படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

சென்னை
நாடக அரங்குகளை அமெச்சூர் நடிகர்கள், அதாவது பெரிய உத்யோகங்களில்
இருப்பவர்கள் குறிப்பாக பிராமண சமூகத்தைச் சார்ந்தவர்களின் நாடகங்கள்
ஆக்கிரமித்திருந்த காலம். கதை எழுதியவர்களும், நடத்தியவர்களும்,
நடித்தவர்களும் அவர்களே. நாடகத்தைப் பார்க்கின்ற சபா உறுப்பினர்களில்
பெரும்பான்மையினரும் அவர்களாகவே இருக்க, இயல்பாகவே சபா நாடகங்கள் பிராமண
சமூகத்தைச் சேர்ந்த கதைகளாகவே அமைந்திருந்தன.
பிராமணரல்லாத
கலைஞர்களான தொழில்முறை நடிகர்களின் நாடகங்களுக்கு மேடை கிடைப்பதே
அரிதாயிருந்த காலம் வேறு. கால மாறுதல்களை அனுசரித்து நாடகங்களில் புதிய
உத்திகளை பயன்படுத்த தொழில்முறைக் கலைஞர்கள் தவறவிட்டிருந்ததும் அவர்களது
சரிவுக்கு காரணமாகவும் அமைந்திருந்தன. இந்த சூழ்நிலையில் மிக நீண்ட
வசனங்களுடன் தஞ்சை வாணனின் “களம் கண்ட கவிஞன்” என்ற நாடகத்தை தனது சிவாஜி
நாடக மன்றத்தின் மூலம் அரங்கேற்றித் தொடர்ந்து நடத்த அரங்கமின்றி இருந்து
வந்தார் நடிகர் திலகம் சிவாஜிகணேசன்.
சபாக்களில் தொடர்ந்து நாடகம்
கிடைக்க வேண்டுமென்றால் பிராமண சமூகக் கதையாக இருக்க வேண்டும் என்று நாடகக்
குழு உறுப்பினர்கள் சிவாஜியிடம் கூறத் தொடங்க, அப்போது பிராமண இளைஞரான கே
சுந்தரம் என்பவர் ஒரு குடும்பக் கதையை நாடகமாக எழுதி சிவாஜிகணேசனிடம்
கொடுத்தார். நாடகத்தில் பிரஸ்டீஜ் பத்மநாப அய்யர் குடும்பத் தலைவர். அன்பே
உருவான அவரது மனைவி. இரு மகன்கள் ஒருவன் ஊருக்கு நல்லவனாகவும், வீட்டிற்கு
சூறாவளியை உருவாக்குகின்றவனாகவும், இன்னொருவன் வீட்டிற்கு நல்லவனாகவும்,
வெளியில் கெட்டவனாகவும் இருக்க, மகளாலும், மருமகளாலும் வேறு வீட்டில்
பிரச்னைகள் வர, சதா கலவரமும், குழப்பமும் நிறைந்திருக்கும் இந்த நிலையில்
வீட்டின் தலைவரான பிரஸ்டீஜ் பத்மநாப அய்யர் பணி ஓய்வு பெற்று வீடு திரும்ப,
அவரது பிரஸ்டீஜுக்கும் இழுக்கு நேரிடுகிறது. சதா கலவரமும், ரகளையுமாக வீடு
இருப்பதால் அந்த நாடகக் கதைக்கு “வியட்நாம் வீடு” என்று பெயரிட்டிருந்தார்
கதையை எழுதிய கே சுந்தரம்.
நடிகர் திலகம் சிவாஜிகணேசன் பிரஸ்டீஜ்
பத்மநாப அய்யராக நாடக மேடை ஏறியதும் சிவாஜி நாடக மன்றத்துக்குத் தொடர்ந்து
நாடகங்கள் கிடைக்கவும் தொடங்கின. சபாக்காரர்கள் தொடர்ந்து தேதி கொடுத்து
வர, நாடகம் பெரும் வெற்றி பெற்றது. இந்த நாடகத்தை திரைப்படமாக்கவும்
ஆசைப்பட்டார் சிவாஜிகணேசன். தனது “சிவாஜி பிலிம்ஸ்” மூலம் இந்த நாடகக்
கதையை 1970ல் “வியட்நாம் வீடு” என்ற பெயரிலேயே சினிமாவாகவும் எடுத்து
வெளியிட்டார் சிவாஜி. நாடகத்தில் அவர் ஏற்று நடித்திருந்த பிரஸ்டீஜ்
பத்மநாப அய்யராக சிவாஜி நடிக்க, அவரது மனைவியாக மடிசார் கட்டிக் கொண்டு
'நாட்டியப் பேரொளி' பத்மினி நடிக்க, வெள்ளித்திரையிலும் விழா கண்டது
இத்திரைப்படம். இதன் பின்னர் இந்த நாடகக் கதாசிரியரான கே சுந்தரம் தனது
பெயரோடு வியட்நாம் வீட்டையும் இணைத்து “வியட்நாம் வீடு” சுந்தரம் என
அழைக்கப்பட்டு புகழ் பெற்றார்.