பிளாஷ்பேக்: மெல்லிசை மன்னரின் 10ம் ஆண்டு நினைவு: விருதுகளை கடந்த கலைஞன் | சரோஜாதேவி மறைவு: முதல்வர், திரைப்பிரபலங்கள் இரங்கல் | சிவாஜிகணேசன் - சரோஜா தேவி இணைந்த நடித்த படங்கள் | எம்ஜிஆர் - சரோஜா தேவி இணைந்து நடித்த 26 படங்கள் | சூப்பர் குட் பிலிம்ஸ் 99வது தயாரிப்பில் விஷால் | 'தாமரை நெஞ்சம்' ஒரு படம் போதுமே: பாலசந்தர் அளித்த பதில் | தமிழில் தனது கடைசி படத்தில் நடித்த சரோஜா தேவி | ‛வெள்ளி விழா' படங்களில் முத்திரை பதித்த சரோஜா தேவி : வரிசை கட்டிய விருதுகள் | தனது உயிர் சென்னையில் பிரிய வேண்டும் என்று பேசியிருந்த சரோஜா தேவி | புதிய போட்டி வந்தாலும், சம்பளத்தை உயர்த்திய அனிருத் |
மறைந்த பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 2016ம் ஆண்டு அவரது பிறந்தநாளை சென்னையில் கொண்டாடினார். அப்போது அந்த நிகழ்ச்சியில் நடிகர் சிவகுமார் , அப்போதைய நடிகர் சங்க நிர்வாகிகள் மனோபாலா, குட்டி பத்மினி, உதயா, ரமணா, ஹேமசந்திரன், அயுப் கான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் நடிகை சரோஜாதேவி பேசியதாவது, “நான் முதலில் நடிகர் சிவகுமார் அவர்களிடம் தான் சென்னைக்கு வந்து பிறந்த நாள் கொண்டாடுவது பற்றியும் நிவாரண நிதி வழங்குவது பற்றியும் கூறினேன். நான் அதைப் பற்றி அவரிடம் கூறியதும் உடனே ஏற்பாடு செய்து விடலாம் என்று கூறி என்னை உற்சாகப்படுத்தினார்.
நான் பெங்களூரில் பிறந்திருந்தாலும் எனக்கு புகுந்த வீடு சென்னை தான். என்னுடைய உயிர் பிரிந்தால் கூட சென்னையில் தான் பிரியவேண்டும் என்று நான் இறைவனை பிராத்திப்பது உண்டு. என்னுடைய கணவர் கூறியது போல் அனைத்தும் நடந்து வருகிறது. இன்று நானும் உண்டு மற்றவர்களுக்கும் அளிக்கும் அளவுக்கு இறைவன் என்னை நல்ல இடத்தில் வைத்துள்ளான்.
என்னுடைய வாழ்க்கையில் என்னால் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களை மட்டும் மறக்கவே இயலாது. அவரும் நானும் இணைந்து நடித்த நாடோடி மன்னன் படத்தில் நான் வரும் காட்சியில் இருந்து படத்தை கலர் படமாக மாற்றினார். அதற்க்கு காரணம் யாதெனில் நான் அந்த படத்தில் அறிமுக நடிகை , என்னை ரசிகர்கள் ஏற்று கொள்வதற்காக, படத்தில் நான் வரும் பகுதியில் இருந்து படத்தை கலர் படமாக மாற்றி இருக்கிறார். அதே நேரத்தில் எதிர்பார்த்தது போல் அந்த படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. அதன் பிறகு நானும் அவரும் பல படங்களில் சேர்ந்து நடித்தோம். எனக்கு நிறைய விஷயங்களை கற்றுத்தந்தவர் அவர். நான் எப்படி பிறரிடம் நடந்து கொள்ள வேண்டும் என்பது முதல் பல நல்ல விஷயங்களை எனக்கு கற்றுக்கொடுத்தார். என்னால் நிச்சயம் அவரை ஒருபோதும் மறக்கவே முடியாது. அவருடைய ராமாபுரம் தோட்டத்தை பார்க்கும் போது எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது.
எல்லோரும் அவரை தெய்வம் என்று சொல்லுவது உண்டு. நானும் அவருடைய ராமாபுரம் இல்லத்துக்கு சென்று பல முறை உணவு உண்டுள்ளேன், பேசிக்கொண்டு இருந்திருக்கிறேன். அதனால் நீங்கள் அவரை தெய்வம் என்று கூறுவதோடு நிறுத்திவிடாமல் அவருடைய இருப்பிடத்தை, தெய்வம் வாழும் இடம் போல், புனிதமாக கோவில் போல் வைத்திருக்க வேண்டும். அவரால் வந்தவர் இந்த சரோஜா தேவி, அவர் இல்லை என்றால் இந்த சரோஜா தேவியே இல்லை. நான் நடிகர் சிவாஜி அவர்களுடன் நடித்துள்ளேன், அவரிடம் நிறைய விஷயங்களை கற்றுள்ளேன், ஜெமினி கணேசன் அவர்கள் எனக்கு நல்ல நண்பர், நடிகர் சிவகுமார் மிகச்சிறந்த மனிதர், அவரிடமிருந்து நான் நிறைய நல்லொழுக்கங்களை கற்றுள்ளேன். அவருடைய புதல்வர்களும் அதே போல் மிகச்சிறந்த முறையில் வளர்ந்துள்ளனர்.
ஆதவன் படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் சூர்யா என்னை மிகவும் கவனமாக பார்த்துக்கொண்டார். நடிகர் சிவகுமார் அவர்களுடைய அதே குணம் அப்படியே அவருடைய புதல்வர்களுக்கும் வந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. எனக்கு சென்னைக்கு வருவது மிகவும் பிடிக்கும். நான் இங்கே சென்னைக்கு வந்தால் அனைவரும் என்னை பார்க்க வந்துவிடுவார்கள்,” என்றார்.