ஸ்பெயினிலும் சாதித்த அஜித் அணி: 3ம் இடம் பிடித்து அசத்தல் | அக்டோபர் 5ம் தேதி முதல் பிக்பாஸ் சீசன்- 9 ஆரம்பம்! | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் நாளை மாலை வெளியாகிறது! | என் சாம்பியனுக்கு அருகில் இருக்கிறேன்! - புகைப்படங்களுடன் ஷாலினி வெளியிட்ட பதிவு | பிளாஷ்பேக்: 'ஜுபிடர் பிக்சர்ஸ்' நிறுவனம் தயாரிக்க ஆசைப்பட்டு, முடியாமல் போன திரைப்படம் | 'ஓஜி' வரவேற்பு: பிரியங்கா மோகன் தெரிவித்த நன்றி | ‛தி பாரடைஸ்' படத்திலிருந்து மோகன் பாபு பர்ஸ்ட் லுக் வெளியானது! | தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக்கிற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ‛நோ' சொன்ன ருக்மணி வசந்த்.. ‛எஸ்' சொன்ன கீர்த்தி சுரேஷ்! | இளவட்ட இயக்குனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் நடிகை |
சினிமாவில் நடித்து உச்சத்தை தொட வேண்டும் என தலைநகர் சென்னையை முற்றுகையிடுவோர் ஏராளம். அதிலும் சிலருக்கு மட்டுமே வாய்ப்புகள் அமைந்து உச்சத்தை தொடுகின்றனர். முதல் வாய்ப்பே மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸிலிருந்து வந்தால் எப்படியிருக்கும். கூடவே மூன்றாவது படம் விஜய், நான்காவது படம் அஜித் என உச்ச நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் எப்படியிருக்கும். அந்த வாய்ப்பு கிடைத்த சந்தோஷத்தில் இருக்கிறார் நடிகர் சிபி சந்திரன்.
சிபியின் சொந்த ஊர் தென்காசி. அப்பா டாக்டர் காமராஜ். இதனால் சிபியை அவரது தந்தை பொறியாளராக்க எண்ணி இன்ஜினியரிங் கல்லுாரியில் சேர்த்து விட்டார். ஆனால் சிபிக்கு மனம் என்னவோ சினிமா மீதே இருந்தது. பிறகு எப்படி சினிமாவில் குறுகிய காலத்திலேயே உச்ச நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு கிட்டியது என அவரே தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக மனம் திறந்தார்.
அவர் கூறியது: கல்லுாரியில் இன்ஜினியரிங் சேர்ந்தேனே தவிர படிப்பை காட்டிலும் சினிமா மீது தான் கண் இருந்தது. ஆனால் எப்படி முயற்சிப்பது என தெரியவில்லை. கல்லுாரியில் படித்து கொண்டே குறும்படம் ஒன்றை நடித்து தயாரித்தேன். அதில் கிடைத்த அனுபவத்தை வைத்து மியூசிக் ஆல்பம் தயாரித்து நடித்தேன். அது ஒரளவு ரீச் ஆச்சு. பிறகு பொழுதுபோக்கு அம்சமாக சில குறும்படங்களை நண்பர்களுடன் இணைந்து வெளியிட்டோம். அவை பரவலாக பேசப்பட்டது. இதற்கிடையில் பட வாய்ப்பு கேட்டு பல நிறுவனங்களை அணுகியிருந்தேன்.
எனது நல்ல நேரம், துல்கர் சல்மான் நடித்த 'ஓ கே கண்மணி' படத்தில் அவரது நண்பராக நடிக்க இயக்குனர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸிலிருந்து அழைப்பு வந்தது. கரும்பு தின்ன கூலியா என நினைத்து கொண்டே ஓ.கே., சொல்லி விட்டேன். பத்து நாள் ஷூட்டிங். படத்தில் ஒரு சில சீன்களே வந்தாலும் கூட அந்த படம் என்னை கவனிக்க வைத்தது.
பிறகு 'வஞ்சகர் உலகம்' என்ற படத்தில் முக்கிய கேரக்டர் வாய்ப்பு அமைந்தது. அது ஒரளவுபிரேக் கொடுத்தது. அந்த படத்தை பார்த்த இயக்குனர் லோகேஷ், 'மாஸ்டர்' படத்தில் நடிக்க வாய்ப்பு தந்தார். அதுவும் நடிகர் விஜய்யுடன் இணைந்து அவரது மாணவராக டான்ஸ், பாட்டு, டயலாக் என வாய்ப்பு கிட்டியது. முதலில் சற்று தயக்கமாக தான் இருந்தது. ஆனால் அதையும் மீறி நடித்தேன். எந்தவொரு விஷயத்தையும் நாம் நன்றாக செய்தால், அது நம்மை இந்த 'பீல்டில்' நல்ல இடத்துக்கு கொண்டு செல்லும் என்பதை தெரிந்து கொண்டேன்.
பின்னர் அஜித் நடித்த துணிவு படத்தில் நடித்தேன். அதில் சில கா ட்சிகள் படத்தில் வெளியாகவில்லை. இருந்தாலும் கூட அஜித்துடன் இணைந்து நடித்ததை மறக்க முடியாது. என் அப்பா ஒரு டாக்டர், அஜித்தின் தீவிர ரசிகர். இதனால் அவருடன் இணைந்து நடித்தது அப்பாவுக்கு சந்தோஷம். இந்த படத்திற்காக தாய்லாந்தில் அஜித்துடன் பதினைந்து நாட்கள் இருந்தோம். அவரிடமிருந்து தான் வாழ்க்கை பாடத்தை தெரிந்து கொண்டேன். ஷூட்டிங் இல்லாத நேரங்களில் எங்களுடன் அரட்டை அடிப்பார். கஷ்டப்பட்டு இந்த இடத்தை அடைந்த கதையை கூறுவார். தாய்லாந்து இரவு நேர புட் ஸ்டிரீட்டில் எங்களுடன் இணைந்து ஈகோ இல்லாமல் சாப்பிட்டார்.
நான் ரஜினியின் தீவிர ரசிகர். நானும் அவரை பார்த்துதான் நடிக்க வந்தேன். வஞ்சகர் உலகம் படத்தில் என்னுடன் நடித்த விசாகன் ரஜினி மகள் சவுந்தர்யாவின் கணவர். அந்த படம் முடிந்த பிறகு தான் அவர்களுக்கு திருமணம் நடந்தது. ரஜினியை விசாகனுடன் இணைந்து சந்தித்திருக்கிறேன். தற்போது பெயரிடப்படாத இரு படங்களில் ஹீரோவாக நடித்து முடித்துள்ளேன். விரைவில் அவை ரிலீஸ் ஆகும்.
படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் சுற்றுலா செல்ல பிடிக்கும். சமீபத்தில் அமெரிக்கா, வியட்நாம் சென்று வந்தேன். டிரக்கிங் செய்யவும் பிடிக்கும். புதுப்புது இடங்களுக்கு சென்று வந்த வண்ணம் இருப்பேன். ஆனால் எங்கு சென்றாலும் ஜிம், ஒர்க்அவுட் செய்ய தவறமாட்டேன். விஜய் அரசியலுக்கு சென்றது மகிழ்ச்சி தான். என்னை பொறுத்தவரையில் ஆக்டிங் தான் பர்ஸ்ட். அதில் தான் என் முழுக் கவனத்தையும் செலுத்தி வருகிறேன். அடுத்தடுத்து வரும் படங்கள் மக்களிடம் என்னை கொண்டு போய் சேர்க்கும் என்றார் நம்பிக்கையுடன்.