புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்க்கும் பஹத் பாசில் ; இன்னொரு அஜித்தாக மாறுகிறாரா? | என் தந்தைக்கு ஏஐ குரல் வேண்டாம் ; எஸ்பிபி சரண் திட்டவட்டம் | மோகன்லாலின் 5 படங்களுக்கு மொத்தமாக ரிலீஸ் தேதி அறிவிப்பு | பாக்கியலெட்சுமி சீரியல் முடிவுக்கு வருகிறதா? | ‛அருண் தான் என் உலகம்' - மாற்றி மாற்றி பேசும் அர்ச்சனா | சீனாவில் விஜய் சேதுபதியின் 'மகராஜா' ரிலீஸ் : சிவகார்த்திகேயன் வாழ்த்து | கோவாவில் திருமணம் : திருப்பதியில் கீர்த்தி சுரேஷ் பேட்டி | பொங்கலுக்கு 'விடாமுயற்சி' : வேறு படங்கள் வெளிவருமா? | விஜய் - 69 : திடீரென வாங்கப்பட்ட 'பகவந்த் கேசரி' உரிமை ? | ‛எல்லாமும் கைவிடும் போது உன்னை நம்பு' - திடீரென இரவில் வெளியான விடாமுயற்சி டீசர் |
தமிழ் திரைப்பட இயக்குனரும், நடிகருமான மனோபாலா(69) உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். கல்லீரல் பிரச்னையால் அவதிப்பட்டு வந்த அவர் சிகிச்சை பலன் இன்றி இன்று(மே 3) மறைந்தார். இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர், ஓவியர் என பல்வேறு பரிமாணங்களில் பயணித்த அவரைப் பற்றிய வாழ்க்கை பயணித்தை பார்க்கலாம்.
தஞ்சை மாவட்டம், மருங்கூர் என்ற ஊரில் 1953ல் டிச., 8ல் பிறந்தார். இவரது நிஜப்பெயர் பாலசந்தர். ஓவியம் சார்ந்த படிப்பை முடித்த அவர் சிறந்த ஓவியர். இயக்குனர் பாரதிராஜாவின் திரைப்பட்டறையிலிருந்து பட்டை தீட்டப்பட்ட வைரங்களாக, பின்னாளில் வெள்ளித்திரையில் ஜொலித்த இயக்குனர்களான கே பாக்யராஜ், மணிவண்ணன், கே ரங்கராஜ், மனோஜ் குமார் ஆகியோரின் வரிசையில் மிக முக்கியமான இயக்குனராக அறியப்படுபவர் மனோபாலா.
பாரதிராஜா அறிமுகம்
தனது பள்ளிப் பருவத்திலேயே திரைத்துறைதான் தனக்கான துறை என தீர்மானித்து, சென்னை வந்து பல போராட்டங்களுக்குப் பின், நடிகர் கமல்ஹாசனின் சிபாரிசின் பேரில் பாரதிராஜாவின் அறிமுகம் கிடைத்து, அவரிடம் உதவி இயக்குனராக பணியமர்த்தப்பட்டார். பாரதிராஜாவின் "புதிய வார்ப்புகள்" திரைப்படத்தின் மூலம் உதவி இயக்குனராக தனது திரைப்பயணத்தை துவக்கிய இவர், பாலசந்தர் என்ற தனது இயற்பெயரையும் மனோபாலா என மாற்றி அமைத்துக் கொண்டார்.
"நிறம் மாறாத பூக்கள்", "கல்லுக்குள் ஈரம", "நிழல்கள்", "அலைகள் ஓய்வதில்லை", "டிக் டிக் டிக்" என பாரதிராஜாவின் பல படங்களில் உதவி இயக்குநராக பணிபுரிந்து அனுபவம் பெற்றார். 1982ல் கார்த்திக் மற்றும் சுஹாசினி நடிப்பில் வெளிவந்த "ஆகாய கங்கை" என்ற திரைப்படத்தின் மூலம் முதன் முதலாக ஒரு இயக்குநராக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார் இயக்குனர் மனோபாலா.
முதல் இயக்கம்
முதல் படம் தோல்விப் படமாக போக, 1985 ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டு வெளியீடாக, நடிகர் மோகன் மற்றும் ராதிகா நடிப்பில், கதாசிரியர் பி கலைமணி தயாரித்த "பிள்ளை நிலா" திரைப்படம் மனோபாலாவிற்கு ஒரு திருப்புமுனையைத் தந்த திரைப்படமாக அமைந்தது. தொடர்ந்து விஜயகாந்தை நாயகனாக வைத்து "சிறைப்பறவை", "என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்", "மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்", நடிகர் ரஜினிகாந்த் நாயகனாக நடித்த "ஊர்க்காவலன்", சத்யராஜ் நடிப்பில் "மல்லு வேட்டி மைனர்" என 80களின் முன்னணி நாயகர்களை இயக்கி வெற்றி கண்டதோடு, குடும்பக் கதை, காதல் கதை, க்ரைம் த்ரில்லர் கதை என வித விதமான கதைக்களங்களில் பயணித்து வெற்றி கண்டார்.
நடிப்பிலும் முத்திரை
பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக இருந்தபோதே "புதிய வார்ப்புகள்", மணிவண்ணனின் "கோபுரங்கள் சாய்வதில்லை" போன்ற ஒரு சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து தன்னை ஒரு நடிகராகவும் அடையாளப்படுத்திக் கொண்ட மனோபாலாவை ஒரு முழுநேர நடிகராக மாற்றியவர் இயக்குநர் கே எஸ் ரவிகுமார். 1998ல் கேஎஸ் ரவிகுமார் இயக்கத்தில் வெளிவந்த "நட்புக்காக" திரைப்படத்தில் "மதுரை" என்ற கதாபாத்திரத்தில் நடித்தார் மனோபாலா. அதன்பின் இப்போதைய இளம் நடிகர்கள் வரை 200க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி மற்றும் குணச்சித்ர வேடங்களில் நடித்து அசத்தினார்.
தயாரிப்பாளர்
கடைசியாக இவர் இயக்கிய திரைப்படம் 2002ல் நடிகர் ஜெயராம் நடித்து வெளிவந்த "நைனா" என்ற திரைப்படமாகும். 2014ம் ஆண்டு தனது "மனோபாலாஸ் பிக்சர் ஹவுஸ்" என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் "சதுரங்க வேட்டை" என்ற திரைப்படத்தை தயாரித்து ஒரு தயாரிப்பாளராகவும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். தொடர்ந்து "பாம்புச் சட்டை", "சதுரங்க வேட்டை 2" ஆகிய படங்களும் இவர் தயாரித்த திரைப்படங்களே. இவற்றில் சதுரங்க வேட்டை 2 படம் சில பிரச்னைகளால் ரிலீஸாகாமல் முடங்கி உள்ளது.
சின்னத்திரை
"அல்லி ராஜ்ஜியம்", "மாயா", "செம்பருத்தி", "ராஜபார்வை" போன்ற தொலைக்காட்சித் தொடர்களில் நடித்ததன் மூலம், ஒரு சின்னத்திரை நடிகராகவும் அறியப்பட்டார். மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று அசத்தினார். அதுமட்டுமல்லாது தனியாக யுடியூப் சேனல் துவக்கி சினிமா தொடர்பான பல விஷயங்களையும் வழங்கி வந்தார். பல திரைப்பிரபலங்களையும் பேட்டி எடுத்து, பல சுவாரஸ்ய தகவல்களையும் கொடுத்தார்.
சென்னை, சாலிகிராமத்தில் வசித்து வந்த மனோபாலாவிற்கு உஷா என்ற மனைவியும், ஹரிஷ் என்ற மகனும் உள்ளனர்.
ஓவியர், திரைப்பட இயக்குநர், கதாசிரியர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத் தன்மை கொண்ட இந்த திரைக் கலைஞர், தனது நீண்ட நெடிய கலைப்பயணத்தில் தமிழ், கன்னடம், ஹிந்தி மொழிகளில் 40 திரைப்படங்கள் வரை இயக்கியும், 3 திரைப்படங்கள் தயாரித்தும், 200க்கும் அதிகமான படங்களில் நடித்தும் உள்ளார். ஹாலிவுட் படமான தி லயன் கிங் தமிழ் பதிப்பிற்கு டப்பிங் குரலும் கொடுத்தார்.
பன்முக படைப்பாளியான மனோபாலாவின் மறைவு நிச்சயம் திரையுலகிற்கு பேரிழப்பே.