மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா | சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை | சிவராஜ் குமாருக்கு பதிலாக விஷால் | விஜய் மகன் இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | 27 ஆண்டுகளுக்கு முந்தைய ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா விடாமுயற்சி? | 20வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய அனிகா சுரேந்திரன் | தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழ் சினிமாவில் வழக்கம் போல் இந்தாண்டும் 200க்கும் அதிகமான படங்கள் வெளியாகி உள்ளன. பெரிய பட்ஜெட் படங்களை விட சின்ன பட்ஜெட் படங்கள் கவனிக்க வைத்தன. நிறைய சர்ச்சைகளும் கடந்தன. ஓடிடிகள் குறைந்தன. சில படங்கள் ஏமாற்றம் தந்தன. சில படங்கள் ஆச்சர்யப்பட வைத்தன. இப்படியாக 2023 தமிழ் சினிமா பற்றிய முழு ரவுண்ட்-அப்பை இங்கு காணலாம்.
விஜய் - அஜித் மோதல்
ஆண்டின் துவக்கத்திலேயே விஜய் நடித்த 'வாரிசு' படமும், அஜித் நடித்த 'துணிவு' படமும் பொங்கலை முன்னிட்டு வெளியாகி மோதிக் கொண்டன.
240 படங்கள் ரிலீஸ்
கடந்த சில ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் 200 படங்கள் ரிலீஸாகின்றன. 2023ல் 240க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகி உள்ளன.
குறைந்த ஓடிடி
நேரடியாக ஓடிடியில் வெளியாகும் படங்களின் எண்ணிக்கை இந்தாண்டு வெகுவாக குறைந்துள்ளது. மொத்தமாக 6 படங்கள் மட்டுமே ரிலீஸாகின.
இரு ரூ.600 கோடி
2023ல் வெளியான படங்களில் 600 கோடிக்கும் அதிகமாக வசூலைக் குவித்த படங்களாக ரஜினி நடித்த 'ஜெயிலர்' படமும், விஜய் நடித்த 'லியோ' படம் அமைந்தது.
முதல் பாகத்தின் வசூலை மிஞ்சும் என்று எதிர்பார்க்கப்பட்ட 'பொன்னியின் செல்வன் 2' படம் 300 கோடி வசூலை மட்டுமே கடந்தது.
விஜய்யின் 'வாரிசு' படம் 300 கோடி வசூல் என்றும், அஜித்தின் 'துணிவு' படம் 250 கோடி வசூல் என்றும் உறுதியற்ற தகவலைச் சொன்னார்கள்.
தனுஷின் வாத்தி படம், விஷால், எஸ்ஜே சூர்யா நடித்து வெளிவந்த 'மார்க் ஆண்டனி' ஆகிய படங்கள் 100 கோடி வசூலைப் பெற்றன.
இயக்கத்தில் யார் டாப்
ஒன்றுக்கு மேற்பட்ட படங்களை இயக்கியவர்கள் - “பாகீரா, மார்க் ஆண்டனி” படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன், “கொன்றால் பாவம், மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்” படங்களை இயக்கிய தயாள் பத்மநாபன், “கோஸ்டி, 80ஸ் பில்டப்” படங்களை இயக்கிய கல்யாண், “த கிரேட் இந்தியன் கிச்சன், காசேதான் கடவுளடா” படங்களை இயக்கிய ஆர் கண்ணன், “வில் வித்தை, எண் 6 வாத்தியார் கால்பந்தாட்டக் குழு” படங்களை இயக்கிய ஹரி உத்ரா.
ஹீரோக்களில் யார் டாப்
அதிகப் படங்களில் நடித்த கதாநாயகர்கள் - விஜய் ஆண்டனி ( தமிழரசன், பிச்சைக்காரன் 2, கொலை, ரத்தம்), சந்தானம் (டிடி ரிட்டன்ஸ், கிக், 80ஸ் பில்டப்).
ஹீரோயின்களில் யார் டாப்
அதிகப் படங்களில் நடித்த கதாநாயகிகள் - ஐஸ்வர்யா ராஜேஷ் (ரன் பேபி ரன், த கிரேட் இந்தியன் கிச்சன், சொப்பன சுந்தரி, பர்ஹானா, தீராக் காதல்), பிரியா பவானி சங்கர் (அகிலன், பத்து தல, ருத்ரன், பொம்மை), மகிமா நம்பியார் (சந்திரமுகி 2, 800 த மூவி, ரத்தம், நாடு).
அசர வைத்த யோகிபாபு
கதாநாயகன், காமெடி, குணச்சித்திர கதாபாத்திரம் என நிறைய படங்களில் நடித்துள்ளார் யோகி பாபு - வாரிசு, பொம்மை நாயகி, த கிரேட் இந்தியன் கிச்சன், இரும்பன், கோஸ்டி, யானை முகத்தான், தமிழரசன், பிச்சைக்காரன் 2, கருங்காப்பியம், காசேதான் கடவுளடா, டக்கர், மாவீரன், எல்ஜிஎம், ஜெயிலர், பார்ட்னர், கருமேகங்கள் கலைகின்றன, லக்கி மேன், தில்லு இருந்தா போராடு, ஷாட் பூட் த்ரி, குய்கோ'.
கவனிக்க வைத்த அறிமுக இயக்குனர்கள்
அறிமுக இயக்குனர்களில் பாராட்டுக்களைப் பெற்றவர்கள் - கணேஷ் கே பாபு (தாதா), மந்திரமூர்த்தி (அயோத்தி), விநாயக் சந்திரசேகரன் (குட் நைட்), விஜய் ஆண்டனி (பிச்சைக்காரன் 2), விக்னேஷ் ராஜா (போர் தொழில்), ராம் சங்கையா (தண்டட்டி), அருள் செழியன் (குய்கோ), ராம்குமார் பாலகிருஷ்ணன் (பார்க்கிங்).
இசையில் யார் டாப்
அதிகப் படங்களுக்கு இசையமைத்தவர் சாம் சிஎஸ். ரன் பேபி ரன், பகாசூரன், தக்ஸ், அகிலன், கொன்றால் பாவம், கோஸ்டி, கண்ணை நம்பாதே, திருவின் குரல், தமிழ்க்குடிமகன், ரெட் சாண்டல்வுட், த ரோட், ரெய்டு, பார்க்கிங் என 13 படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
குட் சொல்ல வைத்த குட்டி பட்ஜெட் படங்கள்
இந்தாண்டு 'தாதா, அயோத்தி, பத்து தல, குட் நைட், பிச்சைக்காரன் 2, போர் தொழில், விடுதலை பார்ட் 1, மாமன்னன், மாவீரன், டிடி ரிட்டர்ன்ஸ், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்,' ஆகிய படங்கள் தியேட்டர் வசூலில் குறிப்பிடத்தக்க லாபத்தை கொடுத்தன. இவற்றில் பெரும்பாலானவை சின்ன பட்ஜெட் படங்களாகும்.
கவனிக்க வைத்த படங்கள்
பொம்மை நாயகி, தலைக்கூத்தல், ராஜா மகள், யாத்திசை, பர்ஹானா, எறும்பு, தீராக் காதல், தண்டட்டி, சத்திய சோதனை, ஹர்காரா, நூடுல்ஸ், சித்தா, இறுகப்பற்று, கூழாங்கல், கிடா, ஜோ, நாடு, பார்க்கிங் போன்ற படங்கள் வித்தியாசமான கதைகளத்தில் கவனிக்க வைத்த படங்களாக அமைந்தன.
ஏமாற்றிய படங்கள்
அதிகம் எதிர்பார்க்கப்பட்டு ஏமாற்றிய படங்களாக சந்திரமுகி 2, ஜப்பான், அகிலன், இறைவன், அன்னப்பூரணி ஆகிய படங்கள் அமைந்தன.
ஹிட் அடித்த காவாலா
யு டியூபில் அதிகப் பார்வைகளைப் பெற்ற பாடல் - முதலிடத்தில் ஜெயிலர் - காவாலா…பாடல் - 227 மில்லியன், இரண்டாம் இடத்தில் வாரிசு - ரஞ்சிதமே…பாடல் - 224 மில்லியன்.
இயக்குனர் விஜய் ஆண்டனி
இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர் விஜய் ஆண்டனி 'பிச்சைக்காரன் 2' படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.
தயாரிப்பாளர் தோனி
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி, தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்து முதன் முதலில் தயாரித்த படமாக தமிழ்ப் படமான 'எல்கேஜி' வெளிவந்தது.
முரளிதரன் வாழ்க்கை
இலங்கை கிரிக்கெட் அணியில் இடம் பெற்ற தமிழரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படமாக '800' வெளியானது.
ஒரே ஆண்டில் விஜய்க்கு இரண்டு
2023ல் விஜய் நடிப்பில் வாரிசு, லியோ என இரு படங்கள் ரிலீஸாகின. இரண்டு படங்களின் வசூல் மட்டும் ரூ.900 கோடியாகும்.
கமல், சூர்யாவுக்கு நோ
கமல்ஹாசன், சூர்யா நடிப்பில் 2023ல் எந்த ஒரு படமும் வெளியாகவில்லை.
ஹிந்தியில் ஹிட்டடித்த தமிழ் நட்சத்திரங்கள்
'ஜவான்' படம் மூலம், தமிழிலிருந்து ஹிந்திக்குச் சென்று அறிமுகமாகி 1000 கோடி வசூலைக் கொடுத்த இயக்குனராக சாதித்தவர் அட்லீ.
அப்படத்தின் மூலம் ஹிந்தியில் கதாநாயகியாக நயன்தாராவும், வில்லனாக விஜய் சேதுபதியும், இசையமைப்பாளராக அனிருத்தும் அறிமுகமானார்கள்.
கவனிக்க வைத்த நிமிஷா
அறிமுக ஹீரோயின்களில் பாராட்டுக்களைப் பெற்றவர் 'சித்தா' படத்தில் அறிமுகமான நிமிஷா சஜயன். 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படத்திலும் கதாநாயகியாக நடித்து பாராட்டப்பட்டார்.
நாகசைதன்யா தமிழில் என்ட்ரி
தெலுங்கிலிருந்து தமிழுக்கு அறிமுகமான கதாநாயகன் நாகசைதன்யா (படம் - கஸ்டடி).
உதயநிதி நடிப்புக்கு முழுக்கு
'மாமன்னன்' படத்திற்குப் பிறகு இனி, சினிமாவில் நடிக்க மாட்டேன் என அறிவித்தார் உதயநிதி ஸ்டாலின்.
மாறுபட்ட வடிவேலு
நகைச்சுவை நடிகரான வடிவேலு, 'மாமன்னன்' படத்தில் குணச்சித்திரக் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை நெகிழ வைத்தார்.
ஹீரோவான சூரி
நகைச்சுவை நடிகரான சூரி, 'விடுதலை பார்ட் 1' மூலம் கதாநாயகனாக உயர்ந்தார்.
இரண்டாம் பாக படங்கள்
இந்த ஆண்டில் வெளிவந்த இரண்டாம் பாகத் திரைப்படங்கள் - பொன்னியின் செல்வன் 2, பிச்சைக்காரன் 2, தலைநகரம் 2, சந்திரமுகி 2, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்.
ஆக்கிமரத்த ஆங்கில தலைப்புகள்
ஆங்கிலத் தலைப்பில் இந்த ஆண்டில் அதிகமான படங்கள் வெளிவந்துள்ளன. டியர் டெத், பிகினிங், ரன் பேபி ரன், தக்ஸ், பியூட்டி, மெமரீஸ், டி 3, கோஸ்டி, ரேசர், கஸ்டடி, குட்நைட், பெல், பம்பர், இன்பினிட்டி, எக்கோ, சின்க், டிடி ரிட்டன்ஸ், டைனோசர்ஸ், எல்ஜிஎம், லவ், பிட்சா 3 த மம்மி, டெரர், லாக் டவுன் டைரி, வெப், ஜெயிலர், ப்ரோக்கன் ஸ்கிரிப்ட், பிளாக் அன் நைட், பார்ட்னர், கிக், லக்கி மேன், நூடுல்ஸ், ரெட் சாண்டல்வுட், ஸ்ட்ரைக்கர், மார்க் ஆண்டனி, ஆர் யு ஓ கே பேபி, டீமன், த ரோடு, லியோ, கபில் ரிட்டர்ன்ஸ், லைசென்ஸ், ரூல் நம்பர் 4, ரெய்டு, 80ஸ் பில்டப், லாக்கர், பார்க்கிங், கான்ஜுரிங் கண்ணப்பன், பைட் கிளப்.
திரையுலகின் சர்ச்சைகள்
* லியோ படம் முதல் போஸ்டர் வெளியானது முதல் படம் வெளியானது வரை தொடர் சர்ச்சைகளை சந்தித்தது. புகையிலை, குடிப்பழக்கம் தொடர்பான வரிகள், காட்சிகள், அதிகாலை காட்சி ரத்து... என பல சர்ச்சைகளை எதிர்கொண்டது.
* 17 ஆண்டுகளாக நடந்து வரும் ‛பருத்திவீரன்' பட பஞ்சாயத்து தொடர்பாக இயக்குனர் அமீர், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா மாறி மாறி பேட்டியளித்த சம்பவம் சர்ச்சையானது.
* நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டதாக இசையமைப்பாளர் இமான் பேட்டி கொடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
* நடிகை திரிஷா பற்றி நடிகர் மன்சூர் அலிகான் பேசிய ஆபாசமான வார்த்தைகள் அவர் மீது வழக்கும் பதிவு செய்யும் அளவுக்கு சர்ச்சையானது.
* சென்னையில் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் நடத்திய இசை நிகழ்ச்சி முறையாக ஒருங்கிணைக்காததால் கடும் சர்ச்சைகளை சந்தித்தது.
* சேரி மொழி தொடர்பாக நடிகை குஷ்பு பேசிய கருத்துக்கள் சர்ச்சையானது.
* மார்க் ஆண்டனி படத்தை ஹிந்தியில் திரையிட மும்பையில் சென்சாரிடம் முறையிட்ட போது அங்கிருந்த அதிகாரிகள் ரூ.6 லட்சம் லஞ்சம் கேட்டதாக விஷால் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
* சூப்பர் ஸ்டார் பட்டத்தை வைத்து ரஜினி - விஜய் சொன்னா காக்கா, கழுகு கதைகள், அதை வைத்து ரசிகர்கள் சண்டை அரங்கேறியது.
அச்சுறுத்தும் டீப் பேக் வீடியோ
ஏஐ தொழில்நுட்பம் மூலம் நடிகைகளை போலியாக சித்தரித்து ஆபாச வீடியோக்கள் வெளியாக தொடங்கி சர்ச்சையானது. இதில் ராஷ்மிகா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட நடிகைகள் சிக்கினர்.