வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் | ‛96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி |
சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த 'கங்குவா' திரைப்படம் கடுமையான விமர்சனங்களை சந்தித்தது. அப்படத்தின் முதல் நாள் முதல் காட்சி முடிந்த பிறகு பல யூடியூப் சேனல்கள் தியேட்டர் வளாகங்களில் ரசிகர்களின் கருத்துக்களை பேட்டியாக எடுத்தன. அவற்றில் பல கருத்துக்கள் வரம்பு மீறிய கருத்துக்களாக இருந்ததாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தது.
தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம், தியேட்டர்களில் ரசிகர்களின் கருத்துக்களை யூடியூப் சேனல்கள் எடுப்பதைத் தடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
அதைத் தொடர்ந்து தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் தியேட்டர்களில் யூடியூப் சேனல்கள் இப்படி வீடியோ எடுப்பதை தியேட்டர்காரர்கள் அனுமதிக்கக் கூடாது என்றும் விமர்சனங்கள் தனிப்பட்ட தாக்குதல்களாக இருக்கக் கூடாது என்றும் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
யூடியூப் சேனல்கள்
இது குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துக்கள் பதிவாகி வருகிறது. தியேட்டர்களில் யூடியூப் சேனல்கள் ரசிகர்களின் கருத்துக்களைப் பதிவு செய்வதை தியேட்டர்காரர்கள் நினைத்தால் தடுக்க முடியும். அவர்களது வளாகத்தில் இருந்துதான் யூடியூப் சேனல்கள் வீடியோ எடுக்கிறார்கள். அவர்கள் அனுமதி தர மறுத்தால் இப்படி யாரும் கேமராகவைத் தூக்கிக் கொண்டு வர முடியாது. அடுத்து அவர்கள் தியேட்டர்கள் இருக்கும் சாலைகளில் சென்று பேட்டி எடுத்தால் காவல்துறையினர் பொதுமக்களுக்கு ஊறுவிளைவிக்க முயல்வதாகவும், போக்குவரத்திற்கு சிக்கல் ஏற்படுத்த முயல்வதாகவும் அவர்கள் மீது வழக்கு தொடுக்க முடியும் என சொல்கிறார்கள்.
வியாபாரமயம்
திரையுலகில் நாம் விசாரித்த போது பல தயாரிப்பாளர்களே ஆட்களை 'செட்' செய்து அவர்களது படங்ளைப் பற்றி பாசிட்டிவ்வாக பேச வைத்து வீடியோ எடுக்கச் சொல்வதாகவும் தகவல் கிடைத்துள்ளது. அதற்காக சில யூடியூப் சேனல்களுக்கு சில லட்சங்கள் வரை தருகிறார்களாம். அதில் அந்தப் படத்தின் கதாநாயகர்களின் பங்கும் இருக்கிறது என்கிறார்கள். ஒரு படத்திற்கு அப்படி வருமானம் கிடைப்பதால் சில யூடியூப் சேனல்கள் வேண்டுமென்றே நெகட்டிவ் கருத்துக்களை மட்டும் பதிவு செய்து போடுகிறார்களாம். அதைப் பார்த்து பயப்படும் சில தயாரிப்பாளர்கள், நடிகர்கள்தான் அவர்கள் படங்கள் மீது நம்பிக்கை இல்லாமல் இப்படி பணம் கொடுத்து இதையும் வியாபாரமாக்கி விட்டார்கள் என யூடியூப் சேனலை சேர்ந்த சிலரிடம் விசாரித்த போது தெரிய வந்தது. ஒவ்வொரு வாரமும் இப்படி பல லட்சங்களுக்கு வியாபாரம் நடக்கிறதாம்.
காலம் காலமாக இருக்கும் நாளிதழ்கள், இணையதளங்கள், சில முக்கியமான இணையதளங்கள் மட்டுமே நேர்மையாக இருக்கின்றன. ஆனால், தனிப்பட்ட விதத்தில் யூடியூப் சேனல்களை ஆரம்பித்து நடத்துபவர்கள் இப்படியான வருமானத்திற்கு ஆசைப்படுவதால்தான் புற்றீசல் போல யூடியூப் சேனல்கள் வந்துவிட்டன. அவற்றையும் தயாரிப்பாளர்கள் பத்திரிகையாளர்கள் கணக்கில் தவறாக சேர்த்துக் கொள்வதாக மூத்த பத்திரிகையாளர்கள் பலர் வருத்தப்படுகிறார்கள். நான்கு வாக்கியம் எழுதத் தெரியாத பலரும் தற்போது பத்திரிகையாளர் என்ற போர்வையில் போலியாக நடமாடி வருவதாக அவர்கள் குறைபட்டுக் கொள்கிறார்கள்.
சுமாரான படங்களை எடுக்கும் சில தயாரிப்பாளர்கள் அப்படியான யூடியூப் சேனல்கள், எக்ஸ் தளத்தில் இன்புளுயன்சர்கள் என்ற பெயரில் சில லட்சம் பாலோயர்களை வைத்திருப்பவர்களிடம் சில ஆயிரங்களைத் தந்து தங்கள் படம் பற்றி ஆகா, ஓகோ என்று புகழ வைக்கிறார்களாம். சில எக்ஸ் தள இன்புளூயன்சர்கள் சில தரமற்ற படங்களுக்குக் கூட 5/5. 4/5 , என ரேங்கிங் தருவதை நீங்கள் பார்க்க முடியும் என்கிறார்கள். இப்படி போலியாக ரேங்கிங் வழங்குபவர்களை அடையாளம் கண்டு அவர்களை ரசிகர்கள் புறக்கணிக்க வேண்டும் என்பது அவர்களது கோரிக்கையாக உள்ளது.
வேண்டுமென்றே கிண்டல்
தியேட்டர்களில் ஆடியன்ஸ் கருத்து என எடுக்கப்படும் போது தங்களுக்குப் பிடிக்காத நடிகர்களின் படங்களைப் பற்றி மற்ற நடிகர்களின் ரசிகர்கள் வேண்டுமென்றே கிண்டலடிப்பதை யூடியூப் சேனல்கள் தேடித் தேடி பதிவு செய்வதாகவும் குற்றச்சாட்டுகள் இருக்கிறது.
அது மட்டுமல்ல ஒரு படத்திற்கு நெகட்டிவ் விமர்சனம் செய்தால்தான் அதிக பார்வைகளைப் பெற முடிகிறது என பல யூடியூப் சேனல்களில் வேண்டுமென்றே படங்களைக் கிண்டலடிக்கிறார்கள் என்று படங்களின் இயக்குனர்கள் கருத்தாக உள்ளது.
சினிமா விமர்சனங்களை படம் வெளியான பின் மூன்று நாட்களுக்குப் பிறகு செய்யுங்கள் என இதற்கு முன்பு விஷால் தலைமையிலான தயாரிப்பாளர் சங்கம் செயல்பட்ட போது சொல்லப்பட்டது. ஆனால், அதை யாரும் பின்பற்றவில்லை. தற்போது நடப்பு தயாரிப்பாளர் சங்கம் கடுமையான விமர்சனங்கள் கூடாது, தனி மனிதத் தாக்குதல் கூடாது என்று அறிக்கை மூலம் கேட்டுக் கொண்டுள்ளது.
தயாரிப்பாளர் சங்கம்
திருப்பூர் சுப்பிரமணியத்தின் கோரிக்கையான இரண்டு வாரங்களுக்குப் பிறகே விமர்சனம் என்பதை நடப்பு தயாரிப்பாளர் சங்கம் புறக்கணித்துள்ளது. அதே சமயம் தியேட்டர்களில் ரசிகர்களின் கமெண்ட்டுகளை முற்றிலும் தடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது. இது எப்படி நடக்கப் போகிறது என்பது நாளை வெளியாக உள்ள புதிய படங்கள் மூலம் தெரிந்துவிடும்.
அதே சமயம், அதிக உறுப்பினர்களைக் கொண்டுள்ள தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம் இதில் இன்னும் எந்த கருத்தையும் சொல்லவில்லை. விரைவில் அவர்களின் அறிக்கையும் வரலாம். அதற்குப் பிறகே இந்த விவகாரம் எதை நோக்கிச் செல்லும் என்பது தெரிய வரும்.