ஊழல் அரசியல்வாதிகளை தட்டிக் கேட்கும் ‛ஜனநாயகன்' | ஆபாச வெப் சீரிஸ் : 25 ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு தடை | ‛விஸ்வாம்பரா' படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் மவுனி ராய் | கதையில் சமரசம் செய்யாத ராஜமவுலி : பிருத்விராஜ் வெளியிட்ட தகவல் | டியூட் படத்தில் சிவகார்த்திகேயனா? வைரலாகும் வீடியோ | கூலி படத்தில் கமலா... : லோகேஷ் கனகராஜ் அளித்த பதில் | தற்கொலைக்கு முயற்சித்தாரா ‛டிக் டாக்' இலக்கியா... : ஸ்டன்ட் இயக்குனர் மீது குற்றச்சாட்டு | மீண்டும் இசையில் கவனம் செலுத்தப் போகிறேன்: விஜய் ஆண்டனி | மீண்டும் ‛அந்த 7 நாட்கள்' படத்தில் நடிக்கும் கே.பாக்யராஜ் | பிளாஷ்பேக் : ஒரே தமிழ் படத்தில் நடித்த வங்காள நடிகர் |
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் பிற்காலத்தில் பேரழகனாக விளங்கினார். ஆனால் ஆரம்ப காலத்தில் மெலிந்த தேகம், ஒட்டிய கன்னமாக மிகச் சாதாரணமாக இருந்தார். அதற்கு ஒரு சிறிய சம்பவத்தை கூறலாம்.
பாரதிதாசனின் 'எதிர்பாராத முத்தம்' என்ற நாவலை சினிமாவாக எடுக்க விரும்பிய என்.எஸ்.கிருஷ்ணன், அதை திரைக்கதையாக எழுதி வைத்திருந்தார். அதனை மார்டன் தியேட்டர்ஸ் சுந்தரம் படமாக தயாரிக்க விரும்பினார். அதற்கு பாரதிதாசனும், என்.எஸ்.கிருஷ்ணனும் ஒப்பு கொண்டனர்.
படத்தை எல்லீஸ் ஆர்.டங்கன் இயக்குவதாக முடிவானது. கதையை படித்த டங்கன் இந்த கதைக்கு அழகான நாயகன் தேவை என்று கூறினார். அப்போது வேகமாக வளர்ந்து கொண்டிருந்த 10க்கும் மேற்பட்ட நடிகர்களை வரிசையாக நிற்க வைத்து சிறைச்சாலையில் அடையாள அணிவகுப்பு நடத்துவது போன்று நடத்தினார் டங்கன். அந்த வரிசையில் எம்.ஜி.ஆர், சிவாஜி, பி.வி.நரசிம்ம பாரதி ஆகியோர் நின்றிருந்தனர்.
ஒவ்வொருவரிடமும் அவர்களை பற்றி விசாரிக்கும்போது அவர்கள் தங்கள் பெயரை சொல்லி அறிமுகப்படுத்தும்போது பி.வி.நரசிம்ம பாரதி மட்டும் 'நான் சிங்கம்' என்றார். அதை கேட்டு கலகலவென சிரித்த டங்கன். 'சிங்கத்திற்கு எப்படி காதல் வரும், இது காதல் படமாச்சே' என்றார். 'காதல் வரும்போது சிங்கமும் மானாகும்' என்றார் நரசிம்ம பாரதி. இவர்தான் ஹீரோ என்று அறிவித்தார் டங்கன்.
படத்திற்கு 'பொன்முடி' என்று டைட்டில் வைக்கப்பட்டது. படத்தில் நரசிம்ம பாரதியும், மாதுரி தேவியும் காதல் காட்சிகளில் நெருக்கமாக நடித்தனர். இதனாலேயே படம் பெரிய வெற்றி பெற்றது. டங்கன் தமிழ் கலாச்சாரத்தை கெடுப்பதாக விமர்சனமும் எழுந்தது.
நரசிம்ம பாரதி, மாதுரிதேவியை இணைத்துக் கிசுகிசுக்களும் கிளம்பின. படத்தின் நாயகன் நரசிம்ம பாரதி பெண்கள் விரும்பும் நடிகராக மாறினார். சிவாஜி நடித்த இரண்டாவது படத்தின் (திரும்பிப்பார்) நாயகன் நரசிம்ம பாரதிதான். சிவாஜி வில்லனாக நடித்தார். நடிகர் திலகத்துடன் மட்டுமல்ல எம்.ஜி.ஆர்., கருணாநிதி, என்.டி.ராமாராவ் ஆகிய மூன்று முதல்வர்களோடும், கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரோடும், மாதுரிதேவி, ஜமுனா, பண்டரிபாய் போன்ற அன்றைய முன்னணிக் கதாநாயகிகளுடன் நடித்துப் புகழ்பெற்றார் நரசிம்ம பாரதி .
9 படங்களில் கதாநாயகனாகவும் 15 படங்களில் இணை, துணைக் கதாபாத்திரங்களிலும் நடித்தார். மதுரை, சவுராஷ்டிரா குடும்பத்தை சேர்ந்த நரசிம்ம பாரதிதான் டி.எம்.சவுந்தர்ராஜனை பாடகராக அறிமுகப்படுத்தினார். காரணம் இருவரும் மதுரை பாய்ஸ் கம்பெனியில் நடிகராக இருந்தவர்கள். நாடகத்தில் பெண் வேடமிட்டு நடித்த நரசிம்ம பாரதி சினிமாவில் ஹீரோவாக ஒரு ரவுண்டு வந்தார். ஆனால் பல குடும்ப சூழ்நிலை காரணமாக மெல்ல மெல்ல சினிமாவில் இருந்து விலகி ஒரு கட்டத்தில் ரசிகர்களால் மறக்கப்பட்டார்.