சமுத்திரகனி கதை நாயகனாக நடிக்கும் 'பைலா' | பெப்சிக்கு தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் ஆதரவு | உ.பி.முதல்வர் யோகியின் வாழ்க்கை சினிமா ஆகிறது | பிளாஷ்பேக்: மகனுக்காக இயக்குனராக மாறிய நாகேஷ் | பிளாஷ்பேக்: தமிழ் திரைப்படமான ஆங்கில நாடகம் | இந்த உலகில் யாரும் சுயமாக உருவாக்கப்படுவது இல்லை : சல்மான் கான் பேட்டி | அழகின் ரகசியம் சொன்ன ராஷ்மிகா | மார்ச் 27, 28ல் வெளியான படங்களின் நிலைமை என்ன | மாதவனின் வருத்தம் | அந்தரங்க வீடியோ என வைரல் : ஸ்ருதி நாராயணன் காட்டமான பதில் |
இந்தியாவுக்கு சினிமா வந்த காலகட்டத்தில் இந்தியாவில் தயாரான படங்கள்தான் இலங்கையில் திரையிடப்பட்டு வந்தன. 1946 வரை அந்த நாட்டின் மொழியான சிங்களத்தில் எந்த ஒரு படமும் வெளிவரவில்லை. சிங்கள மொழியில் தயாரான முதல் பேசும் படம் 'கடவுனு பொரோண்டுவ'. 'உடைந்த வாக்குறுதி' என்று இதற்கு தமிழில் பொருள். இந்தப் படத்தை மதுரையை சேர்ந்த எஸ்.எம்.நாயகம் என்ற தமிழர் தயாரித்தார். அவர் தமிழ்நாடு மற்றும் இலங்கையில் வாசனை திரவியங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் நடத்தி வந்தார்.
இலங்கை மக்கள் தங்கள் சொந்த மொழியில் ஒரு படத்தை காண வேண்டும் என்று விரும்பிய அவர் இந்த படத்தை தயாரித்தார். இலங்கை விடுதலைப் போராட்டத் தலைவரும் இலங்கையின் முதல் பிரதமருமான டி.எஸ்.சேன நாயகா படத்தை தொடங்கி வைத்தார். இந்தப் படத்தின் முழு படப்பிடிப்பும் மதுரை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நடந்தது. இந்த படம் நான்கு தியேட்டர்களில் வெளியிடப்பட்டு 175 நாட்கள் வரை ஓடியது.
சிங்கள மக்கள் தங்களது முதல் படத்தை கொண்டாடினாலும் பத்திரிகைகளும் விமர்சகர்களும் படத்தை ஏற்கவில்லை. தென்னிந்திய சினிமா மேலும் ஒரு மொழியில் படத்தை இயக்கி இருக்கிறது. படம் சிங்கள மொழி பேசினாலும் அது எதிரொலிப்பது தமிழ் கலாச்சாரத்தை என்று விமர்சித்தன. படத்தில் சிங்கள நடிகர்களுடன் ருக்மணி தேவி என்ற தமிழ் நடிகை ஹீரோயினாக நடித்தார். ஜோதி சின்கா இயக்கினார் .
இந்தப் படத்தை தயாரித்தது பற்றி பின்னாளில் நாயகம் குறிப்பிடும் போது “ஒரு தமிழர் ஏன் சிங்களப் படத்தைத் தயாரிக்க முன்வந்தார் என்று நீங்கள் யோசித்துக் கொண்டிருக்கலாம். அதற்கான காரணத்தை நீங்கள் அறிய விரும்பலாம். எனது பதில் மிகவும் எளிமையானது. எனது சிங்கள நண்பர்களில் பலர் தமிழ் மற்றும் இந்தி படங்களை ரசிப்பதை நான் கவனித்தேன். அவர்கள் ஏன் அந்தப் படங்களை விரும்புகிறார்கள், பாராட்டுகிறார்கள் என்பதைக் கண்டுபிடிக்க விரும்பினேன். அதற்கான காரணத்தை அறிய, என் நண்பர்கள் தங்கள் சொந்த மொழியில் படங்கள் இல்லாதது குறித்து வருத்தப்படுகிறார்கள் என்பதை உணர்ந்தேன். உள்ளூர் நடிகர்கள் மற்றும் நடிகைகளின் திறமைகளைப் பயன்படுத்தி ஒரு சிங்களப் படத்தை உருவாக்க இதுவே என்னைத் தூண்டியது.” என்றார்.