'சாமி, திருப்பாச்சி' புகழ் நடிகர் கோட்டா சீனிவாசராவ் காலமானார் | 300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா |
2022ம் ஆண்டில் தமிழ் சினிமாவில் நிகழ்ந்த சில முக்கிய நிகழ்வுகளை இங்கு பார்க்கலாம்....
2022ம் ஆண்டு பொங்கலுக்கு முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகவில்லை.
40 கதைகளைக் கேட்டு தூங்கினேன் என்று சொன்ன குக் வித் கோமாளி புகழ் அஷ்வின் கதாநாயகனாக அறிமுகமான 'என்ன சொல்லப் போகிறாய்' பொங்கலை முன்னிட்டு வெளிவந்தது.
வடிவேலுவின் பிரபல கதாபாத்திரப் பெயரான 'நாய் சேகர்' என்ற பெயரை படத் தலைப்புக்காக வைக்க சிக்கல் ஏற்பட்டு பின்னர் அப்படம் பொங்கலை முன்னிட்டு வெளிவந்தது. 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' என வடிவேலு அவருடைய படத்திற்குப் பெயர் வைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
முன்னணி நடிகர் நடித்த படம் ஒன்று இந்த ஆண்டில் பிப்ரவரி முதல் வாரத்தில் தான் வெளிவந்தது. விஷால் நடித்த 'வீரமே வாகை சூடும்' பிப்ரவரி 4 வெளியானது.
இந்த ஆண்டின் முதல் வெற்றிப் படமாக விஷ்ணு விஷால் நடித்த 'எப்ஐஆர்' பிப்ரவரி 11ம் தேதி வெளியானது.
'காக்கா முட்டை' மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்த 'கடைசி விவசாயி' படம் பிப்ரவரி 11ம் தேதி வெளியானது. அப்படத்தில் நல்லாண்டி என்ற முதியவர் கதாநாயகனாக நடித்தார்.
அஜித் கதாநாயகனாக நடித்த 'வலிமை' பிப்ரவரி 24ம் தேதி வெளிவந்தது. படத்தில் யுவன்ஷங்கர் ராஜா பாடல்களுக்கு மட்டுமே இசையமைக்க, ஜிப்ரான் பின்னணி இசையை அமைத்தார். இயக்குனர் வினோத், இசையமைப்பாளர் யுவன் இடையிலான மோதலே அதற்குக் காரணம்.
நடன இயக்குனர் பிருந்தா இயக்குனராக அறிமுகமான 'ஹே சினாமிகா' படம் மார்ச் 3ம் தேதி வெளிவந்தது.
பாண்டிராஜ் இயக்கத்தில், சூர்யா கதாநாயகனாக நடித்து மார்ச் 10ம் தேதி வெளிவந்த 'எதற்கும் துணிந்தவன்' பெரிய அளவில் பேசப்படவில்லை.
வெங்கட் பிரபு இயக்கத்தில் அசோக் செல்வன் நடித்து ஏப்ரல் 1ம் தேதி வெளியான அடல்ட் காமெடி படமான 'மன்மத லீலை' கொஞ்சம் பரபரப்பை ஏற்படுத்தியது.
நெல்சன் இயக்கத்தில், விஜய், பூஜா ஹெக்டே நடித்த 'பீஸ்ட்' படம் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 13ம் தேதி வெளிவந்தது. 'அரபிக் குத்து' பாடல் ஏற்படுத்திய பரபரப்பை படம் ஏற்படுத்தவில்லை.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் முன்னணி கதாநாயகிகளான நயன்தாரா, சமந்தா இருவரும் விஜய் சேதுபதி ஜோடியாக நடித்த 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படம் ஏப்ரல் 28ல் வெளிவந்தது.
ஈரானிய இயக்குனராக மஜித் மஜித் இயக்கத்தில் 1997ல் வெளிவந்த ஈரானியத் திரைப்படமான 'சில்ட்ரன் ஆப் ஹெவன்' படம் தமிழில் 'அக்கா குருவி' என்ற பெயரில் ரீமேக் ஆகி மே 6ம் தேதி வெளியானது.
அறிமுக இயக்குனர் சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் நடித்த 'டான்' படம் மே 13ல் வெளிவந்து வெற்றிப் படமாகியது.
ஹிந்தியில் 2019ல் வெளிவந்த 'ஆர்ட்டிக்கிள் 15' படம் தமிழில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க, நெஞ்சுக்கு நீதி என்ற பெயரில் ரீமேக் ஆகி மே 20ம் தேதி வெளிவந்தது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் மற்றும் பலர் நடிப்பில் ஜுன் 3ம் தேதி வெளிவந்த 'விக்ரம்' படம் மாபெரும் வெற்றி பெற்றது. கமல்ஹாசனின் திரையுலகப் பயணத்தில் 400 கோடிக்கும் அதிகம் வசூலித்து பெரும் சாதனையைப் புரிந்தது. 'கைதி' படத்தின் கதாபாத்திரங்களை இந்தப் படத்தில் கொண்டு வந்து 'லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ்' எனப் பேச வைத்தார் இயக்குனர் லோகேஷ்.
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் சாக்லேட் பாயாக இருந்த மாதவன் 'ராக்கெட்ரி - நம்பி விளைவு' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். ஜுலை 1ம் தேதி இந்தப் படம் தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியானது.
தெலுங்கு நடிகரான ராம் பொத்தினேனி தமிழில் அறிமுகமான 'த வாரியர்' ஜுலை 17ம் தேதி வெளிவந்தது. இப்படத்தில் கிரித்தி ஷெட்டியும் கதாநாயகியாக அறிமுகமானார்.
கவுதம் ராமச்சந்திரன் இயக்கத்தில், சாய் பல்லவி கதாநாயகியாக நடித்து ஜுலை 15ம் தேதி வெளிவந்த 'கார்கி' படம் வித்தியாசமான படமாக அமைந்து நல்ல விமர்சனங்களைப் பெற்றது.
பார்த்திபன் இயக்கத்தில் ஏஆர் ரகுமான் இசையமைப்பில் ஜுலை 15ம் தேதி வெளிவந்த 'இரவின் நிழல்' படம் இந்தியத் திரையுலகத்தின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் படம் என்ற பெருமையைப் பெற்றது.
தங்களது கடை விளம்பரங்கள் மூலம் பரபரப்பை ஏற்படுத்திய சரவணன் அருள் கதாநாயகனாக அறிமுகமான 'த லெஜன்ட்' படம் ஜுலை 28ம் தேதி வெளிவந்தது. இப்படத்தின் டிரைலர் முன்னணி நடிகர்கள் சிலரின் டிரைலரை விடவும் அதிகம் பார்க்கப்பட்டது.
கல்கி எழுதிய புகழ் பெற்ற சரித்திர நாவலான 'பொன்னியின் செல்வன்' இரண்டு பாகங்களாக திரைப்படமாகத் தயாராகி முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி பான் இந்தியா படமாக வெளிவந்தது. மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையில், விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்ய லட்சுமி மற்றும் பலர் நடித்தனர்.
'கோமாளி' படத்தை இயக்கிய பிரதீப் ரங்கநாதன் இயக்கி, கதாநாயகனாக அறிமுகமாகி நவம்பர் 11ம் தேதி வெளிவந்த 'லவ் டுடே' படம் இந்த ஆண்டின் முக்கிய வெற்றிப் படங்களில் ஒன்றாக அமைந்தது.
2022ம் ஆண்டில் வெளிவந்த பாடல்களில் 'பீஸ்ட்' படத்தில் இடம் பெற்ற 'அரபிக்குத்து' பாடல் யு டியுபில் மொத்தமாக 853 மில்லியன் பார்வைகளைப் பெற்று சாதனை படைத்துள்ளது. இப்பாடலை எழுதியது நடிகர் சிவகார்த்திகேயன்.
'பீஸ்ட்' பட டிரைலர் 59 மில்லியன் பார்வைகளைப் பெற்று நம்பர் 1 இடத்தைப் பிடித்தது.
கடந்த 100 வருட தமிழ் சினிமா வரலாற்றில் இந்த 2022ம் ஆண்டில்தான் தமிழ் சினிமா அதிகப்படியான வசூலைக் குவித்துள்ளது. 'பொன்னியின் செல்வன், விக்ரம், பீஸ்ட், வலிமை, டான், திருச்சிற்றம்பலம், வெந்து தணிந்தது காடு, சர்தார், லவ் டுடே' ஆகிய படங்கள் மூலம் சுமார் 1500 கோடி வசூல் வந்திருக்கலாம்.
தெலுங்கிலிருந்து டப்பிங் ஆகி வந்த 'ஆர்ஆர்ஆர்', கன்னடத்திலிருந்து வந்த 'கேஜிஎப் 2, காந்தாரா' படங்கள் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றன.
ஹிந்தியிலிருந்து டப்பிங் ஆகி வந்த ஆமிர்கானின் 'லால் சிங் சத்தா', ரன்பீர் கபூரின் 'பிரம்மாஸ்திரா' வசூலைப் பெறவில்லை. ஆமிர், ரன்பீர் இருவருமே சென்னைக்கு வந்து அவர்களது படங்களை புரமோஷன் செய்தனர்.
இயக்குனர் செல்வராகவன் 'பீஸ்ட்' படம் மூலம் நடிகராக அறிமுகமானார்.
'குற்றம் குற்றமே, சூப்பர் சீனியர் ஹீரோஸ்' ஆகிய படங்கள் நேரடியாக டிவிக்களில் வெளியானது.
இந்த ஆண்டில் ஓடிடிக்களில் வெளியான படங்ளில் விக்ரம் நடித்த 'மகான்', தனுஷ் நடித்த 'மாறன்', செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் நடித்த 'சாணி காயிதம்' முக்கியமான படங்கள்.
இளையராஜாவும், யுவனும் முதன்முறையாக இணைந்து மாமனிதன் படத்திற்கு இசையமைத்தார்கள்.
டிச23 வரை 180 படங்கள் தியேட்டர்களிலும், 25 படங்கள் ஓடிடியிலும் வெளியானது. இவற்றில் ஓடிடியில் வெளியான ‛மஹான்' ஓரளவுக்கு கவனிக்க வைத்தது.
இந்தாண்டு அறிமுகமான புதுமுக நாயகர்களில் லவ்டுடே ஹீரோ பிரதீப் ரங்கநாதன் மட்டுமே வெற்றி பெற்றார்.
ஷங்கர் மகள் அதிதி விருமன் படத்திலும், வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்த சித்தி இட்னானி ஆகியோர் அறிமுக நடிகைகளில் கவனிக்க வைத்தனர்.
ரஜினி நடிப்பில் இந்தாண்டு ஒரு படங்கள் கூட வெளியாகவில்லை. மாறாக ‛பாபா' படத்தை ரீ-ரிலீஸ் செய்தனர்
நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் நடந்தது. அதேசமயம் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றது சர்ச்சையானது.
மாமன்னன் படமே எனது நடிப்பில் வெளியாகும் கடைசி படம் என அமைச்சர் ஆன பின் உதயநிதி அறிவித்தார்.
இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு எம்பி பதவி வழங்கப்பட்டது.
தெலுங்கில் இருந்து தமிழுக்கு வந்து ஹீரோவாக நடித்தவர் ராம் பொதினேனி, வில்லனாக நடித்தவர் கார்த்திகேயா.
2022 வருடக் கடைசி வெள்ளிக்கிழமையான டிசம்பர் 30ம் தேதி 10 படங்கள் வரை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.