மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா | சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை | சிவராஜ் குமாருக்கு பதிலாக விஷால் | விஜய் மகன் இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | 27 ஆண்டுகளுக்கு முந்தைய ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா விடாமுயற்சி? | 20வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய அனிகா சுரேந்திரன் | தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
1. கடவுள் அவதாரங்களை கண் முன் காட்டிய கலையுலக படைப்பாளி. திரையின் மூலம் இறைப்பணியாற்றி அருள் பல பெற்ற “அருட்செல்வர்” இயக்குநர் ஏபி நாகராஜன் அவர்களின் பிறந்த தினம் இன்று…
2. 1928ம் ஆண்டு பிப்ரவரி 24 அன்று, சேலம் மாவட்டம், சங்ககிரிக்கு அருகில் உள்ள அக்கம்மாபேட்டை என்ற சிற்றூரில், பரமசிவம் மற்றும் லட்சுமி அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார்.
3. அக்கம்மாபேட்டை பரமசிவன் நாகராஜன் என்ற ஏபி நாகராஜனின் இயற்பெயர் குப்புசாமி. இளம் வயதிலேயே தாய் தந்தையை இழந்து, தனது பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்து வந்தவர் தனது கலைப்பணியை நாடகக் குழுக்களின் வாயிலாக ஆரம்பித்தார்.
4. 1940ஆம் ஆண்டு “குமஸ்தாவின் பெண்” என்ற நாடகத்தில் கதையின் நாயகியாக, ஸ்திரி பார்ட் எனப்படும் பெண் வேடமேற்று நடித்து, தனது கலைப்பணியை ஆரம்பித்தார் நாகராஜன்.
5. அவ்வை டிகே சண்முகம் நாடகக் குழுவில் இணைந்து பணியாற்றிய போது, அங்கே குப்புசாமி என்ற பெயரில் இன்னும் சிலர் இருந்ததால், இவரது பெயர் நாகராஜன் என மாற்றி அமைக்கப்பட்டது.
6. 1953ம் ஆண்டு வெளியான “நால்வர்” என்ற திரைப்படத்தில் முக்கிய வேடமேற்று நடித்திருந்ததோடு, கதை வசனமும் எழுதி வெள்ளித்திரையின் அறிமுகமும் கண்டார்.
7. தொடர்ந்து “மாங்கல்யம்”, “பெண்ணரசி”, “டவுன்பஸ்”, “நான் பெற்ற செல்வம்”, “மக்களை பெற்ற மகராசி”, “நல்ல இடத்து சம்மந்தம்” போன்ற திரைப்படங்கள் இவரது கதை வசனத்தில் வெளிவந்து வெற்றி பெற்றன.
8. நடிகர் விகே ராமசாமியுடன் இணைந்து “மக்களை பெற்ற மகராசி”, “நல்ல இடத்து சம்மந்தம்”, “வடிவுக்கு வளைகாப்பு” ஆகிய படங்களை தயாரித்ததன் மூலம் ஒரு தயாரிப்பாளராகவும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார்.
9. 1962ஆம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளிவந்த “வடிவுக்கு வளைகாப்பு” என்ற திரைப்படத்தை முதன் முதலில் இயக்கி, ஒரு இயக்குநராகவும் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
10. “ஸ்ரீவிஜயலக்ஷ்மி பிக்சர்ஸ்” என்ற பெயரில் சொந்தமாக படத்தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் ஆரம்பித்தார் ஏபி நாகராஜன். 1964ம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜிகணேசன் 9 வேடமேற்று நடித்து மிகப் பெரிய வெற்றி பெற்ற திரைப்படமான “நவராத்திரி” திரைப்படமே இவரது “ஸ்ரீவிஜயலக்ஷ்மி பிக்சர்ஸ்” பேனரில் வெளிவந்த முதல் திரைப்படம்.
11. புராணப்படங்களின் புகழ் மிகு இயக்குநராக பார்க்கப்பட்டவர்தான் இயக்குநர் ஏபி நாகராஜன். திரைப்படங்களே பார்க்காத மூதறிஞர் ராஜாஜி, இவரது கதை வசனத்தில் வெளிவந்த “சம்பூர்ண இராமாயணம்” திரைப்படத்தை பார்த்து, அதில் நடித்திருந்த நடிகர் திலகம் சிவாஜிகணேசனை பாராட்டும் விதமாக “பரதனை கண்டேன்” என்று பாராட்டியிருந்தது குறிப்பிடத் தகுந்த ஒன்று.
12. தமிழ் திரையுலகின் மூவேந்தர்களான எம் ஜி ஆர், சிவாஜி, ஜெமினிகணேசன் என இந்த மூவரில், சிவாஜிகணேசனின் 100வது படமான “நவராத்திரி” திரைப்படத்தையும், ஜெமினிகணேசனின் 100வது படமான “சீதா” திரைப்படத்தையும் இயக்கிய பெருமை மிகு இயக்குநராக பார்க்கப்படுபவர்தான் இயக்குநர் ஏ பி நாகராஜன்.
13. சமூக திரைப்படங்கள் மட்டுமே பெரிய அளிவில் வெளிவந்து கோலோச்சியிருந்த காலங்களிலேயே, புராண, இதிகாச கதைகளின் மீது ஈர்ப்பு கொண்டு, தனது திறமையின் மீது நம்பிக்கை கொண்டு ஏராளமான புராண இதிகாச பக்திப் படங்களை தந்து, மாபெரும் வெற்றி கண்ட இயக்குநராக இன்றும் பார்க்கப்படுபவர் இயக்குநர் ஏ பி நாகராஜன்.
14. “நெற்றிக்கண் திறப்பினும் குற்றமே” என்று ஈசனோடு தர்க்கம் செய்து வென்று காட்டிய நக்கீரர், “இன்றொரு நாள் போதுமா” என்று இருமாப்போடு பாடிய ஹேமாநாத பாகவதர், அழகு தமிழை ஆண்டவனுக்கே அன்னையாக்கி பார்த்த பானபத்திரர், சிவனென்று அறியாமல் தருமி நடத்திய சரித்திர உரையாடல் என, ஒரு நட்சத்திர குவியல் கொண்டு, இவர் விiளாயடிய விளையாடல்தான், இன்றும் நம்மால் மறக்க முடியாத “திருவிளையாடல்”.
15. “சரஸ்வதி சபதம்”, “கந்தன் கருணை”, “திருவருட் செல்வர்”, “திருமால் பெருமை”, என பக்திப் படங்களை தந்து தொடர் வெற்றிகளை கண்ட இயக்குநர் ஏ பி நாகராஜன், கொத்தமங்கலம் சுப்பு அவர்களின் புதினமான “தில்லானா மோகனாம்பாள்” என்ற கதையை வரலாற்று சிறப்புமிக்க திரைப்படமாக்கி, இந்திய திரையுலகின் இணையற்ற இயக்குநராக உயர்ந்தார்.
16. பிரமாண்ட அரங்க அமைப்புகளோடு, அதிக பொருட் செலவில் பக்திப் படங்களை தயாரித்து, இயக்கி வெற்றி பெற்ற இயக்குநர் ஏ பி நாகராஜன், “கண்காட்சி”, “திருமலை தென்குமரி”, “வா ராஜா வா”, “அகத்தியர்” என சிறிய பட்ஜட் படங்களையும் தயாரித்து, இயக்கி வெற்றி காண முடியும் என்பதை நிரூபித்தும் காட்டியிருந்தார்.
17. தமிழ் சினிமாவின் முதல் சினிமாஸ்கோப் திரைப்படம் என்ற அந்தஸ்தோடு, நடிகர்திலகம் சிவாஜிகணேசன் நடித்து, 1973ஆம் ஆண்டு வெளிவந்த “இராஜ ராஜ சோழன்” திரைப்படமும் இவரது கைவண்ணத்தில் உருவான சாகாவரம் பெற்ற சரித்திர காவியம்.
18. நடிகர் கமல்ஹாசன் இவரது இயக்கத்தில் “குமஸ்தாவின் மகள்”, “மேல்நாட்டு மருமகள்” என்ற இரண்டு படங்களில் நடித்திருந்ததோடு, “மேல்நாட்டு மருமகள்” திரைப்படத்தில் தன்னோடு நடித்த வாணிகணபதியை பின்னாளில் வாழ்க்கைத் துணையாகவும் ஆக்கிக் கொண்டார்.
19. இயக்குநர் ஏ பி நாகராஜன், வெற்றி பெற்ற தனது பெரும்பாலான கலை படைப்புகளுக்கு, இசை என்னும் மூச்சுக் காற்றை “திரையிசைத் திலகம்” கே வி மகாதேவனிடமிருந்தே பெற்று வந்தார் என்பது குறிப்பிடத் தகுந்த ஒன்று. பின்னாளில் வந்த அவரது பல படங்களின் வெற்றிக்கு குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களின் இசையும் பெரும்பங்காற்றி புகழ் சேர்த்தது அனைவரும் அறிந்த ஒன்று.
20. நடிகர் திலகம் சிவாஜியோடு இணைந்து ஏராளமான பக்திப் படங்களையும், சமூகப் படங்களையும் தந்த ஏ பி நாகராஜன், எம் ஜி ஆருடன் இணைந்து பணியாற்றிய ஒரே திரைப்படம் “நவரத்தினம்”.
21. இயக்குநர் ஏ பி நாகராஜனின் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் வெளிவந்த “திருவிளையாடல்” மற்றும் “தில்லானா மோகனாம்பாள்” திரைப்படங்களுக்கு, 1965 மற்றும் 1968 ஆகிய ஆண்டுகளில் சிறந்த திரைப்படங்களுக்கான “தேசிய விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டது.
22. ஒரு நடிகராக கலையுலகில் தடம் பதித்து, கதாசிரியராக, தயாரிப்பாளராக உயர்ந்து பின் இயக்குநராக விஸ்வரூபம் கண்ட இயக்குநர் ஏ பி நாகராஜன், தமிழுக்கும், தமிழ் திரையுலகிற்கும் ஆற்றிய பணி, அவரது கலை படைப்புகள் மூலம் இன்னும் ஒரு நூற்றாண்டு நிலைத்து நிற்கும். அன்னாரின் நினைவுகளை அவரது பிறந்த தினமான இன்று நினைவு கூர்வதில் நமக்கும் பெருமையே.