விஜய் பாணியை பின்பற்றினால் நல்லது: 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜூ | விரைவில் 'லக்கி பாஸ்கர் 2': வெங்கி அட்லூரி அப்டேட் | கூலி திரைப்படம் ஐமேக்ஸில் வெளியாவதில் புதிய சிக்கல்? | காமெடி நடிகரின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு 50 லட்சம் தர பிரபாஸ் வாக்குறுதி | படம் என்ன ஜானர் என்று ரிலீஸுக்கு முன்பே சொல்லிவிடுங்கள் ; சசிகுமார் வேண்டுகோள் | 'தொடரும்' கெட்டப்பில் புரோமோ வீடியோவுடன் பிக்பாஸ் சீசன் 7 அறிவிப்பை வெளியிட்ட மோகன்லால் | இன்ஸ்டாகிராமில் அனைத்து பதிவுகளையும் மொத்தமாக நீக்கிய ரன்வீர் சிங் ; ரசிகர்கள் கவலை | சூர்யா பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் தெலுங்கு 'அயன்' | அசோக் செல்வன் புதிய பட அப்டேட்! | 'பையா' பட தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆகிறது! |
திரைப்படங்களை பிரதான பிரசார ஊடகங்களாக அரசியலுக்குப் பயன்படுத்தி அதில் வெற்றி கண்டவர்தான் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் சி என் அண்ணாதுரை. 1948ம் ஆண்டு “நல்ல தம்பி” என்ற திரைப்படத்தில் வசனகர்த்தாவாக தமிழ் திரைத்துறைக்கு அறிமுகமாகி, பின் “வேலைக்காரி”, “சொர்க்க வாசல்”, “எதையும் தாங்கும் இதயம்”, “நல்லவன் வாழ்வான்” என பல படங்கள் இவரது கதை மற்றும் வசனங்களில் வெளிவந்து ரசிகர்களை வெகுவாக ஈர்த்திருந்த நிலையில் இவரது “ஓர் இரவு” திரைப்படமும் எதிர்பார்ப்பை எகிறச் செய்திருந்தது. முதலில் நாடகமாக அரங்கேறி பலரது பாராட்டினைப் பெற்ற இந்தக் கதை, பின்னர் சினிமாவாக தயாரிக்கப்பட்டது.
இதோ ஓர் பெர்னாட்ஷா தமிழகத்தில் இருக்கிறார், இப்ஸனும் இருக்கிறார், இன்னும் கால்ஸ் வொர்த்தி கூட இருக்கின்றார் என்று “ஓர் இரவு” நாடகத்தைப் பார்த்த கல்கி ரா கிருஷ்ணமூர்த்தி நாடகத்தைப் பற்றிய தனது விமர்சனத்தில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். சி என் அண்ணாதுரை எழுதி, கே ஆர் ராமசாமி நடித்து நடத்தி வந்த இந்த நாடகத்தை மிக நுட்பமாக கவனித்து வந்த ஏ வி மெய்யப்ப செட்டியார், இதை திரைப்படமாக எடுக்க முயற்சித்து, பின் சி என் அண்ணாதுரையை சந்தித்து ஒரு உடன்பாட்டையும் ஏற்படுத்திக் கொண்டார். அதன் பின் ஏ வி எம் ஸ்டூடியோவிற்கு வந்த சி என் அண்ணாதுரைக்கு ரூபாய் பத்தாயிரம் தரப்பட்டு படத்திற்கான கதை வசனங்களை எழுத வைத்தார் ஏ வி மெய்யப்ப செட்டியார். ஸ்டூடியோவிற்கு வந்த சி என் அண்ணாதுரை அங்கேயே தங்கி, ஒரே இரவுக்குள் படத்திற்கான 300 பக்கங்கள் கொண்ட திரைக்கதை வசனத்தை எழுதிக் கொடுத்தார்.
இந்தா, 300 பக்கங்கள் எழுதியிருக்கின்றேன். சினிமாவுக்கு ஏற்ற வகையில் இன்னும் ஏதாவது மாறுதல் செய்து கொள்ள வேண்டும் என்றால் நீ தாராளமாக செய்து கொள்ளலாம். உனக்கு என்னுடைய போக்கும் பாங்கும் நன்றாக தெரியும். தற்போது ஒரு அசோஸியேட் இயக்குநராக இருக்கும் நீயே இந்த “ஓர் இரவு” திரைப்படத்தை இயக்க வேண்டுமென்றும் நான் விரும்புகின்றேன் என கூறி கதை வசனக் காகிதங்களை இயக்குநர் ப நீலகண்டனிடம் கொடுத்தார் சி என் அண்ணாதுரை.
அதன்படி ப நீலகண்டனையே இயக்குநராக்குவது என்று ஏ வி மெய்யப்ப செட்டியாரும் தீர்மானிக்க, படத்தின் இயக்குநரானார் ப நீலகண்டன். கே ஆர் ராமசாமி, லலிதா, டி கே சண்முகம், பி எஸ் சரோஜா, ஏ நாகேஸ்வரராவ், டி எஸ் பாலையா, டி பி முத்துலட்சுமி, டி எஸ் துரைராஜ் என ஒரு நட்சத்திரக் கூட்டமே நடித்திருந்தும் நாடகம் பெற்ற வெற்றியைப் பெறத் தவறியது இந்த “ஓர் இரவு” திரைப்படம்.