ஹாட்ரிக் வெற்றி : மகிழ்ச்சியில் சிம்ரன் | ஜெயிலர் 2வில் யோகிபாபு | என்னை கொல்ல சதி நடக்குது: ஜாக்குவார் தங்கம் அலறல் | இடியாப்ப சிக்கலில் விஜயகாந்த் மகன் திரைப்படம் | நயன்தாராவுடன் இணையும் படத்திற்காக போட்டோஷூட் நடத்திய சிரஞ்சீவி! | தனுஷின் 'குபேரா' படத்தை 50 கோடிக்கு கைப்பற்றிய அமேசான் பிரைம்! | நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் சூர்யாவின் 'ரெட்ரோ' | 'கொம்பு சீவி' படத்திற்காக மதுரை வட்டார தமிழில் டப்பிங் பேசும் சண்முக பாண்டியன்! | விஜய்சேதுபதி நடித்துள்ள 'ஏஸ்' படத்தின் சென்சார் - ரன்னிங் டைம் வெளியானது! | ரவி மோகனிடம் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கேட்கும் ஆர்த்தி ரவி |
பெருவாரி மக்களால் பூஜிக்கப்பட்ட புராண இதிகாசக் கதைகளையும், படித்து ரசித்த ராஜா ராணி கதைகளையும் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு திரைக்கலைஞர்களைக் கொண்டு ஒரே கதையை திரும்பத் திரும்பத் தயாரித்து வெற்றி பெற்ற தயாரிப்பு நிறுவனங்களும் இருந்ததுண்டு. தோல்வி கண்ட தயாரிப்பு நிறுவனங்களும் இருந்ததுண்டு. அந்த வகையில் கிறிஸ்தவ பக்திக் கதையாக மேடையில் நடிக்கப்பட்டு வந்த நாடகமான “ஞான சௌந்தரி” என்ற புகழ் பெற்ற இந்த நாடகக் கதையை ஒரே சமயத்தில் இரண்டு தயாரிப்பு நிறுவனங்கள் தயாரிக்கத் தொடங்கியிருந்தன. ஒன்று ஜெமினி எஸ் எஸ் வாசனின் “ஜெமினி ஸ்டூடியோஸ்”. மற்றொன்று அன்றைய காலகட்டங்களில் புதிய படக் கம்பெனியாக பார்க்கப்பட்ட “சிட்டாடெல் பிலிம்ஸ்”.
“சிட்டாடெல் பிலிம்ஸ்” தயாரிப்பு நிறுவனத்தின் அதிபரான எப் நாகூர், “நியூடோன் ஸ்டூடியோ”வில் ஒரு ஊழியராக பணிபுரிந்து, அங்கேயே செட்டிங் மாஸ்டராக மாறி, பிறகு ஆர்ட் டைரக்டராக உயர்ந்து, அவரது அரங்க நிர்மாணத்தில் நியூடோன் ஸ்டூடியோவில் தயாரிக்கப்பட்ட அப்போதைய படங்கள் எல்லாம் புகழ் பெற்றிருந்த நிலையில், எப் நாகூர் முதன் முதலில் தயாரித்த சொந்தப் படமாகவும், அவரே டைரக்ட் செய்த முதல் திரைப்படமாகவும் வெளிவந்ததுதான் “சிட்டாடெல் பிலிம்ஸ்”ஸின் “ஞானசௌந்தரி”.
1948, மே மாதத்தில் வெளிவந்தது இத்திரைப்படம். அதே ஆண்டு ஜுன் மாதத்தில் வெளிவந்தது “ஜெமினி ஸ்டூடியோஸ்”ஸின் “ஞானசௌந்தரி”. இத்திரைப்படத்தை இயக்கியவர் மிகுந்த அனுபவசாலியான இயக்குநர் முருகதாஸா. சிட்டாடெல் “ஞானசௌந்தரி”யில் ஞானசௌந்தரியாக நடிகை எம் வி ராஜம்மாவும், பிலேந்திரனாக நடிகர் டி ஆர் மகாலிங்கமும் நடித்திருந்தனர். ஜெமினி தயாரித்த “ஞானசௌந்தரி”யில் நடிகை வி எஸ் சுசீலாவும், நடிகர் எம் கே ராதாவும் நடித்திருந்தனர். லேனாள் கதாபாத்திரத்தில் சிட்டாடெலில் பி எஸ் சிவபாக்கியமும், ஜெமினியில் நடிகை பி கண்ணாம்பாவும் நடித்திருந்தனர்.
இந்தப் போட்டியில் எப் நாகூர் வென்றார். பாடல்கள், நடிப்பு, அரங்க நிர்மாணம், வசூல் ஆகியவற்றில் சிட்டாடெல் ஜெமினியை வென்றது. எஸ் வி வெங்கட்ராமன் இசையமைப்பில் பி ஏ பெரியநாயகியின் குரலில் “அருள் தாரும் தேவமாதாவே ஆதியே இன்ப ஜோதி”, “கன்னியே மாமரி தாயே” ஆகிய பாடல்கள் சிட்டாடெல் “ஞானசௌந்தரி”யை இன்றும் நாம் நினைவு கூறத்தக்க வகையில் ஒலித்துக் கொண்டே இருப்பது அதன் வெற்றியை உறுதி செய்வதாகும்.