை உருவாக்கிக் கொண்டார். குறிப்பாக அவர்கள் படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த ரஜினிகாந்த்துக்கே அம்மாவாக மாவீரன், உழைப்பாளி, பாபா மற்றும் கமலுக்கு ஜோடியாக மங்கம்மா சபதம் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
இருந்தாலும் அஜித் நடித்த அவள் வருவாளா படத்தில் சிம்ரனுக்கு அம்மாவாகவும், அஜித்தின் வரலாறு படத்தில் கனிகாவுக்கு அம்மாவாகவும் இவர் நடித்த கதாபாத்திரங்கள் இன்றளவும் இளைய தலைமுறை ரசிகர்களிடம் இவரை நினைவூட்டல் செய்து வருகின்றன. அமைதிப்படை, செந்தமிழ் பாட்டு, பூவரசன், நட்புக்காக, நினைவிருக்கும் வரை என தான் அம்மாவாக நடித்த அனைத்து படங்களிலும் தனது தனித்துவமான முத்திரை நடிப்பை பதித்தவர் சுஜாதா.
ஊர்வசி
பாக்யராஜின் முந்தானை முடிச்சு படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமான ஊர்வசி தொடர்ந்து பல வருடங்கள் கதாநாயகியாகவும் கதையின் நாயகியாகவும் இடைவிடாமல் தனது பயணத்தை தொடர்ந்து வந்தார். ஒரு கட்டத்தில் இனி கதாநாயகியாக தொடர முடியாது என்கிற நிலை வந்தபோது அழகான குணசித்திர அம்மாவாக தன்னை மாற்றிக் கொண்டார் ஊர்வசி. பெரும்பாலும் நகைச்சுவை மற்றும் செண்டிமெண்ட் கலந்த அம்மா கதாபாத்திரங்களே இவரை தேடி வந்தன. அந்த கதாபாத்திரங்களுக்கு நூறு சதவீதம் நியாயம் செய்தார் ஊர்வசி.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளியான சூரரைப்போற்று படத்தில் முழுக்க முழுக்க குணச்சித்திர வேடத்திலும் தன்னால் நடிக்க முடியும் என நிரூபித்தார். மூக்குத்தி அம்மன் படத்தில் ஒரு நடுத்தர வர்க்கத்து தாயாக தனது இயலாமையையும் அபிலாசைகளையும் அழகாக வெளிப்படுத்தி இருந்தார் ஊர்வசி.
சரண்யா பொன்வண்ணன்
நாயகன் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமான சரண்யா அதன்பிறகு வெகு சில படங்களில் மட்டுமே கதாநாயகியாக நடித்தார். இடையில் நடிப்பிற்கு கொஞ்சம் இடைவெளி விட்டு அவர் மீண்டும் தமிழ் சினிமாவிற்கு திரும்பியபோது அம்மா என்கிற ஸ்தானத்தில் அவருக்கான இடம் ஒன்று காத்திருந்தது. சிம்பு நடித்த அலை என்கிற படத்தில் அம்மாவாக நடிக்க துவங்கிய அவருக்கு, ஜீவாவிற்கு அம்மாவாக நடித்து, அமீர் இயக்கத்தில் வெளியான ராம் திரைப்படம் மிகப்பெரிய வெளிச்சம் போட்டுக் கொடுத்தது. அந்த படத்தில் அவரது நடிப்பும் அவருக்காகவே எழுதப்பட்டது போன்ற ஆராரிராரோ என்கிற பாடலும் தமிழ் சினிமாவில் இனி ஒரு தவிர்க்க முடியாத அம்மாவாக சரண்யா வலம் வருவார் என்பதை பறைசாற்றின.
அதற்கு பின் வெளியான எம் மகன் திரைப்படம் அதை உறுதிப்படுத்தியது. அந்த படத்தில் இருந்து சென்டிமென்ட்டுடன் நகைச்சுவையையும் சரி விகித்ததில் இணைத்து கொண்டார். அதன் பின்னர் அதையே தனது பாணியாகவும் மாற்றிக்கொண்ட சரண்யா கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியான வேலையில்லா பட்டதாரி படம் மூலம் மீண்டும் ரசிகர்களை உருக வைத்தார். இப்போதும் அம்மாவாக அவரது பயணம் தடையின்றி தொடர்கிறது.
ஜானகி சபேஷ்
ஒரு பக்கம் தமிழ் சினிமா சென்டிமென்டான அம்மாக்களையே ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தி வந்த சூழலில் அம்மா என்றால் இப்படி ஒருவர் நமக்கு கிடைக்க மாட்டாரா என இளைஞர்கள், குறிப்பாக இளம் பெண்கள் ஏங்கும் விதமான அம்மா கதாபாத்திரமாக அறிமுகமானவர் நடிகை ஜானகி சபேஷ். வெள்ளந்தியான, தனது குழந்தைகளிடம் ஒரு தோழி போல சகஜமாக பேசி பழகக்கூடிய நகைச்சுவை கலந்த நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென ஒரு இடம் பிடித்துக் கொண்டார் ஜானகி சபேஷ். கில்லி படத்தில் விஜய்யின் அம்மாவாக இவர் பண்ணிய அலப்பறைகள் ரசிகர்களிடம் இவரை எளிதாக கொண்டு போய் சேர்த்தன. அதன் பிறகு சிங்கம் படத்தில் அனுஷ்காவின் அம்மாவாக, பூஜை படத்தில் ஸ்ருதிஹாசனின் அம்மாவாக என இவர் நடித்த படங்களில் எல்லாம் தனது நகைச்சுவை நடிப்பால் ரசிகர்களை சிரிக்க வைத்தவர். அந்த வகையில் தமிழ் சினிமாவில் இவருக்கும் ஒரு தனி இடம் கிடைத்துவிட்டது.
ரேணுகா
டி.ராஜேந்தர் இயக்கிய சம்சார சங்கீதம் படம் மூலமாக தமிழ் சினிமாவில் நுழைந்தவர் ரேணுகா. அதன்பிறகு அதிக அளவில் படங்களில் நடிக்காமல் 90களின் இறுதியில் சீரியலில் கவனம் செலுத்த துவங்கினார். மீண்டும் திரைப்படங்களில் அம்மா, அண்ணி, அக்கா கதாபாத்திரங்களில் நடித்தாலும் சூர்யாவுக்கு அம்மாவாக அயன் படத்தில் இவர் நடித்த அந்த அம்மா கதாபாத்திரம் தான் இவரை வெகுஜன ரசிகர்களுக்கு இன்னும் நெருக்கமாக கொண்டு சென்றது. அந்த படத்தில் கண்டிப்பும் தோழமையும் கலந்த ஒரு கதாபாத்திரத்தில் படபட என பொரியும் பட்டாசாக தனது வசனங்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்தார் ரேணுகா. தொடர்ந்து அலெக்ஸ் பாண்டியன், வெற்றிவேல், கருப்பன், அன்பறிவு உள்ளிட்ட படங்கள் மூலமாக அம்மா கதாபாத்திரத்தில் தனது இருப்பை அழுத்தமாக பதிவு செய்து வருகிறார் ரேணுகா.
ரமா
90களின் துவக்கத்தில் பாரதிராஜா இயக்கத்தில் என்னுயிர் தோழன் படம் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானவர் ரமா. ஆனால் தொடர்ந்து வந்த நாட்களில் அவரால் கதாநாயகியாக நீடித்து நிற்க முடியவில்லை. அதன் பிறகு ஒன்றிரண்டு படங்களில் மட்டுமே நடித்த ரமா, கிட்டத்தட்ட 20 வருடங்கள் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார். காலம் அவரை 2010ல் அவள் பெயர் தமிழரசி படம் மூலமாக மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்க வைத்தது.
அதே சமயம் 2014ல் மெட்ராஸ் படத்தில் கார்த்தியின் அம்மாவாக நடித்திருந்த அவரது நடிப்புதான், யார் இவர், அம்மா கதாபாத்திரங்களில் இன்னொரு விதமான வித்தியாசம் காட்டுகிறாரே என ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது. அதைத்தொடர்ந்து மளமளவென அவருக்கு அம்மா கதாபாத்திரங்கள் தேடி வர ஆரம்பித்தன. கத்தியில் விஜய்யின் அம்மாவாக, கனாவில் ஐஸ்வர்யா ராஜேஷின் அம்மாவாக என இவரது இரண்டாவது இன்னிங்ஸ் சற்று வேகம் எடுத்தது. 90களில் தனக்கு கிடைக்காத பெயரையும் புகழையும் ஏன் வருமானத்தையும் கூட இப்போது அம்மா கதாபாத்திரங்கள் மூலம் சம்பாதித்து வருகிறார் ரமா.
இவர்களை தவிர ராதிகா, ரேவதி, லட்சுமி, காந்திமதி, வடிவுக்கரசி என இன்னும் பலர் அம்மா கதாபாத்திரங்களில் தங்களது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். இருந்தாலும் மேலே சொன்ன 10 நடிகைகளும் சற்றே தனித்துவமான நடிப்பால் அம்மாவாக புகழ் பெற்றவர்கள் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
சினிமா வாழ்க்கை என்றாலும் சரி... நிஜ வாழ்க்கை என்றாலும் சரி... அம்மா என்றும் அம்மா தான்...! உலகத்தில் உள்ள அனைத்து அம்மாக்களுக்கும் இனிய அன்னையர் தின நல்வாழ்த்துகள்...!!!