வெளிநாடுகளில் கமலின் விக்ரம் பட வசூலை முறியடித்த அமரன் | விஜய் கட்சியில் இணைந்த வாழை பட நடிகர் பொன்வேல் | 12 ஆயிரம் தியேட்டர்களில் 'புஷ்பா 2' ரிலீஸ் | சீன உளவாளியாக எஸ்.ஜே.சூர்யா | சீனாவில் 'மகாராஜா' முதல் நாள் வசூல் | நிர்வாணமாக நடித்தது ஏன் : திவ்யா பிரபா விளக்கம் | 'மஞ்சுமல் பாய்ஸ்' பட லாபம் மறைப்பு : நடிகர் சவுபின் சாஹிர் அலுவலகத்தில் ஐடி ரெய்டு | மோசடி புகார் : நடிகை தன்யாவின் சொத்து முடக்கம் | பிளாஷ்பேக் : ஹீரோவாக நடித்த டெல்லி கணேஷ் | பிளாஷ்பேக் : தமிழகத்தில் பிறந்து இசையால் இந்தியாவை ஆண்ட வாணி ஜெயராம் |
தமிழ் சினிமாவில் பல முன்னணி கதாநாயகர்கள் இருக்கிறார்கள். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், கார்த்தி, சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன், விஷால், ஆர்யா இப்படி.
'மல்டி ஸ்டார்' படங்கள்
கதாநாயகர்களாக நடிக்கும் படங்களில் அவர்கள் மட்டுமே தனி கதாநாயகனாக நடிப்பது தான் இவர்கள் வழக்கம். வேறு கதாநாயகர்களுடன் சேர்ந்து நடிக்க தயங்குவார்கள். எங்கே, மற்றவர்களுக்கு முக்கியத்துவம் வந்துவிடுமோ, தங்களை விட அவர்கள் பெயர் வாங்கி விடுவார்களோ என்ற அச்சம் தான் இதற்கு காரணம். அதனால்தான் தமிழ் சினிமாவில் அதிகமான 'மல்டி ஸ்டார்' படங்களை பார்க்க முடிவதில்லை.
இதுவரையில் வெளிவந்த 'மல்டி ஸ்டார்' படங்களை விரல்விட்டு எண்ணி விடலாம். ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆரம்ப காலங்களில் ஒன்றாக சில படங்களில் நடித்தார்கள். ஆனால், தனித்துவம் பெற வேண்டி இருவருமே பேசி வைத்துக் கொண்டு ஒன்று சேர்ந்து நடிப்பதைத் தவிர்த்தார்கள். இன்று அவர்கள் இருவருமே பல சாதனைகளைப் புரிந்த கதாநாயகர்களாக இருக்கிறார்கள். அவர்கள் அளவிற்குக் கூட ஆரம்ப காலங்களில் ஒன்றாக சேர்ந்து நடித்த இன்றைய தலைமுறை நடிகர்களைப் பார்க்க முடியாது.
30 ஆண்டுகளில் 30 கூட இல்லை
விதிவிலக்காக எப்போதோ ஒரு முறை இப்படி மல்டி ஸ்டார் படங்கள் வருகின்றன. கடந்த 30 ஆண்டுகளில் வருடத்திற்கு சராசரியாக 100 படங்கள் என்று வைத்துக் கொண்டால் கூட 3000 படங்கள் வந்திருக்கின்றன. அந்தப் படங்களில் பதினைந்திற்கும் குறைவான படங்கள்தான் மல்டி ஸ்டார் படங்கள்.
1991ல் ரஜினிகாந்த், மம்முட்டி நடித்த 'தளபதி', 1995ல் இயக்கத்தில் கமல்ஹாசன், அர்ஜுன் நடிப்பில் 'குருதிப்புனல்', 2000ல் கமல்ஹாசன், ஷாரூக்கான் நடித்த 'ஹே ராம்', அதே வருடத்தில் மம்முட்டி, அஜித், அப்பாஸ் நடிப்பில் 'கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்', 2001ல் விஜய், சூர்யா நடித்த 'பிரண்ட்ஸ்', 2003ல் விக்ரம், சூர்யா நடிப்பில் 'பிதாமகன்', 2004ல் சூர்யா, மாதவன், சித்தார்த் நடித்த 'ஆய்த எழுத்து', 2011ல் விஷால், ஆர்யா நடிப்பில் 'அவன் இவன்', 2012ல் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் நடிப்பில் ‛நண்பன்', 2013ல் அஜித் - ஆர்யா நடித்த ‛ஆரம்பம்', 2017ல் மாதவன், விஜய் சேதுபதி நடித்த 'விக்ரம் வேதா', 2019ல் சூர்யா - ஆர்யா நடிப்பில் ‛காப்பான்', 2021ல் விஜய், விஜய் சேதுபதி நடித்த 'மாஸ்டர்', அதே வருடத்தில் விஷால், ஆர்யா நடிப்பில் வெளிவந்த 'எனிமி' ஆகிய படங்கள்தான் 30 வருடங்களில் தமிழ் சினிமாவில் வெளிவந்த சில மல்டி ஸ்டார் படங்கள்.
மாற்றம் தந்த விக்ரம்
“குருதிப்புனல், ஹே ராம்” படங்களுக்குப் பிறகு கமல்ஹாசன் மீண்டும் மல்டி ஸ்டார் படமாகக் கொடுத்தது தான் சமீபத்தில் வெளிவந்த 'விக்ரம்'. இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் கமலுடன் இணைந்து நடித்துள்ளார்கள். இந்தப் படத்தின் வெற்றி பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. ஜுன் 3ம் தேதி வெளியான இப் படம் பத்து நாட்களாக ஹவுஸ் புல் காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. தென்னிந்தியாவில் பெரிய வசூல் சாதனை புரிந்து முந்தைய கமல் படங்களின் வசூலை முறியடித்து 300 கோடி வசூலை நெருங்கிக் கொண்டிருக்கிறது.
சில மாதங்களில் சில தென்னிந்தியப் படங்கள், பான்--இந்தியா படங்களாக வெளிவந்து இந்திய அளவில் மட்டுமல்லாது உலக அளவிலும் வசூலைக் குவித்து வருகின்றன. அந்தப் படங்களுக்கு சிறிதும் குறைவில்லாமல் 'விக்ரம்' தென்னிந்திய மாநிலங்களில் தொடர் வசூலைப் பெற்று வருகிறது.
ஒரு படத்தின் வெற்றி என்பது அந்தப் படம் தரும் லாபத்தைப் பொறுத்தே அமைகிறது. 'விக்ரம்' படம் சுமார் 100 கோடிக்கும் கொஞ்சம் அதிகமான பட்ஜெட்டில் தயாரான ஒரு படம். இப்படத்தின் வசூல் 300 கோடியை நெருங்கியுள்ளதால் படத்தை வாங்கியவர்களுக்கு இரு மடங்கு லாபத்தைக் கொடுக்கும் என திரையுலகில் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள்.
'மல்டி ஸ்டார்' படங்கள் அதிகரிக்குமா
'விக்ரம்' பட வெற்றி தமிழ் சினிமாவில் ஒரு ஆரோக்கியமான மாற்றத்தை ஏற்படுத்துமா என திரையுலகினரும், ரசிகர்களும் காத்திருக்கிறார்கள். தற்போது மக்கள் தியேட்டர்களுக்கு வருவது குறைந்து வருகிறது. பெரிய நடிகர்கள் நடித்த படங்கள் வந்தால் மட்டும்தான் தியேட்டர் பக்கம் வருகிறார்கள். மற்ற நடிகர்களின் படம் நன்றாக இருப்பதாக தகவல் வந்தால் மட்டுமே தியேட்டர்களுக்குச் செல்கிறார்கள்.
அதே சமயம், 'விக்ரம்' படம் போல மல்டி ஸ்டார் படங்கள் அவ்வப்போது வந்தால் தியேட்டர்களுக்கு மக்கள் வரும் எண்ணிக்கை அதிகமாகும். 'விக்ரம்' படத்திற்கு அப்படித்தான் மக்களின் வருகை தொடர்ந்து இருந்து வருகிறது. வரும் வாரத்திலும் அப்படியே தொடரும் என தியேட்டர்காரர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
'மல்டி ஸ்டார்' படங்கள், திட்டமான பட்ஜெட், சரியான பிரமோஷன் இவைதான் 'விக்ரம்' படத்தின் வெற்றிக்குக் காரணமாக அமைந்துள்ளது. படத்தில் நகைச்சுவைக் காட்சிகள் கிடையாது, டூயட் பாடல்கள் கிடையாது, ஏன் கமல்ஹாசனுக்கு ஜோடி கூட கிடையாது என வழக்கமான சினிமாவிலிருந்து மாறுபட்டு வந்துள்ள 'விக்ரம்' ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளது. அதை மற்றவர்களும் தொடர்ந்தால் தமிழ் சினிமா தடுமாற்றம் இல்லாமல் தலை நிமிர்ந்து நடக்க வாய்ப்புகள் அதிகம்.