மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா | சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை | சிவராஜ் குமாருக்கு பதிலாக விஷால் | விஜய் மகன் இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | 27 ஆண்டுகளுக்கு முந்தைய ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா விடாமுயற்சி? | 20வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய அனிகா சுரேந்திரன் | தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நம் இந்திய தாய் திருநாடு இன்று 75ம் ஆண்டு சுதந்திர தினத்தை வெகு விமரிசையாக கொண்டாடி வருகிறது. இன்று நாம் சுவாசிக்கும் சுதந்திர காற்று அவ்வளவு எளிதாக கிடைக்கவில்லை. பல தியாகிகள் ரத்தம் சிந்தி வாங்கி கொடுத்துள்ளனர். அப்படி பெற்ற சுதந்திரத்தை நாம் பேணி காப்பது ஒவ்வொரு குடிமகனின் தலையாய கடமை.
நாட்டில் சுதந்திர தீ பற்றி எரிந்த காலக்கட்டத்தில் தான் இந்தியாவில் சினிமாவும் மெல்ல வளர தொடங்கியது. அன்றைய காலத்தில் நாடகங்கள் மூலமும், திரைப்படங்கள் மூலம் சுதந்திர வேள்வி தீயை மக்களுக்கு எடுத்து கூறினர். இன்றைய காலத்து இளைஞர்களுக்கு சுதந்திரத்திற்காக போராடிய கட்டபொம்மனையோ, மருது சகோதரர்களையே, வ.உ.சியையோ இன்னும் எத்தனையோ எத்தனை தியாகிகளின் போராட்டம், அவர்கள் நாட்டுக்காக எப்படி போராடினார்கள் என்பது பற்றி தெரியாது. ஆனால் அதை சினிமாக்கள் மூலம் மக்கள் தெரிந்து கொண்டார்கள். அப்படி வெள்ளித்திரையில் விடுதலை வேட்கையையும், நாட்டுப்பற்றையும் வெளிப்படுத்திய தமிழ் படங்களை இங்கு காணலாம்.
தியாக பூமி - முதல் விதை
ஊமைப் படங்களிலிருந்து பேசும் படம் என்ற இலக்கை எட்டிய 1930களின் பிற்பகுதி மற்றும் 40களில் வெளிவந்த பெரும்பாலான தமிழ் படங்கள் சமூகம் சார்ந்ததாகவும், ஆன்மிகம் சார்ந்ததாகவும், மாயாஜாலங்கள் நிறைந்த கற்பனை கதைகளைச் சார்ந்ததாகவும் இருந்த காலகட்டங்களில் வெளிவந்த திரைப்படம் தான் "தியாக பூமி". 1939 ஆம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படம், நாட்டுப்பற்றையும், விடுதலை வேட்கையையும், வேடிக்கையாக படம் பார்க்க வந்த மக்கள் மனங்களில் விதையாக பதியமிட்ட முதல் திரைப்படம் என்றால் அது மிகையன்று.
வீரபாண்டிய கட்டபொம்மன்
இதன் நீட்சியாக, வெள்ளையர்களை எதிர்த்து வீர மரணம் எய்திய விடுதலை போராளி "வீரபாண்டிய கட்டபொம்மன்" வாழ்க்கையை சொல்லும் படமாக, 1959 ஆம் ஆண்டு சில நவீன உத்திகளோடு, வண்ணத் திரைப்படமாக வநத்து. தாய்நாட்டின் பிடிமண்ணைக் கூட அயலானிடம் விட்டுக் கொடுக்காமல், வெள்ளையர்களுக்கு சிம்ம சொப்பனமாக காட்சி தந்த "வீரபாண்டிய கட்டபொம்மன்" எவ்வாறு எட்டப்பனால் காட்டிக் கொடுக்கப்பட்டு, வெள்ளையர்களால் வீழ்ந்தான் என்ற வீர வரலாற்றை, தேர்ந்த கலைஞர்களால் தத்ரூபமாக காட்சிப்படுத்தப்பட்டு, படம் பார்க்கும் நம் மனங்களிலும், நாட்டுப் பற்றை விதைத்துச் சென்றனர்.
சிவகங்கை சீமை
சிவகங்கை பக்கம் சின்ன மருது, பெரிய மருது என அழைக்கப்படும் மருது சகோதரர்கள், வெள்ளையர்களை எப்படி தைரியமாக எதிர்த்து நின்றார்கள் என்பதை அழகாக விளக்கிய படமாக ‛சிவகங்கை சீமை' படம் வெளிவந்தது. கே சங்கர் இயக்கிய இந்த படம் 1959ம் ஆண்டு வெளிவந்தது. எஸ்எஸ் ராஜேந்திரன், டிகே பகவதி, பிஎஸ் வீரப்பா முக்கிய வேடங்களில் நடித்தனர்.
கப்பலோட்டிய தமிழன்
பின்னர் 1960 ஆம் ஆண்டு 'செக்கிழுத்த செம்மல்' வ.உ சிதம்பரம் பிள்ளை அவர்களின் தேசப் பற்றையும், இந்த தேசத்தின் விடுதலைக்காக தன் செல்வங்களை எல்லாம் இழந்து, வெள்ளையர்களால் சிறைபிடிக்கப்பட்டு, செக்கிழுத்து துன்புற்று விடுதலை பெற்றுத் தந்த அந்த தியாகச் செம்மலின் வரலாற்றை கூறும் திரைப்படமாக வெளிவந்த திரைப்படம் தான் "கப்பலோட்டிய தமிழன்". படம் பார்க்கும் நமக்கு, படமாக மட்டும் அல்லாமல், தேசப் பற்றை விளக்கும் பாடமாக இருந்ததோடு, சுப்ரமண்ய சிவா, மகாகவி பாரதியார் போன்ற மாபெரும் விடுதலைப் போராட்ட தலைவர்களை காணாத, இன்றைய தலைமுறையினரும் தத்ரூபமாக காணும் வகையில்; அன்றைய திரைக் கலைஞர்களின் அற்பணிப்புள்ள நடிப்பிலும் தேசப் பற்றை காண முடிந்தது.
1960க்கு பின்னர் மேலும் சில படங்கள் மக்களிடையே நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் விதமாக வெளிவந்தன. அவற்றில் குறிப்பிட்டும் சொல்லும் படியான படங்கள் என்றால் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளிவந்த சிவந்த மண், ரத்த திலகம் படங்களை சொல்லலாம். திவானின் கொடுங்கால் ஆட்சியிலிருந்து விடுதலை பெற்று மக்களாட்சி மலர செய்ய வேண்டும் என்ற கருத்தை மையமாக வைத்து, இளைஞர்களின் எழுச்சி படமாக சிவந்த மண் வந்தது. இந்த படத்தில் இளைஞர்களின் நாட்டுப்பற்றை விதைக்குமா விதமாக அழகான காட்சி அமைப்புகளை வெளிப்படுத்தியிருந்தார் இயக்குனர் ஸ்ரீதர். அதேப்போன்று இந்திய - சீன போரை மையமாக வைத்து அந்த போரில் நமது இந்திய ராணுவத்தினரின் தியாகத்தை வெளிப்படுத்தும் விதமாக எடுக்கப்பட்ட படம் தான் ரத்த திலகம்.
சிறைச்சாலை
பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால், பிரபு நடிப்பில் வெளியான படம் சிறைச்சாலை. அந்தமான் சிறைகளில் இந்தியர்கள் எவ்வளவு கொடூரமாக ஆங்கிலேயர்களால் நடத்தப்பட்டார்கள் என்பதை சித்தரிக்கும் விதமாக இந்த படம் வெளிவந்தது.
அதன்பிறகு ஒவ்வொரு காலக்கட்டத்திற்கு ஏற்ப சினிமாவின் தொழில்நுட்பம் மாற மாற சமூகத்திற்கு பல நல்ல கருத்துக்களையும், நாட்டுப்பற்றையும் விதைக்கும் விதமான படங்கள் வெளிவர தொடங்கின. அப்படிப்பட்ட படங்களை கொடுத்த இயக்குனர்களில் முக்கியமானவர்கள் மணிரத்னம் மற்றும் ஷங்கர் ஆகியோரை கூறலாம்.
உதாரணமாக மணிரத்னம் படைப்பில் வெளியான ரோஜா படம் எல்லையில் இந்தியாவிற்கு அச்சுறுத்தலாக இருந்த பயங்கரவாதிகளின் கதையையும், அதன் உடன் அழகிய காதலையும் சொன்ன படமாக வந்தது. அதில் ஒரு காட்சியில் பயங்கரவாதிகள் இந்திய தேசிய கொடியை எரிப்பர். அப்போது நாயகன் அரவிந்த்சாமி தனது உடலை வைத்து அந்த தீயை அணைக்க போராடுவார். இந்த படத்தில் இந்த ஒரு காட்சி போதும் நம்மை மெய்சிலிர்க்க வைத்தது.
அதேப்போன்று ஷங்கர் இயக்கிய இந்தியன் படம் ஊழல் கயவர்களை களையெடுத்து நாட்டை செம்மைப்படுத்தும் இந்தியனாக கமல்ஹாசன். நாட்டுக்கு துரோம் செய்வது பெத்த மகனே என்றாலும் அவனை கொல்லுவது தவறில்லை என நினைக்கும் ஒரு உண்மையான இந்திய குடிமகனாக நாயகனை சித்தரிந்திருந்த விதம் அலாதியானது. இந்த தலைமுறையினருக்கு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் எப்படி இருந்திருப்பார் என்று தெரியாத சூழலில் அவரையும் இந்த படத்தில் ஒரு காட்சியில் வைத்து பிரமிக்க வைத்து இருப்பார் இயக்குனர் ஷங்கர்.
நடிகர்கள் அர்ஜூன், விஜயகாந்த் ஆகியோரது படங்களில் பெரும்பாலும் தேசப்பற்றை வெளிப்படுத்தும் விதமான கதாபாத்திரமோ, வசனமோ அல்லது படத்தின் முழு கதையும் முழுக்க முழுக்க தேச நலனை மைப்படுத்தியே அமைந்ததாக இருக்கும். உதாரணமாக அர்ஜூனின் ஜெய்ஹிந்த், தாயின்மணிக்கொடி, முதல்வன், வானவில் போன்ற படங்களை சொல்லலாம். விஜகாந்திற்கு மாநகர காவல், தாயகம், வல்லரசு, நரசிம்மா போன்ற பல படங்களை சொல்லலாம்.
சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கு சாதனமாக இல்லாமல் படித்தவன் முதல் பாமரன் வரை இருக்கும் ஒவ்வொரு குடிமகனின் மனங்களிலும் தேசத்தையும், தேசப்பற்றையும், தேசத்திற்காக உயிர் நீத்த தியாகிகளின் பங்களிப்பையும் எடுத்து சொல்லிய இந்த சினிமா ஊடகம் இன்னும் பல அரும்பெரும் சாதனைகளை புரிந்து நம் தேசத்தின் புகழை உலககெங்கும் கொண்டு செல்லும் என்பது ஐயமில்லை.