Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிளாஷ்பேக்: சிவாஜிகணேசன் நடித்த கதாபாத்திரத்தில், கமலை பொருத்திப் பார்த்த இயக்குநர் ஏ பீம்சிங்

29 டிச, 2024 - 10:44 IST
எழுத்தின் அளவு:
Flashback-Director-A.-Beamsingh-tried-to-cast-Kamal-in-the-role-played-by-Sivaji-Ganesan


நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் நடிப்புலகப் பயணத்தில் அவரோடு பயணித்து, அவருடைய பெரும்பாலான கலையுலக வெற்றிகளில் பெரும் பங்காற்றியவர்களில் மிக முக்கியமானவர் யார்? என்றால், அது இயக்குநர் ஏ பீம்சிங் என்பது திரைத்துறை கலைஞர்களுக்கும், திரைப்பட ஆர்வலர்களுக்கும் தெரிந்த ஒன்றே.

அண்ணன் தங்கைப் பாசம், அண்ணன் தம்பி பாசம், என குடும்ப உறவுகளின் மேன்மையை எடுத்துரைத்த ஏராளமான திரைக்காவியங்கள் இவ்விருவரின் பங்களிப்பில் வெளிவந்து வெற்றி வாகை சூடியிருக்கின்றன. “பதிபக்தி”, “பாகப்பிரிவினை”, “படிக்காத மேதை”, “பாவமன்னிப்பு”, “பாலும் பழமும்”, “படித்தால் மட்டும் போதுமா”, “பாசமலர்”, “பார்த்தால் பசி தீரும்” என 'ப' வரிசையில் தொடர் வெற்றிப் படங்களை நடிகர் திலகத்திற்கு தந்திருக்கும் இயக்குநர் ஏ பீம்சிங், சிவாஜிகணேசனின் அதிகப்படியான திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் என்ற பெருமைக்கும் உரியவராவார். ஏறக்குறைய சிவாஜியின் 18 திரைப்படங்களுக்கு இயக்குநராக பணிபுரிந்திருக்கின்றார்.

இத்தகைய பெருமைகளுக்குரிய இவரால்தான் 'கலைஞானி' கமல்ஹாசனும் வெள்ளித்திரைக்கு அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றார் என்பதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை. “விளையும் பயிர் முளையிலே தெரியும்” என்பதை நன்கறிந்தவரான இயக்குநர் ஏ பீம்சிங், 1960ல் தனது இயக்கத்தில் வெளிவந்த “களத்தூர் கண்ணம்மா” என்ற திரைப்படத்தின் மூலம் கமல்ஹாசனை ஒரு குழந்தை நட்சத்திரமாக வெள்ளித்திரைக்கு அறிமுகப்படுத்தினார். இதைத் தொடர்ந்து “பார்த்தால் பசி தீரும்” திரைப்படத்தில் மாஸ்டர் கமல்ஹாசனுக்கு இரட்டை வேடங்கள் தந்து அழகு பார்த்தவரும் இவரே.

இவைகளுக்கெல்லாம் மேலாக, இயக்குநர் ஏ பீம்சிங், சிவாஜி கூட்டணியில் 1959ம் ஆண்டு தீபாவளித் திருநாளில் வெளிவந்து வெள்ளிவிழா கொண்டாடிய திரைப்படம்தான் “பாகப்பிரிவினை”. கனமான கதைக் களத்தைக் கொண்ட இத்திரைப்படத்தில் கை, கால் ஊனமுற்ற நாயகனாய் தனது உச்ச நடிப்பை உலகுக்கு காட்டியிருப்பார் நடிகர் திலகம் சிவாஜிகணேசன்.

குடும்ப உறவுகளின் உன்னதத்தை உணர்ச்சிப்பூர்வமாய் காட்டியிருக்கும் இந்த ஒப்பற்ற திரைக் காவியத்தில், சரோஜாதேவி, எம் ஆர் ராதா, டி எஸ் பாலையா, எஸ் வி சுப்பையா, எம் என் நம்பியார், எம் வி ராஜம்மா, சி கே சரஸ்வதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். பாடல்களை மருதகாசி, கவிஞர் கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் ஆகியோர் எழுத, இசையமைத்திருந்தனர் மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி.

இம்மாபெரும் திரைக்காவியத்தை மலையாளத்தில் தயாரித்தபோது, 'கலைமேதை' சிவாஜிகணேசன் ஏற்று நடித்திருந்த நாயகன் கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்யப்பட்டவர், அன்று வளர்ந்து வரும் நாயகனாய் இருந்த 'கலைஞானி' கமல்ஹாசன்தான். ஏறக்குறைய 18 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் “பாகப்பிரிவினை” படத்தின் கதையை மலையாளத்தில் “நிறகுடம்” என்ற பெயரில் இயக்கியிருந்தார் இயக்குநர் ஏ பீம்சிங்.

1977ம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படத்தில், ஸ்ரீதேவி, சுதீர், அடூர்பாசி, சுகுமாரி, கவியூர் பொன்னம்மா ஆகியோர் நடித்து அங்கும் மாபெரும் வெற்றியை சுவைத்தது இத்திரைக்காவியம். ஒரு நல்ல படைப்பாளியால்தான் ஒரு நல்ல கலைஞனை அடையாளம் காண முடியும் என்பதற்கு சரியான சான்றாக அமைந்தது இத்திரைப்படம் என்றால் அது மிகையன்று.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
இசை நிகழ்ச்சி ரத்து - வருத்தம் தெரிவித்த விஜய் ஆண்டனிஇசை நிகழ்ச்சி ரத்து - வருத்தம் ... விடுதலை 2 படத்திற்காக எடையை கூட்டிய கென் கருணாஸ்! விடுதலை 2 படத்திற்காக எடையை கூட்டிய ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)