நடிகர் மோகன்லால் நடிப்பில் பிரித்விராஜ் இயக்கத்தில் 'லூசிபர்' படத்தின் இரண்டாம் பாகமான 'எம்புரான்' திரைப்படம் வரும் மார்ச் 27ம் தேதி வெளியாக இருக்கிறது. இதை தொடர்ந்து அவரது நடிப்பில் தொடரும், ஹிருதயபூர்வம், கண்ணப்பா, விருஷபா ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றது. இன்னும் சில படங்களின் படப்பிடிப்பு துவங்க இருக்கின்றன. இந்த நிலையில் பிரபல மலையாள இயக்குனர் பிரியதர்ஷன் அடுத்ததாக இயக்க உள்ள அவரது படத்தில் கதாநாயகனாக மோகன்லால் நடிக்கிறார். இது இயக்குனர் பிரியதர்சனின் நூறாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்த தகவலை சமீபத்தில் மோகன்லாலே தெரிவித்துள்ளார்
பிரியதர்ஷன் மலையாள திரையுலகில் உதவி இயக்குனராக பணியாற்றி, தனது முதல் படமான பூச்சக்கொரு மூக்குத்தி என்கிற படத்தை இயக்கிய போது அதில் கதாநாயகனாக நடித்தவர் மோகன்லால் தான், அதன் பிறகு கிட்டத்தட்ட அவரது டைரக்ஷனில் 35 படங்களுக்கு மேல் நடித்துவிட்டார். இறுதியாக 2021ல் இவர்கள் கூட்டணியில் 'மரக்கார் ; அரபிக்கடலின்டே சிம்ஹம்' திரைப்படம் வெளியானது.
இந்த நிலையில் நான்கு வருடங்கள் கழித்து மீண்டும் இவர்கள் கூட்டணி சேர இருக்கின்றனர். இது குறித்து மோகன்லால் கூறும்போது, ''பிரியதர்ஷனின் முதல் படத்திலும் நான் தான் ஹீரோ.. அவரது நூறாவது படத்தில் நான் தான் ஹீரோ'' என பெருமையுடன் கூறினார். மலையாள திரை உலகில் அனேகமாக 100 படங்களை இயக்கிய முதல் இயக்குனர் பிரியதர்ஷனாகத்தான் இருக்கும்.