‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' | மனைவிக்கு ‛தடா' போட்ட சார்பட்டா நடிகர் | நடிகருக்காக சீன்களை சுடும் இயக்குனர்கள் | லாவண்யாவின் ஸ்(வரம்) | குழந்தை நட்சத்திரத்தில் இருந்து நாயகி வரை: தன்னம்பிக்கையோடு தனலெட்சுமி |

எழுத்தாளரும், இலக்கியவாதியுமான ஜெயகாந்தனின் இலக்கிய மேடையை அலங்கரித்து வந்த அவரது தலைசிறந்த படைப்புகளில் குறிப்பிடும்படியான சில திரைவடிவம் பெற்று, படித்துணரா பாமரனும் பார்த்துணரும் வண்ணம் பைந்தமிழ் திரைக்காவியமாய் வந்து பார்ப்போரின் புருவத்தை உயரச் செய்தது. “காவல் தெய்வம்”, “யாருக்காக அழுதான்”, “சில நேரங்களில் சில மனிதர்கள்”, “ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்”, “ஊருக்கு நூறு பேர்” போன்ற இவரது இலக்கிய படைப்புகள் எல்லாம் திரைப்பட வடிவம் பெற முன்னோடியாகவும், முதல் கலைப்படைப்பாகவும் வந்ததுதான் இந்த “உன்னைப் போல் ஒருவன்”.
உங்கள் கதைகளில் ஏதேனும் ஒன்றை சினிமாவாக எடுக்க நேர்ந்து, அதை நீங்களே இயக்கவும் விருப்பமிருந்தால், என்னை தொலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள். அப்படி ஒரு பெரிய திட்டமும், ஆசையும் எனக்கு இருக்கிறது என பிரபல தயாரிப்பாளர் வீனஸ் கிருஷ்ணமூர்த்தி ஒரு முறை ஜெயகாந்தனிடம் கூற, கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுக் கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக தமிழகம் முழுவதும் பிரயாணம் மேற்கொண்டிருந்த ஜெயகாந்தனிடம் கட்சித் தோழர்களும் அதே ஆசையை வெளிப்படுத்த, அப்போது வெளிவந்த அவரது “உன்னைப் போல் ஒருவன்” கதையை திரைப்படமாக்கலாம் என கட்சித் தோழர்கள் ஆர்வம் காட்டி வந்த வேளையில், தயாரிப்பாளர் வீனஸ் கிருஷ்ணமூர்த்தியை சந்தித்தார் ஜெயகாந்தன்.
ஆஹா! அற்புதமான கதை. நீங்கள் ஸ்கிரிப்ட் எழுத ஆரம்பித்து விடுங்கள் என அவரும் பச்சைக் கொடி காட்ட, பத்தே நாள்களில் முழு ஸ்கிரிப்டையும் எழுதி முடித்தார் ஜெயகாந்தன். பின்பு தனது தோழர்களோடு “உன்னைப் போல் ஒருவன்” ஸ்கிரிப்டை எடுத்துக் கொண்டு வீனஸ் கிருஷ்ணமூர்த்தியை சந்தித்து, முழு ஸ்கிரிப்டையும் அவரிடம் படித்துக் காட்ட, அவரோ, என்ன இது? படம் முழுவதும் சமைப்பதும், சாப்பிடுவதும், தூங்குவதுமாகத்தான் இருக்கும் போலிருக்கிறதே! இது மாதிரி எடுத்தால் வங்காளி படம் போலல்லவா இருக்கும்? என தனது விமர்சனத்தை வைக்க, கோபம் கொண்ட தோழர்கள் எப்பாடு பட்டாவது இந்தப் படத்தை நாங்கள் எடுத்துக் காட்டுகின்றோம் என கூறி அங்கிருந்து வெளியேறியதோடு, அதிரடியாக அவர்கள் உருவாக்கிய ஒரு தயாரிப்பு நிறுவனம்தான் “ஆசிய ஜோதி பிலிம்ஸ்” என்ற தயாரிப்பு நிறுவனம்.
1964 தீபாவளி நாளன்று படப்பிடிப்பை ஆரம்பித்த படக்குழு, 21 நாள்களில் மொத்த படப்பிடிப்பையும் முடித்தது. கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் ஆகிய பொறுப்புகளை ஜெயகாந்தன் கவனிக்க, பிரபாகர், காந்திமதி மற்றும் சேவா ஸ்டேஜ் நாடகக் குழுவினர் படத்தின் பிரதான நடிகர்களாக நடித்திருந்தனர். சிட்டிபாபுவின் வீணை இசை படத்தின் பின்னணி இசையாக ஒலித்தது. ஏ வி எம் ஸ்டூடியோ தியேட்டரில் படத்தின் பிரத்யேக காட்சி காட்டப்பட்டது. அப்போதைய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் கே பாலதண்டாயுதம், அப்போதைய காங்கிரஸ் தலைவர் கே காமராஜ், ஏ வி மெய்யப்ப செட்டியார் ஆகியோர் படத்தைப் பார்த்தனர்.
படம் முடிந்த பின்பு, இந்தப் படத்தை அரசாங்கமே வாங்கி, மக்களுக்கு இலவசமாக காட்ட ஏற்பாடு செய்ய வேண்டும் என காமராஜர் சொல்ல, மிக அற்புதமான கதை, வலுவான தீம், ரொம்ப ரியலிஸ்டிக்காக எடுத்திருக்கிறீர்கள். இந்தப் படத்தை ஜனாதிபதி பரிசுக்கும், வெளிநாடுகளில் திரையிடுவதற்கு மட்டும் நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள். இந்தக் கதையை பெரிய நடிகர்களை வைத்து தமிழில் எடுக்கலாம் என எனக்குத் தோன்றுகிறது. நீங்கள் அனுமதி கொடுத்தீர்கள் என்றால், இந்தப் படத்திற்கான மொத்த செலவு ரூபாய் ஒரு லட்சத்தை உங்கள் கதைக்கான சன்மானமாக நான் தந்து விடுகின்றேன் என ஏ வி மெய்யப்ப செட்டியாரும் கூற, ஜெயகாந்தன் அதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை.
1965ல் வெளியான இத்திரைப்படம், டிசம்பர் 30, 1964ல் தணிக்கை செய்யப்பட்டு, 12வது தேசிய திரைப்பட விருதுகளுக்கு அனுப்பப்பட்டு, மூன்றாவது சிறந்த திரைப்படத்திற்கான விருதினையும் அப்போது வென்றெடுத்தது.