டிவி நிகழ்ச்சியில் சவுந்தர்யாவை நினைத்து கண் கலங்கிய ரம்யா கிருஷ்ணன் | மீண்டும் பாலகிருஷ்ணா ஜோடியாக நயன்தாரா நடிப்பது ஏன் | ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனருக்கு பிஎம்டபுள்யூ கார் பரிசு | மாதவன், கங்கனா படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? | என் துயரத்தை சிலர் கொண்டாடினர் : சமந்தா | போலீஸ் வேடத்தில் சசிகுமார் | 64வது படத்தில் நடிக்க சம்பளத்தை உயர்த்தினாரா அஜித்குமார்? | தமிழ் புத்தாண்டில் சூர்யா-சிம்பு மோதிக்கொள்கிறார்களா? | 'மா இண்டி பங்காரம்' படத்திற்காக தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கிய சமந்தா! | விஜய் ஆண்டனியின் 'சக்தி திருமகன்' படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர்! |

1920களில் திரைப்படம் பேசத் தொடங்கும் முன், ஒரு ஊமைப் பட நடிகராக அறிமுகமாகி, 1930களில் தமிழ் மற்றும் இந்தி திரைப்படங்களில் நடிகராகவும், இயக்குநராகவும் பயணித்து வெற்றி கண்டவர்தான் இயக்குநர் ராஜா சாண்டோ. இந்திய சினிமாவின் முன்னோடிகளில் ஒருவராக அறியப்படும் இவர், டி கே ஷண்முகம், டி கே பகவதி, எஸ் வி சகஸ்ரநாமம், என் எஸ் கிருஷ்ணன் ஆகியோரது நடிப்பில் 1939ல் வெளிவந்த “மேனகா”, எம் கே தியாகராஜ பாகவதர் தயாரித்து, நடித்திருந்த “திருநீலகண்டர்” போன்ற புகழ்மிக்க திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் ஆவார்.
கலைத்துறையில் சாதனை படைத்த கலைஞர்களை கவுரவிக்கும் வகையில், வருடாந்திர விருதாக, இவரது பெயரில் “ராஜா சாண்டோ நினைவு விருது” என்ற விருதினை தமிழ்நாடு அரசு சார்பாக கலைஞர்களுக்கு வழங்கி, இவரது பெயருக்கு மேலும் புகழ் சேர்த்திருக்கிறது.
இத்தனைப் புகழுக்குரிய இவர் இயக்கிய ஒரு திரைப்படம்தான் “ஆராய்ச்சி மணி”. 1942ல் வெளிவந்த இத்திரைப்படத்தை முதலில் இயக்க இருந்தவர் ரகுவீர ரம்யா. பின்னர் அவரை படத்திலிருந்து நீக்கிவிட்டு, ராஜா சாண்டோவை இயக்குநராக நியமித்தனர் தயாரிப்பு தரப்பினர். இயக்குநர் பொறுப்பை ஏற்றுக் கொண்ட ராஜா சாண்டோ, படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்த சிறிய மற்றும் பெரிய நடிகர்கள் அனைவரையும் நான் நேரில் பார்க்க வேண்டும் என சொல்ல, அதன்படி ஏற்பாடும் செய்யப்பட்டது.
சாண்டோ எம் எம் ஏ சின்னப்ப தேவருக்கு படத்தில் ஒரு சிறிய வேடம் தரப்பட்டிருந்தது. கொளத்து மணி என்ற அப்போதைய சிரிப்பு நடிகர், சின்னப்ப தேவரிடம், சின்னப்பா! இயக்குநர் ராஜா சாண்டோ உண்மையாகவே ஒரு பெரிய சாண்டோ! உன்னைப் போல கட்டுமஸ்தான ஆளைப் பார்த்தால் அவருக்கு மிகவும் பிடித்துவிடும் என சொல்ல, வரிசையாக ஒவ்வொருவரையும் பார்த்து வந்த இயக்குநர் ராஜா சாண்டோ, சின்னப்ப தேவரின் முறை வரும்போது, மூச்சை இழுத்து, உள்ளடக்கி மார்பை முன்னுக்குத் தள்ளி விறைப்பாக நின்றிருந்த சின்னப்ப தேவரைப் பார்த்து, 'வெரிகுட்' என சொல்லி சின்னப்ப தேவரின் மார்பில் ஓங்கி ஒரு அடி கொடுத்திருக்கின்றார்.
அவர் அடித்த அடியின் வேகத்தில் இரண்டடி பின்னுக்குச் சென்று, பின் மீண்டும் முன்னுக்கு வந்திருக்கின்றார் சின்னப்ப தேவர். அவரிடமிருந்து அடி விழுந்திருந்தாலும் அது அதிர்ஷ்ட அடியாகவே விழுந்திருந்தது சாண்டோ எம் எம் ஏ சின்னப்ப தேவருக்கு. அதுவரை துணை நடிகர்களில் ஒருவராகவே நின்று கொண்டிருந்த சின்னப்ப தேவரை, “ஆராய்ச்சி மணி” திரைப்படத்தில் சேனாதிபதி வேடத்திற்கு தேர்வு செய்து, அவரை கலையுலகில் உயர்த்திக் காட்டியிருந்தார் இயக்குநர் ராஜா சாண்டோ. பி பி ரெங்காச்சாரி, எஸ் பாலசந்தர், எம் ஆர் சந்தானலக்ஷ்மி, என் எஸ் கிருஷ்ணன், டி ஏ மதுரம், பேபி வரலக்ஷ்மியாக எஸ் வரலக்ஷ்மி நடித்திருந்த இந்த “ஆராய்ச்சி மணி” திரைப்படம் 1942ம் ஆண்டு வெளிவந்தது.