தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு | எந்த விதி மீறலும் இல்லை : தனுஷ் நோட்டீஸிற்கு நயன்தாரா பதில் | மீனாட்சி சவுத்ரி எடுத்த முடிவு | குடும்பமே இணைந்து தயாரிக்கும் 'பேமிலி படம்' | 'விடாமுயற்சி' டீசர்: அஜித் ரசிகர்களை மகிழ வைத்த மகிழ் திருமேனி | விஜய் ஆண்டனி குடும்பத்தில் இருந்து வரும் வாரிசு நடிகர் | மத உணர்வுகளை புண்படுத்துவதாக கூறி கேரள தியேட்டர்களில் இருந்து தூக்கப்பட்ட துல்கர் நண்பரின் படம் | யோகி பாபு நடிக்கும் ‛பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே' |
வி.சி.கணேசனாக இருந்து நடிகர் திலகமாக சிகரம் தொட்டவர் சிவாஜி கணேசன். கடவுள்களையும், சுதந்திர போராட்ட சரித்திர நாயகர்களையும் கண்முன் நிறுத்தியவர். நடிப்புக்கு ஒரு இலக்கணமாக, பல்கலைக்கழகமாக திகழும் சிவாஜி கணேசன் மறைந்து இன்றோடு(ஜூலை 21) 21 ஆண்டுகள் ஆகிறது. வி.சி.கணேசன், சிவாஜி கணேசனாக மாறிய கதையை, அவரது வாழ்க்கை பயணத்தை சற்றே திரும்பி பார்ப்போம்.
1928ல் அக்., 1ல் விழுப்புரம் மாவட்டம், பி.சின்னையா மன்றாயர் - ராஜாமணி அம்மாளின் மகனாக பிறந்தார் வி.சி.கணேசன். 9 வயது சிறுவனாக இருந்த போதே "கம்பளத்தான் கூத்து" எனப்படும் கட்டபொம்மன் கதையை அடிப்படையாகக் கொண்ட அந்த மேடை நாடகத்தின் மீது ஈர்ப்பு கொண்டு, யதார்த்தம் பொன்னுசாமி பிள்ளை நாடகக் கம்பெனியில் சேர்ந்து நடித்து வந்தார்.
நாடகத்திலேயே நடிப்பில் ஆரூடம்
நாடகத்தில் இவருக்கு பாடம் சொல்லித் தரும் குருவாக இருந்தவர் சின்ன பொன்னுசாமி என்பவர் ஆவார். ஆரம்ப காலங்களில் "ஸ்திரீ பார்ட்" எனப்படும் பெண் வேடமேற்றும், சீதையாகவும், சூர்ப்பனையாகவும் நடித்துள்ளார் சிவாஜி. இவர் நடிப்புலக மேதை என்பதற்கு ஆரூடம் சொல்வது போல் சினிமாவிற்கு வருவதற்கு முன்பே நாடகங்களில் ஒருவரே சீதையாகவும், சூர்பனையாகவும், பரதனாகவும், இந்திரஜித்தாகவும் நடித்து, அன்றே நடிப்புக் கலையின் உச்சம் தொட்டவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.
சிவாஜி கணேசனாக மாற்றம்
பின்னாளில் இவர் திரைப்படத்துறைக்கு வந்த பிறகு "சம்பூர்ண இராமாயணம்" திரைப்படத்தைப் பார்த்த மூதறிஞர் ராஜாஜி அவர்கள் "நான் பரதனைக் கண்டேன்" என்று மனதார நடிகர் திலகத்தைப் பாராட்டிய வரலாறும் உண்டு. அறிஞர் அண்ணாவின் நாடகமான "சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம்" என்ற நாடகத்தில் வீர சிவாஜியாக நடித்த நடிகர் திலகத்தின் நடிப்பை வெகுவாக பாராட்டிய ஈ.வெ.ரா அவர்கள், கணேசன் என்ற இவரது இயற்பெயரோடு, இவர் ஏற்று நடித்திருந்த 'சிவாஜி' என்ற கதாபாத்திரத்தின் பெயரை முன்னிறுத்தி "சிவாஜி கணேசன்" என்று பெருமையுடன் அழைத்தார். அன்றிலிருந்து விசி கணேசனாக இருந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனானார்.
பராசக்தி ஒன்று போதும்
1952ம் ஆண்டு வெளிவந்த "பராசக்தி" திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு நாயகனாக அறிமுகமானார். இத்திரைப்படம் வருவதற்கு முன்னர் பெரும்பாலும் தமிழ் திரையுலகில் ராஜா ராணி கதைகள், மத ரீதியான கதைகள், புராண இதிகாச கதைகளை அடிப்படையாகக் கொண்ட, பாடல்கள் நிறைந்த படங்களாக வந்து கொண்டிருந்த காலகட்டத்தில், பாடல்கள் குறைவாகவும், சமூக சீர்திருத்த தாக்கத்தை உணர்த்தும் வகையில் வசனங்களும் நிறைந்த இத்திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை ஈட்டியது. ஒரு நூறு படங்களை கடந்த ஒரு கலைஞனின் அனுபவங்களை தனது முதல் படத்திலேயே காட்டியிருப்பார் சிவாஜி. குறிப்பாக படத்தில் நீதிமன்ற காட்சி ஒன்று போதும். இத்தலைமுறை கலைஞர்களும், ரசிகர்களும் இத்திரைப்படத்தின் வசனங்களை படங்களிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பேசி நடித்து வருவதை நம்மால் காணமுடியும்.
வீரத்தை பறைசாற்றிய கட்டபொம்மன்
1954 ஆம் ஆண்டு வெளிவந்த "அந்தநாள்" என்ற திரைப்படம் தமிழ் திரையுலக போக்கிலிருந்து முற்றிலும் ஒரு மாறுபட்ட கதையம்சத்துடன் வந்ததோடு, படத்தில் பாடல்களே இல்லாமலும் படத்தின் நாயகனான நடிகர் திலகம் சிவாஜி ஒரு எதிர்மறை கதாபாத்திரம் ஏற்று நடித்து, நடிப்பில் ஒரு புதிய பரிமாணத்தை காட்டியிருப்பார். இத்திரைப்படம் அந்த ஆண்டு, ஜனாதிபதியின் வெள்ளிப் பதக்கத்தை வென்றெடுத்தது.
1959ம் ஆண்டு பத்மினி பிக்சர்ஸ் சார்பில், பி ஆர் பந்துலு தயாரித்து, இயக்கி வெளிவந்த திரைப்படம் "வீரபாண்டிய கட்டபொம்மன்". கட்டபொம்மன் வரலாற்றை மையப்படுத்தி எடுத்திருந்த இத்திரைப்படத்தில் சிவாஜியின் நடிப்பு, தமிழ் கூறும் நல்லுலகம் மட்டுமல்ல, கடல் கடந்து அயலாரும் கண்டு உறைந்தனர்.
என்ன வேடம் நடிக்கவில்லை
1960ம் ஆண்டு கெய்ரோவில் நடைபெற்ற ஆசிய ஆப்பிரிக்க திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருது இத்திரைப்படத்தில் நடித்தமைக்காக சிவாஜிக்கு வழங்கப்பட்டது. ஜாக்சன் துரையுடன் கட்டபொம்மன் பேசும் வசனம் இன்றைய தலைமுறை பிள்ளைகள் கூட பேசி மகிழ்கின்றனர் என்றால் அது மிகையல்ல. அந்தளவு இத்திரைப்படம் அனைவரின் உள்ளங்களையும் வென்றெடுத்திருக்கிறது என்பது உண்மை. இவ்வாறு நாம் அவருடைய நடிப்பாற்றலை, நாம் ரசித்தவற்றை கூற முற்பட்டால் அவருடைய ஒவ்வொரு படத்தைப் பற்றியும் கூறிக் கோண்டே போகலாம். அவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரங்களே இல்லை எனும் அளவிற்கு அனைத்து கதாபாத்திரங்களிலும் வெள்ளித்திரையில் மின்னி வாழ்ந்து காட்டியவர்.
கடவுள்களையும், சரித்திர நாயகர்களையும் கண்முன் நிறுத்தியவர்
சிவன், பெருமாள், நாரதர் உள்ளிட்ட கடவுள் வேடங்களை ஏற்று நடித்தவர். வ.உ.சிதம்பரம் பிள்ளை, பகத்சிங், வாஞ்சிநாதன், திருப்பூர் குமரன் என விடுதலைப் போராட்ட வீரனாகவும், கர்ணன், பரதன், அரிச்சந்திரன், அப்பர், ஆழ்வார்கள் மற்றும் நாயன்மார்கள் என புராண இதிகாச நாயகர்கள் வேடம் தரித்து நம் கண்முன் கொண்டு வந்து காட்டியவர் நடிகர் திலகம் ஒருவரே.
எண்ணிலடங்கா நாயகிகள்
பானுமதி ராமகிருஷ்ணா, பண்டரிபாய், வைஜெயந்திமாலா, பத்மினி, சாவித்திரி, சரோஜாதேவி, தேவிகா, கே ஆர் விஜயா, வாணிஸ்ரீ மற்றும் ஜெயலலிதா என அன்றைய அனைத்து முன்னணி நாயகிகளும் இவருடன் ஜோடியாக நடித்திருக்கின்றனர்.
ஜாம்பவான் இயக்குனர்கள்
கிருஷ்ணன் - பஞ்சு, டிஆர் சுந்தரம், எல்வி பிரசாத், ஏ பி நாகராஜன், பிஆர் பந்துலு, டி பிரகாஷ்ராவ், ஏ பீம்சிங், கே சங்கர், சி வி ஸ்ரீதர், ஏசி திருலோகசந்தர், கேஎஸ் கோபாலகிருஷ்ணன், பி மாதவன், சிவி ராஜேந்திரன் மற்றும் கே விஜயன் என்று அன்றைய அனைத்து முன்னணி இயக்குநர்களுடனும் பணிபுரிந்திருக்கிறார் நடிகர் திலகம்.
300 படங்கள்
தமிழில் மட்டும் 300க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார். இது தவிர தெலுங்கில் ஒன்பது திரைப்படங்களும், ஹிந்தியில் இரண்டு திரைப்படங்களும் மற்றும் மலையாளத்தில் ஒன்றும் நடித்துள்ளார்.
விருதுகள்
* 1960 ஆம் ஆண்டு கெய்ரோவில் நடைபெற்ற ஆசிய ஆப்பிரிக்க திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருது "வீரபாண்டிய கட்டபொம்மன்" திரைப்படத்திற்காக வழங்கி கவுவிக்கப்பட்டார்.
* 1966 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்தால் "பத்மஸ்ரீ விருது" வழங்கி கவுவிக்கப்பட்டார்.
* 1995 ஆம் ஆண்டு ப்ரான்ஸ் நாட்டின் உயரிய விருதான "செவாலியே விருது" வழங்கி கவுரவிக்கபட்டார்.
* அமெரிக்காவின் நயாகராவில் ஒரு நாள் மேயராக கவுரவிக்கப்பட்டார்.
* 1972 ஆம் ஆண்டு சிறந்த நடிகருக்கான "பிலிம்பேர் விருது" "ஞான ஒளி" படத்திற்காக வழங்கப்பட்டது.
* 1973 ஆம் ஆண்டு சிறந்த நடிகருக்கான "பிலிம்பேர் விருது" "கௌரவம்" படத்திற்காக வழங்கப்பட்டது.
* 1984 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் "பத்மபூஷண் விருது" வழங்கி கவுரவித்தது.
* 1985 ஆம் ஆண்டு சிறந்த நடிகருக்கான "பிலிம்பேர் விருது" "முதல் மரியாதை" படத்திற்காக வழங்கப்பட்டது.
* 1985 ஆம் ஆண்டு "பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது" வழங்கி கவுரவிக்கப்பட்டார்.
* 1986 ஆம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகம் "கவுரவ டாக்டர் பட்டம்" வழங்கி கவுரவித்தது.
* 1997 ஆம் ஆண்டு தமிழ் நாடு அரசு "கலைமாமணி விருது" வழங்கி கவுரவித்தது.
* 1998 ஆம் ஆண்டு ஆந்திர மாநில அரசு "என்டிஆர் தேசிய விருது" வழங்கி கவுரவித்தது.
* 1992 ஆம் ஆண்டு "தேசிய சினிமா விருது - ஸ்பெஷல் ஜுரி விருது" "தேவர்மகன்" திரைப்படத்திற்காக வழங்கப்பட்டது.
* 1996 ஆம் ஆண்டு "தாதா சாஹேப் பால்கே விருது" வழங்கி கவுரவிக்கப்பட்டார்.