கோவில்களுக்குள்ளும், திருமண விழாக்களுக்குள்ளும் இருந்த நாதஸ்வரத்தை பொது வெளியில் மேடையேற்றி புகழ்பெற வைத்தவர் டி.என்.ராஜரத்தினம் பிள்ளை. நீண்ட தலைமுடி சட்டை அணியாத தோற்றத்துடன் நாதஸ்வரம் வாசித்தபோது முதன்முதலாக கிராப் வைத்துக் கொண்டு கோட், ஷர்வாணி அணிந்து வாசித்தார். நாதஸ்வரத்துக்கு தம்புரா, வீணை, மிருதங்கம் ஆகியவற்றை இணை கருவிகளாக்கினார்.
இந்தியா நள்ளிரவில் சுதந்திரம் அடைந்தபோது அதிகாலையில் இந்தியா முழுக்க வானொலியில் கேட்டது இவரது மங்கல நாதஸ்வர இசையைத்தான். முதன்முதலாக நாதஸ்வர இசை, இசைதட்டுகளாக வெளிவந்து லட்சக்கணக்கில் விற்றதும் இவரது இசையால்தான். இப்படி பல சாதனைகளுக்கு சொந்தக்காரரான டி.என்.ராஜரத்தினம் பிள்ளை ஒரு படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார் என்பது பலரும் அறியாத ஒன்று.
எல்லீஸ் ஆர்.டங்கன் கவி காளமேகத்தின் வாழ்க்கையை ‛காளமேகம்' என்ற பெயரில் திரைப்படமாக்கியபோது அந்த கேரக்டரில் டி.என்.ராஜரத்தினம் பிள்ளைதான் நடிக்க வேண்டும் என்று பிடிவாதமாக இருந்து அவரை சம்மதிக்க வைத்து நடிக்க வைத்தார். இந்த படத்தில் எஸ்.பி.எல்.தனலட்சுமி, காளி என்.ரத்னம், என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம் உள்ளிட்ட பலர் நடித்தனர். இந்த படம் வெற்றி பெறவில்லை. தனது இயல்புக்கு சினிமா சரிவராது என்பதை புரிந்து கொண்ட ராஜரத்தினம் பிள்ளையும் அதன்பிறகு நடிக்கவில்லை. முன்னதாக அவர் தியாகராஜ பாகவதர் நடித்த 'திருநீலகண்டர்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து ஒரு பாடலும் பாடி இருந்தது குறிப்பிடத்தக்கது.